அமுக்குவான் பேய் பற்றி உங்களுக்கு தெரியுமா ?? அதன் அறிவியல் ரீதியான காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள் !!

நாம் தூங்கி கொண்டிருக்கும் பொழுது திடீரென யாரோ நம் மேல் உட்கார்ந்து நம்மை அழுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது இந்த பேயின் வேலையாகும். இந்த உணர்வை இதைப் படிக்கும் போதே பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைவுக்கு கொண்டு வரலாம். கருப்பாக ஆவி போன்ற ஒரு உருவம் நம்மை நோக்கி வந்து, நம் மீது அமர்ந்து நம்மை பலமாக அழுத்தும். ஓரிரு வினாடிகள் நம்மால் எதையுமே செய்ய முடியாமல் அசைவின்றி கிடப்போம். அப்போது நாம் விழித்திருப்போம். சுற்றி என்ன நடந்தாலும் நமக்கு தெரியும். ஆனால் எழுந்து பார்த்தால் அது கனவு போல் தோன்றும்.

உண்மையில் இந்த பேய் எதற்காக இப்படி செய்கிறது? இதற்கு அறிவியல் காரணங்கள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இரவில் நம்மை ஒருவர் அமுக்குவது அல்லது கட்டிப் போட்டது போன்ற ஒரு உணர்வைத் தருவது நமக்கு பயமாக இருக்கும். அதை பேயோ, பிசாசோ என்று நாம் நினைத்து விடுவோம். அதை அமுக்குவான் பேய் அல்லது பிசாசு என்பார்கள். இந்த அமுக்குவான் பேய் உண்மையில் பேய் தானா அல்லது நமது கற்பனையா? என்ற கேள்விகளும் நம்முள்ளே எழும். இதை நீங்கள் உணராவிட்டாலும் யாராவது சொல்ல நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்போது நீங்கள் அதை நம்பாவிட்டாலும் இப்போது இதை படிக்கும் பொழுது அவர் அன்று அப்படி சொன்னாரே அது உண்மை தானா என்பது போல் இப்போது உங்கள் ஞாபகத்திற்கு வரும். இப்படியாக அந்த பேய் நம்மை அமுக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன.

நீங்கள் தூங்கும் அந்த அறையில் ஆக்சிஜன் அளவு கம்மியாக இருக்கலாம். ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருக்கலாம், அல்லது ஜன்னலே இல்லாமல் இருக்கலாம், ஏசி அறைக்குள் இது போன்று நிகழ்வதும் உண்டு. நீங்கள் தூங்கும் அறை நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு குறைவதால் உடல் தசைகளில் ரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். அதுவும் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நமது தசைகள் விழிப்பாக இல்லாமல் தளர்வுடன் இருக்கும். அப்படி தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது மூளை மட்டும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் என்ன ஆகும் என்றால், மூளை இடும் கட்டளையை தசைகள் ஏற்காது. நாம் அசைய நினைத்தாலும் நம்மால் அசைய முடியாமல் போவதற்கு இதுவே காரணம்.

இது போல் நிகழ்வதற்கு பெரும்பாலும் அந்த நபர் மன இறுக்கத்தில் இருப்பதும், பயந்து கொண்டே தூங்க செல்வதும் காரணமாக இருக்குமாம். இதற்கு அறிவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் மனிதர்களுக்கு பத்தில் நான்கு பேருக்கு இது போன்று நடக்கிறது. இது பேயோ அல்லது பிசாசோ கிடையாது. தூங்கும் பொழுது ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பக்கவாதம் போன்ற ஒரு நிகழ்வாக இது இருக்கும். சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள் வரை நீடிக்கும். பின்னர் தானாகவே சரியாகிவிடும். இது போன்ற நிகழ்வு ஒரு மனிதருக்கு எப்போவாவது நிகழ்ந்தால் பரவாயில்லை. அடிக்கடி நிகழ்ந்தால் மருத்துவரை நாடுவது நல்லது. இதிலிருந்து நமக்கு தெரிய வருவது அமானுஷ்ய நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் அறிவியலும் ஒளிந்து கொண்டிருக்கிறது.