ஆண்கள் செய்யும் புண்ணியத்தில் பாதி மட்டுமே அவர்களுக்கு சேரும்!! மீதி எல்லாம் புண்ணியமமும் யாருக்கு ??

சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது வேத வாக்கு. இவை எல்லா குடும்பத்திலும் நிச்சயம் பொருந்தும். பொருந்த வேண்டும் அப்போது தான் அந்த குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். நீ இன்றி நான் இல்லை என்ற கருத்தை முன்னிறுத்தி திருமண பந்தத்தில் இணைகிறார்கள். அதை கடைசி வரை கஷ்டப்பட்டாவது காப்பாற்ற வேண்டியது இருவரின் கடமை. ஒரு ஆணுக்கு கண்டம் என்றால் அதை அந்த மனைவியால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்கிறது வேதம். ஒரு ஆண் செய்யும் புண்ணியத்தில் பாதி மட்டும் தான் அவனை சேருமாம். எனில் மீதி யாருக்கு போய் சேரும்? என்கிற கேள்வி வருகிறது அல்லவா? அதை இந்த பதிவின் மூலம் தீர்த்துக் கொள்வோம் வாருங்கள். அதற்கு முன்னால் ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். திருமணமான ஒரு பெண் எந்த அளவிற்கு பொறுமையை கடைப்பிடிக்கிறார் என்பதைப் பொறுத்தே அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது. உடனே பெண் தான் பொறுமையாக இருக்க வேண்டுமா? ஆணுக்கு அந்த பொறுப்பு இல்லையா?

என்று வம்புக்கு வராதீர்கள். அந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். பெண்களுக்கு வீட்டில் இருக்கும் வேலைகளை தவிர, பெரிதாக அவர்கள் ஊழியத்திற்கு வேலைக்கு போக மாட்டார்கள். அதனால் உண்டான பழமொழி தான் இது. எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து, ஊதியம் கொண்டு வரும் கணவனை பொறுத்துப் போக சொல்ல முடியாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இருவரும் சரிசமமாக வேலை செய்கின்றனர். ஆணை விட பெண்ணே இரு பொறுப்புகளையும் சேர்த்து சுமக்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க இப்போது ஆணும் பெண்ணும் எந்த அளவிற்கு பொறுமையை கடைப்பிடிக்கிறார்கள் என்பதை பொருத்தே அமையும். ஆணைவிட பெண்ணுக்கு மனவலிமை அதிகம் என்பார்கள். அதனால் தான் அவளால் அத்தனை பேரையும் சமாளித்து என்ன பேசினாலும் அதைத் தாங்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் இருக்க முடிகிறது. பெண்களிடம் மன அமைதியும், தெய்வ நம்பிக்கையும் அதிகமாக இருந்தால் அந்த இடத்தில் சனீஸ்வர பகவான் வந்தாலும் இங்கே இடமில்லை என்று திரும்பி சென்று விடுவாராம். போகும் போது அப்படியே செல்ல மாட்டார். வரங்களை வாரி வழங்கி விட்டு தான் செல்வாராம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் நம்மை உதாசீனப்படுத்துகிறார், அவமானப்படுத்துகிறார் என்றால் உடனே பொங்கி எழ வேண்டிய அவசியமில்லை. அப்படி என்றால் நாங்கள் என்ன ஜடமா? எங்களுக்கு எல்லாம் கோபமே வரக்கூடாதா? என்று விதண்டாவாதம் செய்யாதீர்கள். இதை உங்களுக்கு செய்வது உங்கள் கணவரோ, அல்லது மாமியாராகவோ, கணவரின் குடும்பத்தார் யாராக இருந்தாலும் நீங்கள் பொறுமையுடன் இருந்தால் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக எப்போதும் இருக்கும். உங்களுக்கு வேண்டிய வரங்களை இறைவன் கேட்காமலேயே வாரி வழங்குவார் என்பதை சாஸ்திரம் ஆணித்தரமாக கூறுகிறது. பதிலுக்கு பதில் சண்டையிட்டால் நீங்கள் மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தில் இருக்கும் யாரும் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்பது தான் உண்மை. இதற்கும் ஆண்களின் புண்ணியத்திற்கு என்ன சம்பந்தம்? என்று மனதில் நினைப்பது புரிகிறது. சம்பந்தம் இருக்கிறது. ஒரு பெண் பாவம் செய்தால் அந்தப் பாவத்தில் பாதி பங்கு அவளுடைய கணவனை சேரும். அதுவே ஒரு ஆண் பாவம் செய்தால் அது அந்த ஆணையை மட்டுமே சேரும். இந்த இடத்தில் ஒரு ஆண் புண்ணியம் செய்தால் அதில் அவன் மனைவியின் பங்கும் அதிகம் இருக்கும். அதனால் தான் ஒரு ஆண் செய்த புண்ணியத்தில் பாதி பங்கு அவன் மனைவியை தான் சென்றடையும் என்பது விதி. அதுவே ஒரு பெண் புண்ணியம் செய்தால் அதில் அவளுடைய பங்கு தான் அதிகம் இருக்கும் அதனால் முழு புண்ணியமும் அவளையே சேரும். இதை ஆழ்ந்து யோசித்தால் உண்மை என்பது நிச்சயம் எல்லோருக்கும் விளங்கும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.