இந்த தானத்தை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராது !! எந்த பிரச்சனைக்கு எந்த தானத்தை செய்தால் உடனடி தீர்வு கிடைக்கம் தெரியுமா !!

தானம் செய்வது புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்கு தான். நம்மால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு தானம் செய்தால் வாழும் காலத்திலேயே நம்மால் சொர்க்கத்தை பார்க்க முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. நம்மிடம் எவ்வளவு இருந்தாலும் நமக்கு அது போதவில்லை என்று நினைப்பது ஆகச்சிறந்த அறிவீனம் என்று தான் கூற வேண்டும். போகும் போது உங்கள் நெற்றியில் வைக்கும் ஒரு ரூபாய் கூட உங்களுக்கு சொந்தம் இல்லை என்று கூறுவார்கள். அப்படி இருக்கும் பொழுது எதை நோக்கிய பயணத்தில் ஆசையை அலைபாய விட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தபெருமான் கூறி சென்றதை நாம் கேட்டிருப்போம். அதனால் ஆசையை தூக்கி எறிந்து விட்டு இருப்பதே போதும் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது தான் நல்லது. நாம் ஒரு சில பிரச்சினைகளில் இருக்கும் பொழுது இந்த சில பொருட்களை தானம் செய்வதன் மூலம் நம் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். அப்படியான பொருட்கள் என்ன?

என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அன்னதானம் செய்வதற்கு நேரமும் கிடையாது, காலமும் கிடையாது. எப்போது நினைத்தாலும் நீங்கள் தாராளமாக செய்யலாம். பெண்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்க, மங்கலம் உண்டாக, தாலி பாக்கியம் நிலைக்க ‘மஞ்சள் தானம்’ செய்யலாம். தீராத நோய் தீர நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு துணிமணிகள் வாங்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் அவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது நல்ல பலன் தரும். வஸ்திர தானம் சகல ரோகத்தையும் நிவர்த்தி செய்யும் என்பது ஐதீகம். யாருக்காவது தீங்கு செய்து விட்டீர்கள் அல்லது பாவம் செய்து விட்டீர்கள் அதனால் மனதார நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் உங்களால் முடிந்தவர்களுக்கு கருப்பு எள்ளு தானமாக வழங்கி வாருங்கள். எள்ளு தானம் செய்வதால் பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது நியதி. நீங்கள் தவறு செய்வதற்கு சனி பகவான் ஒரு விதத்தில் காரணம். அதற்காக எள்ளு தானம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு சில நேரத்தில் என்ன தான் நாம் முயற்சி செய்தாலும் துக்கத்தில் இருந்து மீள முடியாமல் போகும். மேலும் குல விருத்தி உண்டாவதற்கு பிரார்த்தனை செய்பவர்கள் உங்களால் முடிந்தவர்களுக்கு வெல்லம் தானம் செய்து வாருங்கள். இதை எப்போது செய்ய வேண்டும் என்கிற கேள்வி எல்லாம் தேவையே இல்லை. தானம் செய்ய நேரம், காலம் பார்க்க தேவையில்லை. உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது செய்தால் போதும். அது போல் ஒரு சிலர் குரல் வளம் சிறக்க விரும்புவார்கள். அவருடைய குரல் சரியில்லாமல் இருக்கலாம், குரலால் சில பிரச்சினைகளை அனுபவித்திருக்கலாம், அல்லது பாட்டு பாட வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம் அது போன்றவர்கள் சுத்தமான தேன் தானம் செய்யுங்கள். பித்ரு தோஷம் அதாவது நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய சாபத்தை நீக்க கோ தானம் செய்வது வழக்கம். தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய தாய் தந்தையர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர்கள் வயிற்றெரிச்சல் உடன் சாபம் கொடுத்து இருப்பார்கள். அதனால் நம்முடைய வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகளை அனுபவிப்போம்.

அதற்குரிய பரிகாரமாக கோ தானம் வழங்கலாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் ஏதாவது குழப்பத்துடன், சங்கத்துடன் காணப்பட்டால் சிறிதும் சிந்திக்காமல் உங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு சொம்பு தண்ணீர் மட்டும் கொடுங்கள். தண்ணீர் தானம் மனசாந்தி ஏற்படுத்தும் என்பது ஐதீகம். வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாலே உங்களது மனம் நிம்மதி அடையும். அதனால் தான் நம் முன்னோர்கள் தண்ணீர் கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வைத்தார்கள். இரவு தூங்கும் பொழுது கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தாலோ, தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உங்களால் முடிந்தவர்களுக்கு குறைந்தது இரண்டு பேருக்காவது கம்பளி போர்வையை தானமாக வழங்குங்கள். சாலையோரங்களில் போர்வை கூட இல்லாமல் இருப்பவர்களுக்கு கம்பளி தானம் செய்யுங்கள் உங்களின் இந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். வம்ச விருத்தி ஏற்பட விதைகளை தானம் செய்யுங்கள். குழந்தை இல்லாதவர்கள் விதை தானம் செய்து பாருங்கள். நிச்சயம் விரைவாகவே பிள்ளை வரம் கிடைக்கும். மேலும் வெள்ளி, தங்கம், பூமி என்ற விலை உயர்ந்த விஷயங்களை தானமாக வழங்குவதற்கு போதிய சக்தி இருப்பவர்கள் தானமாக வழங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர் அவர்களுக்கு என்ன முடியுமோ அவற்றை தானம் செய்து அதற்குரிய பலனை பெற்றுக் கொள்ளலாம்.