ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய இந்த அற்புதமான 3 பிரதோஷத்தை யாரும் தவறவிடாதீர்கள் !! வீட்டிலிருந்தபடியே பிரதோஷ வழிபாட்டை எப்படி செய்வது ??

நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து, பல இடர்ப்பாடுகளை சந்தித்து வந்தாலும், இறைவன் நம்மோடு தான் இருக்கின்றான் என்பதை உணர்த்துவதற்கு, நம்முடைய துயரங்களைப் போக்குவதற்கு, சில சம்பவங்களை நடத்தி கொண்டுதான் இருக்கின்றான். அந்த வரிசையில், இந்த ஆகஸ்ட் மாதம், எந்த வருடத்திலும் இல்லாத அபூர்வமான 3 பிரதோஷ தினம் நமக்கு கிடைத்திருக்கின்றது. பொதுவாக மாதத்திற்கு இரண்டு பிரதோஷம் தானே வரும்! கிடைப்பதற்கு அரிய இந்த 3 பிரதேசத்தையும் நாம் எக்காரணத்தைக் கொண்டும் தவறவிட்டு விடக்கூடாது. நம்மால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், இந்த 3 பிரதோஷ தினத்தை, நம் வீட்டில் இருந்தபடியே எப்படி வழிபாடு செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 1.8.2021 அன்று, முதல் பிரதோஷம் சனி பிரதோஷம். 16.8.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆதிவார பிரதோஷ தினம்.

மீண்டும், 30.8.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆதிவார பிரதோஷம். இப்படியாக ஒரே மாதத்தில் மூன்று பிரதோஷங்கள் வருகிறது. இந்தப் பிரதோஷ வழிபாட்டை தவறவிடாமல் செய்தால், தீராத துன்பங்களும் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. திருமணத்தடை நீங்கும், கடன் பிரச்சனை, சொத்து பிரச்சனை, குழந்தை வரம், கல்வியில் சிறக்க, தீராத நோய் தீர, மனக்குழப்பம் நீங்க, சிலவகையான தோஷங்கள் நிவர்த்தியாக, இப்படி எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு நல்ல விடிவு காலம் பிறக்க, இந்த மூன்று பிரதோஷ வழி பாட்டையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இருந்தால், அந்த லிங்கத்திற்கு பிரதோஷ நேரமான 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் பால் அபிஷேகம் செய்து, அதன் பின்பாக லிங்கத்திற்கு சந்தனமும் குங்குமமும் இட்டு, பூக்களாலும், வில்வ இலைகளாலும் அலங்காரம் செய்து, பஞ்சாமிர்த நெய்வேத்தியம் வைத்து, 11 முறை ‘ஓம் நம சிவாய’ மந்திரத்தை சொல்லி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, தீப ஆராதனை காட்டி வீட்டிலேயே பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ளலாம். (சிவலிங்கம் வைத்திருப்பவர்கள் வீட்டில், கட்டாயம் நந்திதேவரும் இருப்பார்.

சிவனுக்கு என்ன அபிஷேக ஆராதனைகளை செய்கிறீர்களோ, அதேபோல் நந்தி தேவரையும் வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.) உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இல்லை என்றாலும் பரவாயில்லை. மஞ்சளினால் சிவலிங்கத்தை பிடித்து வைத்து, பூஜை செய்யலாம். அல்லது சந்தனத்தாலும் சிவலிங்கத்தை பிடித்து வைத்து பூஜை செய்யலாம். சிவலிங்கத்தை பிடித்து வைக்கும் போது, கட்டாயம் நந்திதேவரையும் மஞ்சளினால் அல்லது சந்தனத்தால் பிடித்து வைக்க வேண்டும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இப்படியாக, மஞ்சளில் பிடித்த சிவலிங்கத்தை வெற்றிலையின் மீது வைத்து, அதற்கு குங்குமப்பொட்டு வைத்து, பூக்களால், வில்வ இலைகளால் அலங்காரம் செய்து, உங்களது வழிபாட்டை செய்யலாம். இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் மட்டும் உங்களால் செய்ய முடியாது. அது பரவாயில்லை! வீட்டில் சிவலிங்கம் இருந்தாலும், சிவலிங்கம் இல்லை என்றாலும் மனநிறைவான வழிபாடு முக்கியம் என்பதை இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டும். இவை எதையுமே எங்களால் செய்ய முடியாது என்று சொல்பவர்கள், உங்கள் வீட்டில் ஒரே ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து, தீபச்சுடரை சிவலிங்கமாக பாவித்து, மனதார சிவபெருமானை நினைத்து, இந்த பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்தாலும், பிரதோஷத்தின் பலனையும், சிவபெருமானின் ஆசியையும் கட்டாயம் நம்மால் முழுமையாக பெற முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.