அமாவாசை அன்று மாலையில் எலுமிச்சை திருஷ்டி கழித்தால் என்ன நடக்கும் தெரியுமா !! எப்படினு செய்வது என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கோங்க ??

அமாவாசை அன்று கடை வாசல், வியாபார ஸ்தலங்கள், தொழில் செய்யும் இடங்கள், வண்டி, வாகனங்கள், வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் என்று நாம் அன்றாடம் புழங்கும் ஒவ்வொரு இடத்திலும் மாலை வேளையில் திருஷ்டி சுத்தி கழிப்பது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு நடைமுறை செயலாகும். இதை ஏன் செய்கிறார்கள்? எதற்கு செய்கிறார்கள்? என்று தெரியாமல் கூட சிலர் செய்வதுண்டு. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அமாவாசை அன்று திருஷ்டி கழிப்பதால் அந்த இடத்தைச் சுற்றியுள்ள துஷ்ட சக்திகள் முழுவதுமாக அகன்று விடும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை எப்படி முறையாக செய்வது என்பதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்கு தான் இந்த பதிவு! அமாவாசை அன்று சர்வ கோடி லோகங்களில் இருந்தும் நம்முடைய முன்னோர்கள் முதல் தேவர்கள் வரை அத்தனை பேரும் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இது எல்லோரும் அறிந்த ஒன்று தான். மனிதர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் அதற்கு மேற் கூறியவர்கள் துணை புரிவார்கள் என்பது நம்பிக்கை. வீட்டிலிருக்கும் தீய சக்திகள், துர்தேவதைகள், தரித்திரங்கள், எதிர்மறை ஆற்றல்கள் நீங்க எலுமிச்சம் பழத்தை திருஷ்டி சுத்தி போடுவது வழக்கம். பெரிய பெரிய தொழில் நிறுவனங்களில் எலுமிச்சை பழத்துடன், தேங்காய் திருஷ்டி, பூசணிக்காய் திருஷ்டி போன்றவையும் சேர்த்து மதிய வேளையில் சுற்றி போடுவார்கள். இதனால் அந்த நிறுவனங்களில் திருஷ்டிகள் நீங்கி பணம் பெருகும் என்பது ஐதீகம். பணம் அதிகம் புழங்கும் இடங்களில் இயல்பாகவே திருஷ்டிகள், ஏவல்கள் போன்றவை பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருக்கும். அந்த இடங்களில் எல்லாம் இன்றைய நாளில் திருஷ்டி சுத்தி போடுவது அந்த அளவிற்கு பலன்களை தரவல்லது.

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட இந்த நாளில் திருஷ்டி சுத்தி போடுவார்கள். அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம். ஒரு பெரிய எலுமிச்சையை புள்ளிகள் இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். புள்ளிகள் இருக்கின்ற எலுமிச்சைபழம் திருஷ்டிக்கு உகந்தது அல்ல. அதனால் புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை வெட்டிக் கொள்ளுங்கள். அதனுள் குங்குமத்தை நான்கு பக்கமும் தடவிக் கொள்ளுங்கள். நாங்கு கூறாக பிரிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தின் மேல்பாகத்தில் பெரிய கற்பூரம் ஒன்றை வையுங்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார வையுங்கள். இடது கையை வலது கையின் மூட்டுக்கு உட்பக்கம் வைத்துக் கொள்ளுங்கள். வலது கையில் எலுமிச்சை பழத்தை பிடித்துக் கொண்டு கற்பூரத்தை எரிய விட்டு வலமிருந்து மூன்று முறையும், இடமிருந்து மூன்று முறையும், தலையிலிருந்து கால் வரை பெரிதாக சுற்றி எடுக்க வேண்டும்.

அதன் பின் வீட்டின் தலைவாசலுக்கு வெளியே வந்து முழு வீட்டையும் பார்த்து இதே போல் திருஷ்டி கழித்து கற்பூரத்தை நடு வாசலில் போட வேண்டும். கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை நான்காக பிரித்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளிலும் தூக்கி விசிறி அடிக்க வேண்டும். கற்பூரம் அணைவதற்குள் அனைவரும் வீட்டிற்குள் சென்று விட வேண்டும். இதே போல் தான் தொழில் செய்யும் இடங்கள், கடைகள், அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் வாசலில் நின்றபடி திருஷ்டி சுத்தி போட்டு விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு அமாவாசையன்றும் நாம் செய்வதால் எந்த திருஷ்டியும் நம்மை நெருங்க கூட முடியாமல் பாதுகாக்கும் அரணாக இருக்குமாம். மாலையில் சூரியன் மறைந்த பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் கடைகள் அடைக்கும் பொழுது, இரவு தூங்க போகும் பொழுது செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இன்றைய நாளில் இருந்து நீங்களும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இவ்வாறு செய்து திருஷ்டியில் இருந்து பாதுகாத்து கொண்டு, பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்து கொள்ளுங்கள்.