அநியாயமாக வட்டி பணம் வாங்குபவர்களும், வயித்தெரிச்சலுடன் அந்த பணத்தை கொடுப்பவர்களும் என்ன அனுபவிக்கிறார்கள் தெரியுமா ??

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமே நம்மிடம் இப்போதெல்லாம் நிலைப்பது இல்லை. என்றைக்கோ செய்த பாவங்கள் கூட தொடர்கதையாய் நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பலரும் என்ன பாவம் செய்தோம்? என்பதை கூட அறியாமல் அதற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை கடமை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொஞ்ச காலம் முன்பு வரை நீங்கள் செய்த பாவத்திற்கான தண்டனையை மறு ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்க வேண்டியது வரும் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாம் பல இடங்களில் பார்க்கிறோம். நம் கண்முன்னே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒருவர் செய்த பாவத்திற்கான தண்டனையை அவர் உடனுக்குடன் பெற்று விடுகிறார். இந்த ஜென்மத்திலேயே அதற்கான கடனும் முடிந்து விடுகிறது.

இதை பலரும் தங்கள் அனுபவங்களில் உணர்ந்திருப்பீர்கள் அல்லது பிறர் கூறக் கேட்டிருப்பீர்கள். நாம் பாவம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து விட்டால் உலகத்தில் பாவங்கள் செய்வது குறைந்து விடும். வழக்குகளும் குறைந்து நீதி நிலை நாட்டப்படும். ஆனால் அதை உணராத பலரும் இன்று தன்னால் முடிந்த வரை ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த ஆட்டம் முடிந்து, போராட்டம் துவங்கும் பொழுது எவ்வளவு புலம்பினாலும் அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. நாம் செய்வது பாவம் தான் என்பதை உணர்வதற்கு இறைவழிபாடு என்பது மிகவும் முக்கியம். அதனால் தான் இறை வழிபாடுகளை தொடர்ந்து மேற்கொள்கின்றவர்கள் மனதில் பக்தியுடன், பயமும் உண்டாகிறது. நீங்கள் அதர்மத்தின் வழியில் சம்பாதித்த பணம் உங்களுக்கு ஆடம்பரத்தை கொடுக்கலாம்.

ஆனால் நிம்மதியை கொடுக்குமா? என்று கேட்டால் நிச்சயம் கொடுக்காது என்பது தான் உண்மை. ஒருவரை ஏமாற்றி வஞ்சித்து நீங்கள் வாங்கும் கூலியானது உங்கள் நிம்மதிக்கு நீங்கள் கொடுக்கும் விலை ஆகும். ஒருவர் மனமுவந்து கொடுத்தால் மட்டுமே அந்தப் பணம் உங்களுக்கு நிம்மதியை தரும்.அப்படி அல்லாமல் நம்ம கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எல்லாம் இப்படி வீணாகப் போகிறதே! என்று மனதில் கவலையை வைத்துக் கொண்டு பணத்தை கொடுத்தால்! அந்த பணம் வாங்குபவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டு பண்ணும். உதாரணத்திற்கு நீங்கள் வாடகை கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் நியாயமான வாடகை கேட்டால் நீங்கள் மனமுவந்து கொடுத்து விடுவீர்கள். ஆனால் அநியாய வாடகை கேட்டால்! வேறு வழி இல்லாமல் கொடுப்பார்களே தவிர உங்கள் மனதில் சஞ்சலம் இல்லாமல் நீங்கள் கொடுக்க மாட்டீர்கள்.

உங்களிடமிருந்து அவர் வாங்கும் இந்த பணமானது அவர்களுக்கு நிச்சயம் நிம்மதியைக் கொடுக்காது. வேறு வழியே இல்லாமல் நான்கு பக்கமும் அடைத்துக் கொண்டு விழி பிதுங்கி நிற்கும் ஒருவரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ளும் பணமானது நிச்சயம் மன சங்கடத்தையும், உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களையும் கொடுக்கும். கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் வாங்குவார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்களால் கொடுக்க முடியவில்லை! ஆனால் அவர்களுக்கு எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்கிற உத்வேகம் இருக்கும். அது போன்றவர்களை கடன் கொடுத்தவர்கள், வசதி வாய்ப்புகள் இருந்தும் ஏளனப் பேச்சுகளையும், அவமானங்களையும் கொடுத்து அவரிடம் இருந்து பெறப்படும் பணம் அவர்களுக்கு நிம்மதியை கொடுக்காது. அவர்கள் எல்லோரும் செல்வ செழிப்புடன் சந்தோஷமாக இருப்பது போல் நமக்கு தெரிந்தாலும் இந்த கர்ம வினை அவர்களை நிம்மதியாக தூங்க விடாது என்பது தான் உண்மை. இதை அனுபவித்தவர்கள் இன்று பலரும் உங்களில் இருக்கலாம். அவர்களுக்கு இதன் உள்ளர்த்தம் நிச்சயம் புரியும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.