இரவில் வீட்டை பெருக்கினால் என்ன நடக்கும் தெரியுமா ?? எப்படி வீட்டை பெருக்கினால் மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டிற்குள் நிரந்தரமாக குடியிருப்பால் ??

வீட்டை சுத்தமாக வைப்பதும் ஒரு கலை தான். அந்த கலை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. எத்தனை பேர் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறீர்கள்? வீட்டை சுத்தமாக வைப்பதில் ஆண், பெண் இருபாலரில் பெண்ணுக்கே அதிக பொறுப்பு இருக்கிறது. இதனால் வேலை பளுவும் கூடுகிறது. வீட்டை சுத்தமாக வைத்திருப்பது வீட்டிலிருக்கும் அனைவரின் பங்கும் இன்றியமையாதது. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது, துணிகளை கலைக்காமல் எடுப்பது, தேவையற்ற பொருட்களை சேகரிக்காமல் பார்த்துக்கொள்வது போன்ற செயல்களை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபரும் பின்பற்றி வந்தால் வீடு எப்போதும் சுத்தமாகவும், சுபீட்சமாகவும் இருக்கும். ஆனால் இதை பெரும்பாலானோர் பின்பற்றுவது இல்லை. ஒரு சிறிய விஷயம் தான் இது. ஆனால் இச்செயல் உங்களுக்கு தரும் நன்மைகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு எப்போது வீட்டை பெருக்க வேண்டும்? என்றே தெரிவதில்லை. வீட்டை பெருக்குவதிலும் சாஸ்திரமா? என்று கேட்டால், ‘ஆம்’ என்றே கூறலாம். அவற்றை பற்றிய விரிவான தகவல்களை இனிவரும் பதிவில் காண்போம். வீட்டை பெருக்கி சுத்தம் செய்வதில் சில சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்தால், உங்கள் வீட்டில் மகாலட்சுமியானவள் நிரந்தரமாக தங்குவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இறைவன் நம் பக்கம் திரும்ப நம் மனம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.

உடலும், வீடும் கூட சுத்தமாக இருக்க வேண்டும். ‘சுத்தம் சோறு போடும்’ என்ற பழமொழியை மறந்து விடாதீர்கள். மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களிலெல்லாம் சுத்தம் என்பது கட்டாயமாக இருக்கும். நீங்கள் அதைப் பல இடங்களிலும் பார்த்திருக்கக்கூடும். சற்றே நினைவுபடுத்திப் பாருங்கள். பணம் இருக்கும் இடங்களில் அல்லது வீடுகளில் சுத்தமும் இருக்கும். தினமும் வீட்டை இரு முறை பெருக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளையில் கட்டாயம் துடைப்பம் வீடு முழுவதும் படவேண்டும். அதே சமயம் இரவு வேளைகளில் கட்டாயம் வீட்டைப் பெருக்கவே கூடாது. அதேபோல் இரவு வேளைகளில் குப்பை கொட்டுவது மிகவும் தவறான செயல். இரவு வேளையில் நல்ல தேவதைகளும், கெட்ட தேவதைகளும் உலா வருவதாக சாஸ்திர குறிப்புகள் உள்ளன. இரவு வேளைகளில் அவர்கள் உலா வரும் சமயத்தில் நீங்கள் குப்பை கொட்ட சென்றால், அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். அன்று முதல் உங்கள் வீட்டில் கஷ்டகாலம் துவங்கிவிடுமாம். வீட்டை கூட்டும் போது, முதலில் உள் அறைகளில் இருந்து கூட்ட வேண்டும். அந்த அந்த அறைகளில் இருக்கும் குப்பையை அங்கேயே அள்ளி விட வேண்டும். சிலர் எல்லா அறைகளில் இருந்தும் பெருக்கி கொண்டே வந்து மொத்தமாக ஓரிடத்தில் அள்ளுவதுண்டு. அதில் தவறு இல்லை ஆனால், இதனால் ஆங்காங்கே தூசுகள் கண்களுக்கு தெரியாமல் படிய நேரிடலாம். குப்பையை நிலை வாசல் தாண்டி அப்படியே தள்ளிவிடக் கூடாது. அள்ளி குப்பை தொட்டியில் தான் போட வேண்டும். அவ்வாறு தள்ளி விட்டால் லக்ஷ்மி தேவியும் குப்பையோடு சென்று விடுவார்களாம்.

