இதுநாள் வரைக்கும் ஒரு பூ கூட பூக்காத மல்லிகை செடி கூட தாறுமாறா பூப்பூக்கும் !! இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணீங்கன்னா !!

நம் வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளாக இருந்தாலும், காய்கறி செடிகளாக இருந்தாலும், பழச்செடிகளாக இருந்தாலும் சரி, பூத்து, காய்த்து, கனிந்து, குலுங்கினால் தான் அந்த செடிகளுக்கு அழகு. பூக்காமல், காய்க்காமல், செழிப்பாக வளர்ந்தாலும், அந்த செடிகளைப் பார்க்கும்போது நமக்கு சின்ன மன வருத்தம் இருக்கத்தான் செய்யும். அந்த வரிசையில் உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிகைப் பூ செடி சீசனில் கூட பூக்கவில்லையா? உங்களுக்காகவே இந்த பதிவு. இந்த சின்ன சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணாலே போதும். இதுவரைக்கும் பூக்காத செடி, கொத்து கொத்தாக பூத்து குலுங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதலில் மல்லிகை பூச்செடியானது நிழலில் இருக்கக்கூடாது. நன்றாக வெயில் படும் இடத்தில் இருந்தால், அதில் அதிகப்படியான பூப்பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பால்கனியில் மல்லிகை பூ செடி தொட்டி இருந்தாலும், அந்தச் செடி சிறிது நேரம், சூரிய வெளிச்சத்தில் நேரடியாக கட்டாயம் இருக்க வேண்டும். காலையில் அல்லது மாலையில் இந்த இரண்டு வேலைகளில் ஒருமுறையாவது உங்கள் செடியை, வெயிலில் வைக்க வேண்டும். இரண்டாவதாக, மல்லிகை பூச்செடியாக இருந்தாலும், ரோஜா பூச்செடியாக இருந்தாலும், பூக்களே பூக்காமல் சில கிளைகள் நீண்டு வளர ஆரம்பிக்கும். குறிப்பாக ரோஜா செடிகளில் ஏழு இலைகள் கொண்ட கிளைகள் இப்படி வளர்வது வழக்கம். அதை எல்லாம் விட்டு விடுவோம் அல்லவா? அதேபோல் மல்லிகைப் பூ செடியிலும், பூ பூக்காமல், கிளைகள் உயரமாக வளர்ந்தால் அதை வெட்டி விட்டு விடுங்கள். செடிகளில் இருக்கக்கூடிய சத்தை தேவையில்லாமல் அந்த கிளை உறிஞ்சும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, மல்லிகைப்பூவை பரித்த பின்பு, அதற்கு கீழே சிறிய காம்பு இருக்கும் அல்லவா? மேலே படத்தில் பாருங்கள். பூக்களை பறித்து பின்பு, அந்த கப் வடிவத்தில் காம்பு இருக்கும். அதையும் சேர்த்து வெட்டு விட்டீர்கள் என்றால், அந்த இடத்தில் சீக்கிரமாகவே மற்றொரு கிளை தழைத்து, அதில் சீக்கிரமாகவே பூ பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அரும்பை வெட்டவில்லை என்றாலும், பூ பூக்கும். கொஞ்சம் தாமதம் எடுக்கும். நான்காவதாக, மல்லிகைப்பூச் செடிகளுக்கு வெங்காய தோல் உரம் மிகவும் முக்கியமானது. இரண்டு கைப்பிடி அளவு, வெங்காயத் தோலை, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அந்த டப்பாவிற்கு மூடிபோட்டு, மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை ஊற வைத்து, அதன் பின் அந்தத் தண்ணீரை வடிகட்டி, ஒரு லிட்டர் அளவு நல்ல தண்ணீரோடு கலந்து செடிகளின் வேர் பகுதிகளிலும், செடிகளின் இலை, கிளை பகுதிகளிலும் ஸ்ப்ரே செய்து விட்டீர்கள் என்றால், செடி நன்றாக வளரும் நிறைய பூ பூக்கும்.

இதேபோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோலின், சத்து மல்லிகை பூச்செடிகளுக்கு அவசியம் தேவை. எலுமிச்சை பழ தோல்களையும், ஆரஞ்சு பழ தோல்களையும் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, 5 நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு லிட்டர் நல்ல தண்ணீரோடு கலந்து, அதன் பின்பாக உங்கள் செடிகளுக்கு ஸ்பிரே செய்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தண்ணீரை தாராளமாக சிறிய கப் அளவு வேர் பகுதிகளில் ஊற்றலாம். வாரம் ஒருமுறை வெங்காயத் தோல் தண்ணீரை ஊற்றுங்கள். வாரம் ஒருமுறை ஆரஞ்சு பழத்தோல் தண்ணீரை ஊற்றுங்கள். இப்படி சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றினாலே பூ பூக்காத மல்லிகை செடி கூட செழிப்பாக பூத்துக்குலுங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.