உங்கள் ஜாதகத்தை கையில் கொண்டு இந்த கோவிலை சுற்றி வந்தாலே போதும் !! ராஜா யோகம் உங்களை தேடி வரும் !!

நாம் நம் ஜாதகத்தில் குறை இருந்தால் கோவில் கோவிலாக சென்று பரிகாரங்கள் பல செய்து தோஷ நிவர்த்திக்காக வேண்டிக் கொள்கிறோம். ஆனால் இந்த திருக்கோவில் வரலாற்றை திரும்பி பார்த்தால் சற்றே புருவங்கள் உயரத்தான் செய்கின்றது. இந்த கோவில் சித்திரை நட்சத்திரக்காரர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய கோவிலாக பிரதிபலிக்கிறது. குரு பகவனுக்காக, பெருமாள் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரை மாதத்தில், அழகிய சித்திர வேலைபாடுகளுடன் கூடிய ரதத்தில் காட்சி அளித்ததால் இங்குள்ள மூலவர் சித்திரரத வல்லபபெருமாள் என்ற பெயரில் தாயார்களுடன் சந்தனமர சிலையால் காட்சி தந்தருள்கிறார். சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களின் தோஷங்கள் நீங்க இந்த பெருமாளை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது. ஜாதகத்தை கையில் வைத்து கொண்டு இந்த கோவிலை வலம் வந்து வேண்டினால் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்பது ஐதீகம்.

இங்குள்ள குரு பகவான் யோக குருவாக அமர்ந்திருக்கிறார். குருவும், சக்கரத்தாழ்வாரும் சுயம்புவாக இருப்பது மேலும் சிறப்பிக்கும் வகையில் உள்ளது. குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். அவ்வகையில் சுயம்பு யோக குருவாக வீற்றிருக்கும் இவரை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியம் உடனே கிட்டும். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் பல அசுரர்களின் உயிர்கள் பலியாயின. அவர்களை மீட்டெடுக்க விரும்பி அசுரர்களின் தலைவனாகிய குரு சுக்ராச்சாரியார், தான் கற்றறிந்த ‘மிருதசஞ்சீவினி’ என்ற மந்திரம் கொண்டு அவர்களை உயிர்ப்பிக்க செய்தார். இந்த அற்புத மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்களும் குரு பகவானின் மகனாகிய கசனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி வைத்தனர். கசனும் தன் தந்தையிடம் ஆசி பெற்று அசுரலோகத்திற்கு புறப்பட்டான். கசனை பார்த்த சுக்ராச்சாரியாரின் மகளுக்கு காதல் பூண்டது.

அந்த மந்திரத்தை கசன், அவள் வாயிலாக கற்கவும் செய்தான். இந்த விஷயம் அசுரர்கள் காதுக்கு எட்டியதும் இனி இவன் உயிரோடு இருந்தால் நமக்கு ஆபத்து என்று எண்ணி கொன்று சாம்பலாக்கி அந்த சாம்பலை அசுர குருவின் பானத்தில் அவர் அறியாமல் கொடுத்து விட்டனர். கசனை காண வேண்டி தந்தையிடம் முறையிட்டாள் மகள். அவர் தன் ஞானத்தால் அனைத்தையும் அறிந்து தன் வயிற்றில் இருக்கும் கசனை அந்த மந்திரம் மூலம் உயிர் பெற செய்தார். இதில் அசுர குரு உயிர் துறந்தார். தன் உயிரை காப்பாற்றியவரின் உயிரை மிருதசஞ்சீவினி மந்திரம் கொண்டு மீண்டும் உயிர் கொடுத்தான் கசன். பின்னர் தன் மகளை மணமுடிக்க அசுரகுரு கேட்டார். ஆனால் கசனோ, நான் தங்கள் வயிற்றில் இருந்து உதித்ததால் இவளின் சகோதரனாகப்பட்டேன் என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டான். இதனால் கோபம் கொண்ட சுக்ராச்சாரியாரின் மகள் மலைகளை அரனாக்கி கசன் அங்கிருந்து வெளியே வர முடியாத நிலைக்கு ஆளாக்கினாள்.

அதனை அறிந்த குரு பகவான் இந்த தலம் இருக்கும் இடத்தில் தவமிருந்து தன் மகனை மீட்க பெருமாளிடம் முறையிட்டார். குருபகவானின் வேண்டுகோளுக்கிணங்கி அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ரதம் ஒன்றில் பெருமாள் காட்சியளித்து சக்கரத்தாழ்வாரை பணித்து கசனை மீட்க ஆணையிட்டார். கசனும் மீட்கப்பட்டான். குருபகவான் பெருமாளை அந்த இடத்தில் எழுந்தருள வேண்டினார். எனவேதான் பெருமாள் இங்கு சித்திரரத வல்லபபெருமாளாக அருள் பாலிக்கின்றார்.இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் குரு பெயர்ச்சி மிகவும் விசேஷமாக நடைபெறும். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ளது. குரு தன் மகனுக்காக வைகையில் துறை அமைத்து தவமிருந்ததால் இந்த இடத்திற்கு குருவித்துறை(குருவின்துறை) என்ற பெயர் ஏற்பட்டது. சித்திரை நட்சத்திரக்காரர்கள் மட்டுமின்றி மற்ற நட்சத்திரக்காரர்களும் ஏராளமாக குருவின் யோக பார்வை கிடைக்க இந்த தளதிற்கு வருகை புரிகின்றனர்.