இந்த 5 தவறுகளை கோவிலுக்குள் தப்பித் தவறியும் செய்யவே கூடாது! அவை என்னவென்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் !!

கோவில் பிரகாரத்தில் நுழையும் பொழுதே கோபுர தரிசனத்தை செய்து விட்டு தான் நுழைய வேண்டும். அது போல் திரும்பி வரும் பொழுதும் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டிற்கு சென்றதும் உடனே காலை கழுவி விடக்கூடாது. சிறிது நேரம் அமர்ந்து விட்டு பின்னர் தான் கை, கால்களை கழுவ வேண்டும். இப்படியாக நிறைய சாஸ்திரங்கள் இன்று வரை தொடர்ந்து பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வகையில் கட்டாயம் கோவிலுக்குள் தப்பி தவறியும் கூட 5 தவறுகளை செய்து விடாதீர்கள்! அப்படி என்ன தவறுகள் தான் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

சிவன் கோவிலுக்கு நீங்கள் செல்வதானால் அங்கிருக்கும் நந்திதேவருக்கும், சிவனுக்கும் இடையில் எவ்வளவு இடம் இருந்தாலும் நாம் அந்த வழியாக நடந்து போகக் கூடாது. நிறைய பேர் இவற்றை சரியாக கடைப்பிடிப்பதில்லை. நந்தி தேவருக்கும், சிவனுக்கும் நடுவில் பக்தர்கள் நடந்து போவது மிகப்பெரிய பாவமாகும் என்று சாஸ்திரம் கூறுகிறது. தெரியாமல் செய்திருந்தால் பரவாயில்லை. இனி தெரிந்தும் இந்த தவறை செய்யாதீர்கள். இவ்வாறு செய்வதால் நந்திதேவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நாம் கோவிலுக்கு செல்வது குறைகள் தீர்வதற்கு தான். அதிகரித்துக் கொள்வதற்கு அல்ல. எனவே கோவில் விதிமுறைகளையும் மற்றும் சாஸ்திர நடைமுறைகளையும் பின்பற்றி தரிசனம் செய்வது சிறப்பான நல்ல பலன் தரும்.கோவிலில் இருக்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் ஆகியவற்றின் நிழல் தரையில் படும் பொழுது அதை தெரியாமல் கூட நாம் மிதித்து விடக் கூடாது. இந்த விஷயமும் நிறைய பேருக்கு தெரிவதில்லை.

இவற்றின் நிழல்களை மிதிப்பவர்களுக்கு தோஷங்கள் ஏற்படும். இந்த நான்கு நிழல்களை மிதிக்காமல் சுற்றிக் கொண்டு செல்வது மிகவும் நல்லது. நீங்கள் தரிசனம் செய்யும் பொழுது சன்னிதியில் விளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும். சன்னிதியில் விளக்கு எரியாமல் எந்த தெய்வத்தையும் நாம் வணங்க கூடாது. அது எந்த சன்னதியாக இருந்தாலும் சரி, இது தான் நியதி. மூலவரை வணங்கி விட்டு மற்ற தெய்வங்களை வணங்கி வரும் பொழுது சன்னிதியில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதா? என்பதை கவனியுங்கள். இல்லை என்றால் எரிய விடுங்கள். பின்னர் வணங்கிவிட்டு வலம் வரலாம். கோவிலில் இருக்கும் ஸ்தல விருட்சங்கள் தெய்வீக சக்தி உடையவை. இவைகளை இரவு நேரத்தில் தப்பி தவறி கூட நாம் வலம் வந்து வணங்க கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு பின் தல விருட்சத்தின் இலைகளை, பூக்களை பறிக்கக்கூடாது.

குறிப்பாக சிவன் கோவிலில் இருக்கும் வில்வ இலைகளை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பறிப்பது பாவமாகும். அது போல் அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி, பிரதோஷம், நவமி, அஷ்டமி போன்ற தினங்களில் வில்வ இலைகளை பறிக்கக்கூடாது. அர்ச்சனைக்கு தேவை என்றால் முந்தைய நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்குள் நீங்கள் தரிசனம் செய்யும் பொழுது ஒரு கையை வைத்து மட்டும் வணங்கக் கூடாது. ஒரு சிலர் கைகளில் அர்ச்சனை கூடை அல்லது ஏதாவது பூஜை பொருட்கள் வைத்துக் கொண்டு தரிசனம் செய்வார்கள். இது போல் கட்டாயம் செய்யவே கூடாது. நீங்கள் கைகளில் எந்த பொருளை வைத்திருந்தாலும் அதை கீழே வைத்து விட்டு இரண்டு கைகளை கூப்பி தரிசனம் செய்ய வேண்டும். ஒற்றைக் கையால் தரிசனம் செய்வது பாவமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போல் சில விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.