உங்ககிட்ட இருக்க ஒரு தக்காளியை வைத்து உங்க வீட்டு தொட்டியில் எளிதாக தக்காளிச் செடியை வளர்த்து விடலாம் !! சுலபமான குட்டி டிப்ஸ் இதோ !!

நம்முடைய சமையலறையில் தினந்தோறும் பயன்படுத்தும் பொருள் தக்காளி. சமையலுக்கு பயன்படுத்த கூடிய இந்த அத்தியாவசியமான பொருளை, நம் வீட்டில் வளர்த்து, நம் வீட்டுத் தொட்டியில் இருந்து, அறுவடை செய்து, சமைத்தால் எப்படி இருக்கும்? அதிகமாக சிரமப்பட வேண்டாம். சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய தொட்டியிலேயே, ஒரு தக்காளி செடியை வளர்க்க என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சின்ன சின்ன குறிப்புகள் தெரிந்தாலே போதும். தக்காளி செடியை சுலபமாக வளர்த்து விடலாம். முதலில் பழுத்த நாட்டு தக்காளி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வடிவில் நறுக்கிக் கொண்டால், 4 லிருந்து 5 பீஸ் கிடைக்கும்.

அதை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ளவேண்டும். பிளாஸ்டிக் தொட்டியாக இருந்தாலும் சரி. மண்தொட்டியாக இருந்தாலும் சரி. அந்தத் தொட்டியில், முதலில் அடிபாகத்தில், உங்கள் வீட்டில் தேங்காய் உரிக்கும் நார் இருந்தால், அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். அதன்பின்பு 60 சதவிகிதம் கருப்பு மண் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம் அல்லது செம்மண் எடுத்துக்கொள்ளுங்கள். 40% மண்புழு உரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து தொட்டியில் சேர்க்கவேண்டும். தொட்டியில் சேர்க்கபோகும் மண் உதிரி உதிரியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பாக நீங்கள் வெட்டி வைத்திருக்கும் வட்டவடிவ தக்காளி துண்டுகளை, கொஞ்சம் இடைவெளி வைத்து தொட்டியில் அடுக்கி விடுங்கள். தக்காளியில் இருக்கும் விதை தனியாக வந்திருந்தால் அந்த விதையையும் சேர்த்து இந்த தொட்டியிலேயே போட்டுவிடுங்கள். இந்த தக்காளி வெளியே தெரியாத அளவிற்கு, மேலே ஒரு லேயர் அளவு கருப்பு மண்ணை தூவி விடுங்கள்.

தடிமனாக தூவி விட்டு விடக்கூடாது. ஒரு இன்ச் அளவு தடிமனாக தூவினால் மட்டும் போதும். தூவிவிட்டு, அந்த மண்ணை, கைகளால் போட்டு அமைக்கக் கூடாது. அதன் பின்பாக மேலே இருக்கும் மண் நன்றாக நனையும் அளவிற்கு தண்ணீரை ஸ்பிரே செய்ய வேண்டும். அதாவது தெளிக்க வேண்டுமே தவிர, ஒரே இடத்தில் தண்ணீரை ஊற்றி விடக்கூடாது. தினமும் காலை மாலை இரண்டு வேளையும் தண்ணீர் தெளிக்க வேண்டும். கொஞ்ச நேரம் இந்த தொட்டியை வெயிலில் வைப்பது நல்லது. பத்து நாட்களில் நன்றாக துளிர்விட ஆரம்பித்துவிடும். பதினைந்தாவது நாள் துளிர்விட்ட அந்த தக்காளிச் செடியை, வேரோடு சேதமடையாமல் எடுத்து மற்றொரு தொட்டிக்கு மாற்றி பதியம் போட்டு வைத்துக் கொள்ளலாம். ஒரே தொட்டியில் நிறைய செடிகள் வேரூன்றி வருவது கஷ்டமாக இருக்கும் என்பதால் தொட்டியை மாற்றி வைப்பது நல்லது. புதிய தொட்டியின் செடியின் வேர் உள்ளே செல்லும் அளவிற்கு, பள்ளம் தோண்டி, வேரோடு பிடுங்கிய ஒரு செடியைப் பதியம் போட்டு விட்டீர்கள் என்றால், அந்த செடி மீண்டும் வேரூன்றி வளர ஆரம்பித்துவிடும். குறைந்தது 50 லிருந்து 55 நாட்களுக்குள் செடி ஓரளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும்.

பூ வைக்க தொடங்கிவிடும். பத்து நாட்களுக்கு ஒருமுறை ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரையும், மண்புழு உரத்தையும் இந்த செடிக்கு சேர்த்து வருவது அதிகப்படியான பூ விட்டு, அதிகப்படியான காய் காய்த்து, அதிகப்படியான தக்காளி பழங்களை அறுவடை செய்ய உதவியாக இருக்கும். செடி வைத்த 90 நாட்களில் சரியான ஊட்டச்சத்து செடிக்கு கிடைத்திருந்தால், நீங்கள் தக்காளி பழங்களை அறுவடை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில பேரது வீட்டில் செடி பக்கவாட்டில் வளர்ந்து, கீழே தாழ்வாக தொங்கும். அப்படிப்பட்ட கிளைகளை நாம் தூக்கி நிறுத்தி, ஒரு கயிறால் கட்டவேண்டும். அதாவது உங்கள் தொட்டியிலேயே கட்டையை சொருகி வைத்து, அந்த கட்டையில், முட்டுக்கொடுத்து கிளைகளை இலேசாக கட்டி விடுங்கள். அப்போது உங்களது கிளைகள் கீழே சாயாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் இரண்டு தொட்டி, ஒரு தக்காளி இருந்தால், மட்டும் போதும். இதை எல்லாவற்றையும் விட செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நீங்கள் வைக்கும் செடியானது, நீங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு தக்காளி செடி வளர்க்க, ஆசை இருந்தால் ஒருமுறை உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து தான் பாருங்களேன்.