இந்த பொருட்களை எல்லாம் உங்கள் வீட்டு வாசலில்,இப்படி வைத்திவிட்டு அதிர்ஷ்டம் வரும் என்று நினைத்து, காத்திருந்தால் அதிர்ஷ்டத்திற்கு பதிலாக துரதிஷ்டம் தான் வரும் !!

நம்முடைய வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வர வேண்டும் என்று, நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கவனக் குறைவாக, நாம் செய்யக் கூடிய நல்ல காரியங்கள் கூட, சில சமயங்களில் நமக்கு எதிர்மறை ஆற்றலை உண்டு பண்ணி விடும். அந்த வரிசையில் நம்முடைய நில வாசப் படியில், நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் என்ன? அதை எப்படி திருத்திக் கொள்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதேபோல் ஒருவருடைய வீட்டிற்கு, நேர் எதிராக கோவிலின் வாசல் இருக்கக்கூடாது என்றும், கோவில் கோபுரத்தின் நிழலோ அல்லது கோவில் கொடி மரத்தின் நிழலும் கட்டாயம் நம்முடைய வீட்டின் மேல் விழக்கூடாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் இறுதியில் சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஒருவருடைய வீட்டு நில வாசப்படியில், வாசல் தெளித்து கோலம் போடும் சமயத்திலும் சரி, மழைபெய்யும் சமயத்திலும் சரி, எக்காரணத்தைக் கொண்டும் அந்தத் தண்ணீரானது வாசலில் தேங்கி நிற்கக்கூடாது.

இது ஆன்மீக ரீதியாகவும் தவறு என்று சொல்லப்பட்டுள்ளது. ஆரோக்கிய ரீதியாகவும் தவறு என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வாசல் பகுதி பள்ளமாக இருந்தால், அங்கு கொஞ்சம் மணலைக் கொண்டு வந்து கொட்டி, அதை சமம் செய்து விடுங்கள். அடுத்தபடியாக நம்முடைய நில வாசப்படியில் வைக்கக்கூடிய சுவஸ்திக் சின்னம், ஓம் சின்னம், வேல், ஸ்வாமியின் திருவுருவப் படங்கள், அல்லது குதிரைலாடம் இப்படியாக பணவரவிற்கு, நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கு எந்த ஒரு பொருளை வைப்பதிலும் தவறு கிடையாது. இருப்பினும் அந்த பொருளை உங்களால் பராமரிக்க முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பொருட்களை உங்களுடைய நில வாசப்படியில் வைத்தால், தினந்தோறும் அதை சுத்தப்படுத்தி, வீட்டில் தீபம் ஏற்றும் போது இப்படிப்பட்ட மங்களகரமான பொருட்களுக்கும் தூபம் காட்ட வேண்டும்.

லட்சுமி கடாட்சம் வர வேண்டும் என்று இந்த பொருட்களெல்லாம் வைத்துவிட்டு, அதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் நேர்மறை ஆற்றலுக்கு பதிலாக, எதிர்மறை விளைவுகள் நமக்கு அதிகமாக வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் தான் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் நிறைய செடி கொடிகளை நம் வீட்டின் முன்பு வளர்க்கலாம் என்று சொல்லப்படுகின்றது. அதுவும் தவறு கிடையாது. ஆனால் அந்த செடி கொடிகளை, நீங்கள் வளர்க்கும் பட்சத்தில் அதை முறையாக பராமரித்து வர வேண்டும். அந்த செடிகள் வாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. செடிகள் வாடினாலும், பட்டு போனாலும் உடனடியாக அதை அந்த இடத்தில் இருந்து அகற்றி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதற்காக சொல்லக்கூடிய விஷயங்களை, உங்களால் வாழ்நாள் முழுவதும் பராமரித்து வர முடியும் என்றால் மட்டுமே அதை நீங்கள் செய்ய வேண்டும்.

அதை விட்டுவிட்டு, பரிகாரங்களை செய்த பின்புதான், கஷ்டம் அதிகப்படியாக வருகின்றது என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை. உங்களுக்கு நேரமின்மை காரணமாக இப்படிப்பட்ட வேலைகளில் எல்லாம் உங்களால் கவனம் செலுத்த முடியாது என்றால், இப்படிப்பட்ட விஷயங்களை செய்யாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. அடுத்தபடியாக, கோவிலின் நிழல் உங்கள் வீட்டின் மேல் விழுந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பார்த்து விடலாம். பொதுவாகவே, ஒரு கோவிலின் நிழலோ அந்த கொடிக்கம்பத்தின் நிழலோ, ஒரு வீட்டின் மேல் விழும் பட்சத்தில், அந்த வீட்டிற்கு கட்டாயம் கஷ்டம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு பரிகாரமாக, உங்களுடைய வீட்டின் தெற்கு பக்கம் பார்த்தவாறு பைரவரின் படத்தை வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தினம் தோறும் வீட்டில் தீபம் ஏற்றும் போது, பைரவருக்கு இரண்டு கற்களை நிவேதனமாக வைத்து விட்டு தினம்தோறும் தூபம் காட்டி வந்தால் வீட்டில் இருக்கக் கூடிய பிரச்னைகள் வெகுவாக குறைவதை கண்கூடாக காணலாம்.