இரவில் தூக்கம் வராமல் பழைய எண்ணங்கள் கொண்டே இருக்கிறதா ?? ஐந்து நிமிடம் போதும் தங்களை மீறி கட்டாயம் தூக்கம் வரும் !!

ஆழ்ந்த தூக்கம் என்பது பலருக்கு கனவாகவே இருந்து வருகிறது. நம்மில் எவ்வளவு பேர் ஆழ்ந்த தூக்கத்தை தினமும் அனுபவிக்கிறோம்? என்று கேட்டால் மிக சொர்ப்பமானோர் தான் சாதகமான பதிலை கூறுவர். சிறு வயதில் படுத்ததும் உடனே தூக்கம் கண்களை தழுவிவிடும். வளர வளர நமக்கு இருக்கும் பொறுப்புகள், நமக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள், சுற்றி இருக்கும் சூழ்நிலைகள், மறக்க முடியாத சில நினைவுகள் போன்றவை நமது இனிய தூக்கத்தை கெடுத்து விடும். தூக்கம் என்பது வரம் என்று தோன்றி விடும் அளவிற்கு அதன் முக்கியத்துவம் நமக்கு புரிய வரும். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஆழ்ந்த தூக்கம் என்பது வரம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உளவியல் ரீதியாக தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மன அழுத்தம் தான் பெரும்பாலான காரணங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

தூக்கம் இல்லாமல் வருட கணக்கில் ஒருவர் அவதிபடுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் மன அழுத்ததால் தீவிரமாக பாதிக்கபட்டுள்ளாதாகவே கூறப்படுகிறது. என்ன செய்தாலும் அவர்களால் ஆழ்ந்த உறக்கதிற்கு செல்வது மிக கடினமாகவே இருக்கும். நன்றாக தூங்கும் நபர்களை பார்த்தால் ஆச்சரியப்படுவோம். எப்படி இவர்கள் மட்டும் படுத்ததும் உடனே தூங்கி விடுகிறார்கள் என்ற பொறாமையும் ஏற்படும். இந்த அற்புத தூக்கத்தை எளிய பயிற்சிகள் மூலமாக சுலபமாக வரவழைக்க முடியும். அதை பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம். முதலில் ஒருவருக்கு படுத்ததும் தூக்கம் வர உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நல்ல சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரே மாதிரியான நேரத்தில் உணவையும், தூக்கத்தையும் பழக வேண்டும். 9 மணிக்குள் படுக்கைக்கு செல்வதை வாடிக்கையாக்க வேண்டும். தூங்கும் முன்னர் வெறும் தரையிலோ, மேட்டிலோ அமர்ந்து கொண்டு பின்வரும் பயிற்சிகளை குறைந்தது 10 நிமிடமாவது செய்ய வேண்டும்.

நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். பிராண முத்திரையின் படி விரல்களை வைத்து கொள்ள வேண்டும். அதாவது பெருவிரல், மோதிர விரல், சுண்டு விரல் இம்மூன்றையும் இணைத்து கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலை தரையை நோக்கி பார்த்தவாறு கால் மூட்டின் மேல் கைகளை வைத்து கொள்ள வேண்டும். கைகளின் மூட்டுக்கள் வளையாத வண்ணம் இருக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். 5 நிமிடம் தொடர்ந்து இதே போல் மூச்சை மிக மெதுவாக உள்ளிழுத்து வெளி விட வேண்டும். இதனால் மூச்சு விடுவதில் சமநிலை ஏற்பட்டு உடலும், மனமும் அமைதி பெறும். பின்னர் முத்திரையை மாற்றுங்கள். நடுவிரலையும், பெருவிரலையும் இணைத்து கொள்ள வேண்டும். சுண்டு விரலையும், மோதிர விரலையும் உள்ளங்கையை நோக்கி மடித்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரலை மட்டும் தரையை நோக்கியபடி வைத்து கொள்ளுங்கள்.

இதற்கு பிராங்கியல் முத்திரை என்று பெயர். இந்த முத்திரையில் மீண்டும் மூச்சு பயிற்சியை 5 நிமிடங்களுக்கு மேற்கொள்ளவும். 10 நிமிடங்களில் இந்த இரண்டு முத்திரையையும் செய்து விடலாம். இதன் மூலம் மனமும், உடலும் ஒருநிலைபட்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிகோலும். இரவில் தூங்காமல் அவதிபடுபவர்கள் யாரும் உருப்படியான யோசனையை செய்வதில்லை. தேவையே இல்லாத சிந்தனைகள், ஒன்றுக்கும் உதவாத முடிந்து போன நினைவுகள், பத்து பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாத கற்பனைகள் இவற்றால் நல்லது ஒன்றும் நடக்க போவதில்லை மாறாக கண்டிப்பாக உங்களது உடல் நலன் வேகமாக பாதிப்படையும். இதனால் அன்புக்குரியவர்கள் மீது எரிச்சலடைவோம். அனாவசியாமான கோவங்கள் ஏற்படும். உங்கள் நிம்மதி கெடும். வாழ்வில் சொத்து சுகம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் இல்லை. நிம்மதி வேண்டும். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் தினமும் வேண்டும். நம்மை நாம் தான் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.