குப்பை போடும் தொட்டியும் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பையை சேர்த்து வைக்க கூடாது. தினமும் அப்புறப்படுத்தி விடுவது நல்லது. அப்புறபடுத்தியதும் குப்பைத் தொட்டியை நீரினால் கழுவி கவிழ்த்தி வைத்து விடுங்கள். வீட்டை கூட்டி சுத்தம் செய்யும் பொழுது முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். எல்லாப் பொருட்களின் அடியிலும் துடைப்பம் படவேண்டும். வீட்டின் தரை முழுவதும் துடைப்பம் பட வேண்டும். சிலர் நான் இங்கு பீரோ வைத்திருக்கிறேன், ஃப்ரிட்ஜ் வைத்திருக்கிறேன், வாஷிங் மெஷின் வைத்திருக்கிறேன், கட்டில் இருக்கிறதே எப்படி பெருக்க முடியும்? என்று அந்தப் பொருட்களின் அடி பாகங்களில் அப்படியே விட்டுவிடுவார்கள். அது மிகவும் தவறான ஒரு செயலாகும். ஓரிரு இடங்களில் மட்டும் தூசுகள் அப்படியே படிந்து விடும். இது தரித்திரத்தை ஏற்படுத்தும். அது போன்ற வீடுகளில் நீங்கள் உழைத்த பணம் உங்கள் கைகளில் தங்குவதில்லை. வீண் விரயங்கள் ஏற்படும். நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களில் மகாலட்சுமி மனம் நோகாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. வீட்டில் இருக்கும் பொருட்களை நீங்கள் பெருக்குவதற்கு ஏதுவாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை பெருக்கும் போதும் அனைத்து இடங்களிலும் சுத்தமாக பெருக்கிவிட வேண்டும். இதன் மூலம் மகாலக்ஷ்மியின் மனம் குளிரும்.

இப்படி தினமும் செய்து பழகிவிட்டால், அதுவே வழக்கமாகி விடும். இதேபோல் எடுத்த பொருளை எடுத்த இடங்களில் வைக்க வேண்டும். ஒரு சட்டையை எடுக்க 9 சட்டைகளை கலைத்து விடுவார்கள். இவ்வாறு செய்யும் பொழுது மீண்டும் மீண்டும் அதை சரி செய்வதில் பெண்கள் சோம்பல் அடைந்து விடுகிறார்கள். ‘யார் வந்து நம் வீட்டை பார்க்க போகிறார்கள்’, என்ற எண்ணம் இருக்கக் கூடாது. நீங்கள் சுத்தமாக வைத்திருந்தால், உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வளரும். ஒரு முறை முயற்சித்து பாருங்கள், நீங்களே அதை கண்கூடாக உணர்வீர்கள். இச்செயல்களை வழக்கமாக பின்பற்றுபவர்களுக்கு கட்டாயம் மன நிம்மதி இருக்கும். நல்ல எண்ணங்கள் அவர்களை சுற்றி அதிர்வலைகளை உண்டாக்கும். அவர்களது இல்லத்தில் எப்போதும் சுபிட்சம் நிறைந்திருக்கும். மாலையில் வீடு கூட்டி சுத்தம் செய்யும் பொழுது பூஜைக்குரிய நேரம் ஆரம்பிப்பதற்குள் சுத்தம் செய்துவிட வேண்டும். அதாவது மாலை 4.30 to 6.00 பூஜைக்குரிய நேரமாக கருதப்படுவதால் 4.30குள்ளாக வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். இரவில் வீட்டை சுத்தம் செய்வதில் ஈடுபடக்கூடாது. வீடு கூட்ட பயன்படும் துடைப்பமானது பிறரின் மீது படாதபடி பார்த்துக் கொள்வது அவசியமானது. துடைப்பம் யார் மீதும் படக்கூடாது இதுவும் தரித்திரத்தை ஏற்படுத்தும் செயலாகும். வீட்டை சுத்தம் செய்தபின் ஒரே ஒரு தூபம் ஏற்றி பாருங்கள். பிறகு நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல மாற்றங்கள் கட்டாயம் நிகழும். தங்குதடையின்றி தனம், தானியம் பெருகும். உங்களது இல்லத்தில் மஹாலக்ஷ்மி நிரந்தரமாக தங்கி விடுவார்.