இந்த உலகத்திற்கே ஒளி வீசக்கூடிய சந்திர பகவான் நம் வாழ்விலும் ஒளி வீச நாளை என்ன செய்ய வேண்டும் ?? தெரிந்து கொள்ளுங்கள் !!

இந்த பூலோகம் இருண்டு விடாமல் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் சந்திர பகவான் நம்முடைய ஜாதகத்திலும் நம் எதிர்காலத்தை கணிக்க தலைமை ஏற்கிறார். அவரை வணங்கினால் நம் வாழ்விலும் ஒளி வீசும் என்பது ஐதீகம். பௌர்ணமி என்றாலே இந்த பிரபஞ்சம் முழுவதும் புத்துணர்வு பெறும் நன்னாளாக இருக்கிறது. இந்த நாளில் பிரபஞ்சத்தில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாக பௌர்ணமி தினம் இருந்து வருகிறது. அவ்வகையில் நாளை அக்டோபர் 1, 2020 அன்று வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் நாம் என்ன செய்தால் நம்முடைய வாழ்வு பிரகாசிக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானையும், சந்திரன் அம்பாளின் அம்சம் என்பதால் துர்க்கை வழிபாடும் மேற்கொள்வது வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் நமக்கு அள்ளித்தரும்.

நவகிரகங்களில் சந்திர பகவான் மிகவும் சாந்தமானவர். மனோ பலம் அதிகரிக்க சந்திர பகவானை வணங்குவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். சந்திர பகவானை வழிபடும் பொழுது அவருடைய காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது, அதுவும் பவுர்ணமி அன்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் சந்திர தோஷம் நீங்கும். சந்திரனால் ஏற்படக் கூடிய அத்தனை பாதிப்புகளும் குறையும். மேலும் அழகு மற்றும் இளமையான, பொலிவான தோற்றம் பெறலாம். கண்கள் பிரகாசமடையும்.சந்திர பகவான் காயத்ரி மந்திரம் இதோ உங்களுக்காக: ஓம் பத்மத்வஜாய வித்மஹே! ஹேம ரூபாய தீமஹி! தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்!! பௌர்ணமி அன்று அதாவது நாளை கோவில்களுக்கு சென்று நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ளலாம். நவகிரகங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்ய கோடி பலன்கள் கிடைக்கும்.

உங்களுடைய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். நல்ல சிந்தனைகளும், தெளிவான செயல் ஆற்றலும் உண்டாகும். குறிக்கோள் கொண்டு செயல்படுபவர்களுக்கு சந்திர பகவானின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம். உங்கள் இலக்கை அடைய நாளை பௌர்ணமி தினத்தில் சந்திர வழிபாடு மேற்கொள்ளுங்கள்.மேலும் சந்திரன் அம்பாளின் அம்சமாக கருதப்படுவதால் துர்க்கை அம்மனுக்கு சிகப்பு வர்ண வஸ்திரம் சாற்றி, செவ்வரளி அல்லது சிகப்பு வர்ண மலர்களால் அர்ச்சனை செய்ய தடைகள் யாவும் விலகும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் இது போல் துர்க்கை அம்மனை வழிபட்டு பின்னர் எடுப்பதே சிறப்பான பலன் தரும். பொதுவாக வெட்டவெளியில் அமர்ந்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். ஆனால் பௌர்ணமி தினத்தில் நிலாச் சோறு சாப்பிடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நாளைய தினத்தில் குடும்பத்தோடு மொட்டை மாடியில் முழு நிலவு தெரியும் நேரத்தில் ஒன்றாக கூடி அமர்ந்து உணவு அருந்துவது குடும்பத்திற்கும், உங்கள் மனதிற்கும் மிகவும் நல்லது. ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள். நேரமில்லை என்று ஓடிக் கொண்டிருப்பவர்கள் அன்று ஒரு நாளாவது ஒன்றாகக் கூடி நிலா வெளிச்சத்தில் உணவு அருந்துவது என்பது வாழ்நாளில் குறிப்பிட்ட நாட்களாக நிச்சயம் மாறக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. பவுர்ணமி அன்று உங்களால் முடிந்த அளவிற்கு யாராவது ஒருவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் நீங்கள் செய்த பாவங்கள் தீரும். கோடி புண்ணியம் வந்து சேரும் என்பார்கள். இது போன்று நல்ல நாட்களில் மட்டுமாவது சுயநலம் பார்க்காமல் மற்றவர்களின் பசி தீர, வலி தீர உதவி செய்தால் நிச்சயமாக உங்களுக்கு வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.