ஆடி மாதம் வேப்பிலை தட்டு எப்படி செய்வது ?? அதில் என்ன செய்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் ??

ஆடி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாக மக்களிடையே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முழுவதும் நீங்கள் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் நிச்சயமாக பலிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆடி மாதத்தில் வெள்ளிக் கிழமை, திங்கட் கிழமை, செவ்வாய்க் கிழமை பூஜையின் பொழுது வேப்பிலை தட்டை வைத்து நீங்கள் இப்படி வழிபாடு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. அந்த வழிபாட்டை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஆடி மாத வழிபாடுகளில் எண்ணற்ற முறைகள் இருந்தாலும் வேப்பிலை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.

வேப்பிலை இல்லாமல் ஆடியும் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு வேப்பிலை இந்த மாதம் மகத்துவம் வாய்ந்தது. ஆடி மாதம் முழுவதும் உங்கள் இல்லத்தில் மஞ்சள் தண்ணீர் தெளிப்பது மற்றும் வேப்பிலையை நிலை வாசல்படியில் சொருகி வைப்பதும் அம்மன் அருள் கிடைக்க வழிவகை செய்யும். வேப்பிலையை மாலையாகவோ அல்லது தோரணங்களாகவோ வாசல்படியில் தொங்க விடுவது மிகச்சிறந்த பலன்களை உங்களுக்கு நல்கும். உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை, தொழில் பிரச்சனை போன்ற பணம் சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, வேப்பிலை வழிபாட்டை மேற்கொண்டால் அம்மன் மனம் குளிர்ந்து உங்களுக்கு வரங்களை வாரி வழங்குவாள் என்று கூறுவார்கள். செவ்வாய், வெள்ளி அல்லது நீங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கூழ் ஊற்றும் பொழுது இந்த வழிபாட்டை செய்யலாம்.

மிகவும் சுலபமான இந்த வழிபாட்டை இந்த நாட்களில் நீங்கள் செய்வதால் உங்கள் பண கஷ்டம் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும். அந்த கிழமைகளில் எப்பொழுதும் நீங்கள் செய்யும் பூஜைகளை செய்யும் பொழுது ஒரு பெரிய தாம்பூல தட்டில் முழுக்க வேப்பிலைகளை பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தான் வேப்பிலை தட்டு என்பார்கள். தட்டின் மீது 9 அகல் விளக்குகளை மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு வைக்க வேண்டும். தட்டை சுற்றிலும் மலர்களால் அல்லது உதிரி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து, தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதற்கு பக்கத்தில் சிறிய பித்தளை அல்லது செம்பு கிண்ணத்தில் மஞ்சள் கரைத்த தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வேப்பிலை வழிபாட்டிற்கு நல்லெண்ணெய் தான் ஊற்ற வேண்டும்.

நல்லெண்ணெய்யில் ஏற்றப்படும் அகல் விளக்கு தீபமானது, குடும்பத்தில் இருக்கும் இருள் சூழ்ந்த பிரச்சனைகளை பஸ்பமாக்கி, மகிழ்ச்சி என்னும் ஒளியை ஏற்றி வைக்கும். இது போல் செய்து விட்டு அம்மன் மந்திரங்கள் அல்லது அம்மன் போற்றி 108 முறை உச்சரிக்கலாம். அதன் பிறகு நீங்கள் கூழ் காய்ச்சி வழக்கமான முறைகளை பின்பற்றலாம். இந்த நாளில் உங்களால் முடித்தவர்களுக்கு அன்ன தானம் அளிப்பது மிகச் சிறந்த பலனை தரும். ஒருவேளை இயலாதவர்களுக்கு உணவு தானம் அளித்தால் உங்களுக்கு சகல சம்பத்துகளும் வாழ்க்கையில் கிட்டும். கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் இந்த வேப்பிலை தட்டு வழிபாட்டை கோவிலில் வைத்தும் செய்யலாம். அது இன்னும் சிறப்பான பலன்களை தரும். அம்பாள் சந்நிதியின் முன் வேப்பிலைத் தட்டில் 9 அகல் விளக்குகள் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நேரடியாக உங்களுக்கு அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிட்டும். மண் அகல் தீப ஜோதியில் மகாலட்சுமி வாசம் செய்வதால் மற்ற தீபங்களை காட்டிலும் அகல் தீபத்தில் விளக்கேற்றுவது பெறற்கரிய பேற்றை உங்களுக்கு பெற்றுத் தரும்.