உங்கள் கடன் பிரச்சனை எல்லாம் தீர சமையலறையில் நீங்கள் செய்ய வேண்டிய ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா ??

கடன் பிரச்சனைக்கும் சமையல் அறைக்கும் என்ன சம்பந்தம் என்று தானே பார்க்கிறீர்களா? உண்மையில் நிறையவே சம்பந்தம் உள்ளது என்று தான் கூற வேண்டும். அன்னபூரணியின் ஆதிக்கத்தில் சமையலறை இருந்தாலும், அவள் மகாலட்சுமியுடன் இருக்கிறாள் என்று தான் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு நாம் சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய ரகசிய குறிப்புகள் உள்ளன. அவற்றை பற்றிய விரிவான அலசல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். மகாலட்சுமி மற்றும் இதர தெய்வங்கள் சமையலறையில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அத்தகைய சமையலறையை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது செல்வ வளத்தை தரும் என்பார்கள்.

அதுவும் இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் சமையலறையை சுத்தமாக துடைத்து விட்டு, எச்சில் பாத்திரங்களை எல்லாம் கழுவி விட்டு அதன் பிறகு தூங்கச் செல்வது தான் நல்லது. அப்படி அப்படியே எல்லாவற்றையும் சமையலறையில் போட்டு வைத்து விட்டு தூங்குவது வீட்டிற்கு தரித்திரத்தை உண்டாக்கும். வேறு வழியே இல்லை, உடம்பு சரி இல்லை என்கிற நிலைமையில் நாம் அவ்வாறு செய்தால் பரவாயில்லை. ஆனால் சாதாரண நேரத்தில் கூட சமையலறையை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை என்றால், அந்த இடத்தில் செல்வமும் சேர்வதில்லை. கடன் வாங்க வேண்டிய நிலைமை தான் ஏற்படக்கூடும். எந்த ஒரு வீட்டில் சமையல் அறை சுத்தமாக இருக்கிறதோ! அந்த வீட்டில் கடன் பிரச்சனை குறைவாகத்தான் இருக்கும். கடன் வாங்க வேண்டிய நிலையும் அவர்களுக்கு இருக்காது. மற்ற அறைகளை காட்டிலும் சமையலறை என்பது தெய்வாம்சம் பொருந்திய அறை ஆகும். ஒரு சிலர் சமயலறையில் தான் சுவாமி படங்களை வைத்திருப்பார்கள்.

அது போல் இருக்கும் இல்லங்களில் சமையலறையை கட்டாயம் சுத்தமாக வைத்திருந்தால் அவர்கள் வாழ்வில் யோகம் உண்டாகும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குளித்து விட்டு தான் நீங்கள் சமையலறைக்குள் செல்ல வேண்டும். அப்படி சுத்தபத்தமாக செல்ல முடியாதவர்கள் சமையல் அறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக கல்லுப்பு ஒன்றை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். கல்லுப்பு தோஷத்தை போக்கும் என்பதால் குளிக்காமல் சமையல் செய்தாலும் உங்களுக்கு தோஷம் ஏற்படாமல் பாதுகாக்கும். சுத்தபத்தம் இல்லாமல் சமையல் செய்பவர்கள் வீட்டில் நிச்சயம் கடன் பிரச்சினை இருக்கும். கடன் பிரச்சனை தீர்வதற்கு சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அது போல் சமையலறையில் கட்டாயம் இருக்க வேண்டிய படங்கள் என்று பார்த்தோமேயானால் அன்னபூரணி படமும், மகாலட்சுமி தேவியின் படமும் நிச்சயம் பெற்றிருப்பது மிகவும் நல்லது.

சமைக்கும் சமையல் அடுப்பின் மேல் கரும்புகை படிந்திருப்பது மிகவும் நல்லது என்று ஒரு சாஸ்திரம் உண்டு. முந்தைய காலத்தில் எல்லாம் விறகு அடுப்பில் சமையல் செய்வார்கள். அவர்களுக்கு கரும்புகை எழும். இப்பொழுது நாம் சமைக்கும் பொழுது அதெல்லாம் எங்கே முடியும்? கருப்பு என்பது சனி பகவானுக்குரிய அம்சமாகும். அதனால் சமையலறையில் அடுப்பின் மேல் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி வைக்கலாம். அது போல் ஸ்வஸ்திக் சின்னம், ஓம் என்கிற சின்னம் வரைந்து வைக்கலாம். இதனால் கடன் பிரச்சினையை விரைவாக தீர்க்க வழி கிடைக்கும். சமையல் அறையில் சமைத்து முடித்ததும் எப்பொழுதும் காலியாக அப்படியே விட்டு விடக் கூடாது. அடுப்பின் மேல் ஏதாவது ஒரு பாத்திரத்தை சாஸ்திரத்திற்கு வைத்து விட்டு வர வேண்டும். இவற்றையெல்லாம் முறையாக கடைபிடித்தால் கடன் பிரச்சனை வராமல் தடுக்கும். கடன் பிரச்சனை இருந்தாலும் அவை படிப்படியாக நீங்கி விடும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.