இன்று வியாழக்கிழமை !! குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற மதியம் வீட்டில் என்ன சமையல் செய்யலாம் ??

நவகிரகங்களில் மிக முக்கியமான யோக கிரகம் என்றால், அதில் முதல் இடத்தை பெறுபவர் குரு. ‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்று சொல்லுவார்கள் அல்லவா? அந்த குருபகவானின் ஆசீர்வாதத்தை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால், எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம். அதோடு சேர்த்து, வியாழக்கிழமை அன்று, பெண்கள் அவரவர் வீட்டில் சமைக்கும் சமையலையும், குருபகவானுக்கு உகந்த பொருட்களை கொண்டு சமைத்தால் கோடி நன்மையில், ஒரு சில நன்மையையாவது நம்மால் கட்டாயம் பெற முடியும். வியாழக்கிழமை அன்று நம் வீட்டில் என்ன சமைத்தால், குருவின் ஆசீர்வாதத்தை பெற முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய வீடுகளில் வியாழக்கிழமை அன்று, பச்சரிசியில் சாதம் வைப்பது மிகவும் சிறப்பானது.

பருப்பு சேர்த்த சாம்பார் சமைக்கலாம். வியாழக்கிழமை கட்டாயம் உங்களுடைய உணவில் சிறிதளவு சுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். சுக்கு சேர்த்து சமைக்க முடியவில்லை என்றாலும், சிறிது சுக்கைத் தட்டிப் போட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பது கூட மிகவும் நல்லது தான். குறிப்பாக கடலைப் பருப்பு சேர்த்து, கூட்டு பொரியல் ஏதாவது ஒன்று, நம் சமையலில் கட்டாயம் இருக்க வேண்டும். குரு பகவானுக்கு உரிய கொண்டைக்கடலையை, வியாழக்கிழமை அன்று வேகவைத்து சுண்டல் செய்து நம் வீட்டு பூஜை அறையில், நைவேத்தியமாக வைத்து, பூஜை செய்து, குழந்தைகளுக்கு தானம் செய்வது மிகவும் நல்லது. தயிர் சாதம் சாப்பிடலாம். கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற கிழங்கு வகைகளை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி இதர காய்கறிகள் ஏதாவது ஒன்றை சமைக்கலாம். புடலங்காய், பீர்க்கங்காய், கேரட், பீட்ரூட் இப்படி எந்த காய்கறிகளை வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

அதில் எந்த ஒரு தவறும் இல்லை. மேற்குறிப்பிட்டுள்ள வற்றில் உங்களால் எதை கடைப்பிடிக்க முடியுமோ! இல்லையோ! முடிந்தவரை பச்சரிசி, சாதத்தையும் கொண்டைக்கடலை மட்டுமாவது வியாழக்கிழமை அன்று நம்முடைய வீட்டில் சமைப்பது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. சுக்கை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், மறந்துவிடாதீர்கள். பொதுவாகவே, குரு பகவானை வழிபட்டால், எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது சீக்கிரமே நிவர்த்தி ஆகிவிடும். மலையளவு கஷ்டத்தை கூட, ஒரு நொடியில் கடுகளவாக்க கூடிய சக்தி குரு பகவானுக்கு உண்டு. குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற, முருகர் வழிபாடு மிகவும் சிறந்தது. திருச்செந்தூர் முருகன் கோவில், குரு ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனால்தான் தீராத கஷ்டங்கள் என்று வரும்போது திருச்செந்தூருக்கு சென்று, கடலில் மூழ்கி முருகப்பெருமானை தரிசனம் செய்கிறார்கள். அப்படி தரிசனம் செய்து வந்துவிட்ட பிறகு, நம்முடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக கட்டாயம் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.