இந்த விஷயத்தை சரியாக கடைப்பிடிக்கும் பெண்களிடம் காசு, பணம் நிறைய கொட்டிக் கிடக்குமாம் தெரியுமா ??

எல்லாரிடமும் பணம் என்பது வந்துவிடப் போவதில்லை. காசு, பணம் என்பதெல்லாம் பலரின் வாழ்க்கையில் எட்டாத கனியாகவே இருக்கிறது. நம்முடைய தேவைக்கு நம்மால் பணத்தை எப்படியாவது ஈட்டிவிட முடிகிறது. ஆனால் அதையே சிறிதளவாவது சேர்த்து வைத்துவிட வேண்டும். திடீரென ஒரு ஆபத்து என்றால் கூட அடுத்தவரிடம் போய் நாம் நின்று விடக்கூடாது என்ற எண்ணம் கொண்டு இருப்பவர்களுக்கு அது கனவாகத்தான் இருக்கும். நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட போவதில்லை. ஆனால் நம்முடைய நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாமல் போவதற்கு என்ன காரணம் தெரியுமா? வாருங்கள் அதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். ஒருவரிடம் செல்வம் சேர வேண்டுமென்றால் அந்த நபரினுடைய குடும்பத்தின் ஆணிவேராக விளங்கும் பெண்கள் சரியாக இருக்க வேண்டும். பெண் இல்லாத ஒரு ஆணிடம் மகாலட்சுமி எப்போதும் தங்குவதில்லை.

நீங்கள் வேண்டுமானாலும் யோசித்து பாருங்கள். எந்த ஆண் தனித்து நின்று லட்சாதிபதியாகவோ, குபேரனாகவோ வாழ்ந்திருக்கிறான்? அவனுக்கு பின்னால் நிச்சயம் ஏதாவது ஒரு பெண் இருந்திருப்பாள் என்பது தான் நிதர்சனமான உண்மை. பெண் இல்லையேல் செல்வமும் இல்லை. இன்று நிறைய பேர் பெண் குழந்தைக்காக ஏங்கி தவம் கிடக்கிறார்கள். பெண் தான் குடும்பத்தை கட்டிக் காக்கும் அரணாக விளங்குகிறாள். அந்த அளவிற்கு இயற்கையாகவே பொறுப்பு என்பது ஆண்களுக்கு இல்லாமல் செய்து விட்டார் கடவுள் என்றே கூறலாம். ஆக செல்வத்திற்கும், பெண்ணிற்கும் நிறைய சம்பந்தம் உண்டு என்பது இதிலிருந்து நமக்கு தெரிகிறது. ஒரு நிலம், பூமி வாங்குகிறீர்கள் என்றால் அதை மனைவியின் பெயரில் வாங்குபவர்களுக்கு நிறைய ராஜ யோகங்கள் உண்டாகும். தன் பெயரில் வாங்கும் பொழுது நிலைமை தலைகீழாக இருக்கும். இதை உணர்ந்தவர்கள் நன்றாக தெரிந்து இருப்பார்கள். வீட்டில் பெண் தான் மகாலட்சுமி சொரூபமாக இருக்கிறாள். அதனால் தான் எல்லா விஷயத்திற்கும் பெண்களை கட்டுக்கோப்பாக நடந்து கொள்ள சொல்கிறார்கள்.

அதற்கு காரணம் அவர்களை மட்டம் தட்டுவது அல்ல. அவளே அனைத்துமாக அந்த குடும்பத்திற்கு விளங்குவதால், அவள் தான் பொறுப்பாக இருக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது. அவள் நிலை தடுமாறினால், அந்த குடும்பத்தின் நிலையும் கேள்விக்குறி தான். இதை பெண்கள் அனைவரும் கட்டாயம் உணர வேண்டும். பெண்ணானவள் கழுத்தில் மாங்கல்யம் சரடாக இல்லாமல் மஞ்சள் கயிற்றில் கோர்த்து இருப்பது மிக மிக அவசியம் என்பது அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை வலியுறுத்தி வருகின்றனர். ஆடம்பரம் அல்லது நாகரீகம் என்கிற பெயரில் தங்க சங்கிலியில் நீங்கள் அணியும் சரடு அந்த அளவிற்கு நல்லது அல்ல. அதை சாதாரணமாக விரும்பும் பெண்கள் அணிந்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் அதனுடன் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் கோர்த்து மற்ற உருக்களும் மஞ்சள் கயிற்றில் அணிந்து இருக்கும் பெண்களிடம் மகாலட்சுமி விரும்பி குடியிருப்பாள்.

அவளிடமே பணம், காசு அதிகமாக வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு என்கிறது சாஸ்திரம். அதுபோல் எந்த ஒரு பெண் நேராக வகிடு எடுத்து தலையை பின்னி கொள்கிறாரோ, அவளிடமும் காசு, பணம் தானாகவே சேருமாம். அவள் ஒன்றும் பணம், காசு சம்பாதிக்க போவதில்லை. ஆனால் குடும்பத்தின் ராஜ்யம் அவளிடம் இருப்பதால் அவளுடைய கிரகங்களும், அந்த கிரக காரகத்துவம் உள்ள விஷயங்கள் அவளிடம் சரியாக இருத்தலும் செல்வத்தை பெருக்கும் என்று சாஸ்திரம் ரகசியமாக கூறுகிறது. பெண்களின் தலைமுடியை கேதுவின் அம்சமாக கூறுவார்கள். நம் உடம்பில் மெல்லிய உறுப்புகள் அனைத்தும் கேதுவிற்கு உரிய அம்சமாகவே ஜாதகப்படி சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமணமான பெண், நேர் வகுடு இல்லாமல் தலையை வாரிக் கொண்டால் அவளிடத்தில் காசு, பணம் எதிர்பார்த்த அளவிற்கு சேருவதில்லை என்பது தான் உண்மை. நேர் வகுடு எடுத்து தலை பின்னி, பூச்சூடி, மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் அணிந்திருக்கும் பெண்களிடத்தில் காசு, பணம் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக நிச்சயம் சேரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.