உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை, செம்பு, சில்வர் பாத்திரம் பளப்பளப்பாக மாற இத போடுங்க போதும் !! பூஜை பாத்திரம் புதுசா மாற இதுல இரண்டு ரகசிய டிப்ஸ் உங்களுக்காக !!

நம் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரமாக இருந்தாலும் சரி, தினந்தோறும் வீட்டில் பயன்படுத்தும் சில்வர் பாத்திரமாக இருந்தாலும் சரி, அதை தேய்ப்பதற்க்கு, கடையிலிருந்து வாங்கிய கெமிக்கல் கலந்த லிக்விட் அல்லது சோப்பை மட்டும்தான், நாம் இதுநாள்வரை பயன்படுத்தி வருகின்றோம். இதனால் சில பேருக்கு கை நகங்கள், விரல்கள் புண் ஆக கூட வாய்ப்பு உள்ளது. எந்த வித கெமிக்கல் பொருட்களும் சேர்க்காமல், பாத்திரத்தை சுலபமான முறையில் பளபளப்பாக மாற்ற, வீட்டிலேயே பாத்திரம் தேய்க்க லிக்விட் எப்படி தயாரிப்பது என்பதை பற்றியும், உங்கள் வீட்டு பூஜை பாத்திரம் பளபளப்பாக மாற, உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை பயன்படுத்த வேண்டும், அது என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். குறிப்புக்கு போகலாமா? வீட்டில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் தயாரிக்க தேவையான பொருட்கள்: எலுமிச்சை பழம் – 2 பழைய புளி -1 உருண்டை பூந்திக்கொட்டை – 20 வினிகர் – 1/2 கப், உப்பு – 2 டேபிள்ஸ்பூன்.

கடைகளில் பழைய புளி என்று கேட்டால், கருப்பு நிறத்தில் கொடுப்பார்கள். அதை ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள். பூந்திக்கொட்டையை முதலில் லேசாக நறுக்கினால், அதன் மேல்தோல் பிரிந்து வந்துவிடும். உள்ளே இருக்கும் கொட்டையை தனியாக பிரித்து எடுத்து விடுங்கள். அதனுள் இருக்கும் கொட்டை நமக்குத் தேவை இல்லை. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் அளவு நல்ல தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். உப்புத் தண்ணீர் ஊற்ற வேண்டாம். அந்த தண்ணீர் நன்றாக கொதி வந்ததும், அதில் புளியை பிச்சு போட்டுக்கொள்ளுங்கள். எலுமிச்சை பழத்தை நான்கைந்து துண்டுகளாக நறுக்கி, தோளோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு பூந்திக்கொட்டை தோளையும் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வையுங்கள். கொதித்து முடித்ததும், அடுப்பை அணைத்து விட்டு, அதை கீழே இறக்கி வைத்து விடுங்கள், 5 மணி நேரம் அப்படியே ஊறட்டும். நன்றாக ஆறியதும், 5 மணி நேரம் கழித்து பெரிய ஓட்டை உள்ள வடிகட்டியின் மூலம் இதை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். (புளி, எலுமிச்சை, பூந்திக்கொட்டை சேர்த்த தண்ணீர் தனியாக இருக்கட்டும்.மீதமுள்ள திப்பியை மிக்ஸி ஜாருக்கு மாற்றி, நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொண்டு, அதன் பின்பாக அதை வடிகட்டியில் ஊற்றினீர்கள் என்றால், அது கீழே இறங்காது. காரணம் கெட்டியாக இருக்கும் அல்லவா? இப்போது அந்த வடிகட்டியில் இருக்கும் திப்பி, கீழே இருக்க (பூந்திக்கொட்டை புளி எலுமிச்சை பழம் சேர்த்த தண்ணீரை வடிகட்டி வைத்திருக்கிறோம் அல்லவா) அந்த தண்ணீரை ஊற்றி திப்பியை, வடிகட்டியில் நன்றாக கிளறி, ஒரு கரண்டியை வைத்து அழுத்தினீர்கள் என்றால் அதில் இருக்கும் சாறு அனைத்தும் கீழே இறங்கி விடும். எக்காரணத்தைக் கொண்டும், சாதாரண தண்ணீரை இதில் கலந்து விடாதீர்கள். இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு கெட்டிப் பதத்தில் லிக்விட் கிடைத்திருக்கும். அதை அடுப்பில் வைத்து ஒரு குழி கரண்டி அளவு உப்பு போட்டு, 50ml வினிகர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து விடுங்கள். அவ்வளவுதான். நீங்கள் பாத்திரம் தேய்க்க தேவையான லிக்விட் தயார். இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி, சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சைத் தண்ணீர் பட்டால் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. (பழைய, காலியான விம் பாட்டில் வைத்து இருப்பீர்கள் அல்லவா?

அதில் கூட ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.) ஒருமுறை இதை வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரத்தை தேய்த்து பாருங்கள். எப்படி பலபலவென்று மாறும். இதை வைத்து சில்வர் பாத்திரமும் தேய்த்துக் கொள்ளலாம். உங்கள் கைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வழி. இப்போது பூஜை பாத்திரத்தை தேய்க்க என்ன செய்ய வேண்டும்? இது பூஜை பாத்திரத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு டிப்ஸ். உங்கள் வீட்டு பூஜை பாத்திரத்தை தேய்க்க 1 டேபிள்ஸ்பூன் அளவு அரிசிமாவு, 1/2 ஸ்பூன் உப்பு, புளிக்கரைசல் 2 டேபிள் ஸ்பூன், மூன்றையும் சேர்த்து விழுதாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பாக இந்த விழுதை தேங்காய் நாரில் தொட்டு முதலில் உங்கள் பூஜை பாத்திரத்தில் நன்றாக தேய்த்து விடுங்கள். பாதி பளபளப்பாக மாறிவிடும். (உங்கள் வீட்டில் பூஜை பாத்திரங்கள் நிறைய இருந்தால் இதனது அளவை கொஞ்சம் கூட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.) அதன் பின்பாக சுத்தமான துணியை வைத்து, உங்கள் வீட்டு பூஜை பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை துடைத்து எடுத்து விட வேண்டும். அதன் பின்பாக உங்கள் வீட்டில் இருக்கும் விபூதியை எடுத்துக்கொள்ளுங்கள். விபூதியை சுத்தமான துணியில் தொட்டு, உங்கள் பூஜை பாத்திரம் அனைத்தையும் துடைத்து எடுங்கள். அப்புறம் பாருங்கள்! புதிதாக வாங்கிய பித்தளை பாத்திரம் போல், உங்கள் வீட்டு பூஜை பாத்திரம் மாறியிருக்கும். (அரிசி மாவும் விபூதியும் உங்கள் வீட்டு பூஜை பாத்திரத்தை பளபளப்பாக மாற்ற உபயோகமாக இருக்கும். இதுதாங்க அந்த ரகசிய குறிப்பு.)உங்களுக்கு இந்த குறிப்புகள் அனைத்தும் பிடித்திருந்தால் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.