இந்த ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், இரவு தூக்கத்தை கட்டாயமாக நீங்கள் தவிர்க்க மாட்டீர்கள் !!

நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாக சொல்லப்படுவது தூக்கம் தான். அதுவும், குறிப்பாக இரவு தூக்கம். தூக்கம் என்றாலே அது இரவு நேரம் தான். காலம் மாறியதற்கு ஏற்ப தற்சமயம் பலபேர், இரவு தூக்கத்தை விடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இரவு நேரம் முழுவதும் நைட் ஷிஃப்ட் செய்துவிட்டு, பகலில் தூங்குபவர்கள் ஒருபக்கம் இருக்க இரவு முழுவதும் கைப்பேசியில், சமூக வலைத்தளங்களில் நேரத்தை கழித்துவிட்டு, இரவு தூங்காமல், பகல் நேரத்தில் தூங்கும் சிலரும் இதில் அடங்குவார்கள். வேறுவழியில்லாமல் இரவு நேரத்தில் வேலை செய்து தன் பிழைப்பை பார்ப்பவர்களை நம்மால் எந்த குறையும் சொல்லிவிட முடியாது. முடிந்தவரை அவர்களும் தங்களுடைய வேலையை பகல் நேரத்திற்கு எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று யோசிப்பது நல்லது.ஆனால் வீணாக இரவு நேரத்தை தூங்காமல் கழித்துவிட்டு, பகல் நேரத்தில் தூங்குபவர்களாக இருந்தால் தயவு செய்து நீங்கள் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இரவு தூக்கத்தின் மூலம் நமக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கிறது?

இரவு தூக்கத்தை தவிர்ப்பதன் மூலம் நம் உடல் எந்த அளவிற்கு பாதிப்பு அடைகிறது. என்பதை பற்றி சித்தர்கள் கூறியிருப்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வாழ்க்கை முறையை பசி, தாகம், தூக்கம் இவை மூன்றும்தான் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது. பசிக்கும் போதும், தாகம் எடுக்கும்போதும் முறைப்படி உணவு அருந்தி, முறைப்படி தண்ணீர் குடிக்கும் மனிதர்கள் ஏன் தூக்கத்தை மட்டும் தவிர்க்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை இரவு தூக்கத்தில் கழிக்கின்றோம் என்று ஒரு ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. உடலில் உள்ள நம்முடைய செல்கள் புதுப்பிக்கப்பட்டு ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்றால், அது இரவு நேரத்தில் நாம் தூங்கினால் தான் நடக்கும்.நம்முடைய ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி இவை ஐந்திற்கும் ஓய்வு கொடுக்கும் தக்க சமயமான, இரவு நேரத்தில் தூங்குவது மிகவும் அவசியமான ஒன்று. இன்றைய சூழ்நிலையில் மருத்துவர்கள் பல ஆராய்ச்சிகளுக்கு பின்பு இரவு தூக்கம் நல்லது என்று நமக்காக அறிவுரை செய்கிறார்கள்.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தேரையர் சித்தர் நமக்காக இரவு தூக்கத்தின் அவசியத்தை சொல்லி இருக்கின்றார். மருத்துவர்களின் சொல்லைத்தான் கேட்கவில்லை. சித்தர்கள் சொல்லிய அறிவுரையை கேட்டாவது, இரவு தூக்கம் எவ்வளவு மனிதனுக்கு தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை அடித்து இறைச்சியை எப்படி கவ்விக்கொண்டு போகுமோ அதேபோல், அனைத்து நோய்களும் வந்து நம் உடலுக்குள் புகுந்து நம் ஆரோக்கியத்தை கவ்விக்கொள்ளும் என்று சொல்கிறார் தேரையர் சித்தர். நன்றாக தூங்கவில்லை என்றால் உடல் நிலை பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் என் இரவு தூக்கத்தை தவிர்க்கின்றோம்? இரவு தூக்கத்தைத் தவிர்த்து, பகலில் உறங்குபவர்கலுக்கு பலவிதமான வாத நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார் தேரையர் சித்தர். இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் மனிதனின் உடலுக்குள் பல வகைப்பட்ட பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்திய தேரையர் சித்தர், எப்படி தூங்க வேண்டும் என்றும் தன்னுடைய நூலில் சொல்லியிருக்கின்றார்.

நாம் தூங்கும் போது இரண்டு கால்களையும் முழுமையாக நீட்டி, மல்லாந்து பார்த்து நிமிர்ந்து படுத்து தூங்கக்கூடாது. முழுமையாக மல்லாந்து பார்த்து நிமிர்ந்த படி உறங்கினால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாக கிடைக்காமல் குறட்டை வரும். ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்து ஒரு கையை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு, கால்களை நீட்டி தூங்குவது மிகவும் நல்ல முறையாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இடது கை, உங்கள் தலைக்கு கீழ் பக்கமும், வடதுகை உடம்பின் மேல் பக்கமும் இருக்கும்படி தூங்குவது மிகவும் சிறந்தது. இடது பக்கமாக ஒருக்களித்து தூங்க வேண்டும். இடது பக்கம் ஒருக்களித்து படுப்பது மூலம், நம்முடைய மூக்கில் சுவாசம் சூரியகலையில் இயங்கும். இதன்மூலம் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியேறுவதால் நம்முடைய ஆயுள் பலம் நீடிக்கும். இரவு நேரத்தில் ஜீரண சக்தியானது அதிகரிக்கப்பட்டு நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதயம் சீராக இயங்கும். ஒரு மனிதன் இவ்வாறாக இரவு தூக்கத்தை முறையாகத் தூங்கினால் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது தேரையரின் நூல் குறிப்பு. முடிந்தவரை இரவு தூக்கத்தை தவிர்க்காதீர்கள். பகல் தூக்கம் கூடாது என்பதை நினைவுகூர தான் இந்த பதிவு.