உங்கள் வீட்டில் தற்போது பரமபதம் தாயம் விளையாடினால் தரித்திரம் பிடிக்குமா ?? விடை இதோ !!

ஊரடங்கு உத்தரவு தொடங்கிய நாள் முதல், சமீபகாலமாக நம் வீடு, அக்கம் பக்கத்து வீடு, என்று எல்லோரது வீடுகளிலும், பொழுதுபோக்கிற்காக பரமபதம், தாயம் போன்ற விளையாட்டுகளை தான் விளையாடி வருகிறார்கள். நம்முடைய முன்னோர்களின் கால கட்டத்திலிருந்தே, இருந்து வந்த இந்த விளையாட்டு, இடையில் கொஞ்ச நாட்களாக காணாமல் போய்விட்டது. இதற்கு காரணம் நம்முடைய அவசர வாழ்க்கையில், நேரமின்மை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நேரம், லாக்டௌன் காலத்தில் நமக்கு அதிகமாகவே கிடைத்திருக்கின்றது. பொழுதைக் கழிக்க என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் பரமபதம் தாயம் போன்ற பழைய விளையாட்டை, விளையாட பலபேர் தொடங்கியுள்ளார்கள். சரி. இந்த பரமபதம், தாயம், சொக்கட்டான் எந்த விளையாட்டாக இருந்தாலும், தாயக்கட்டையை பயன்படுத்திதான் விளையாடுவார்கள். அந்த சத்தம் எப்போதுமே நம்முடைய வீட்டில் கேட்டுக்கொண்டே இருக்கலாமா? சில பேர் பரமபதம் விளையாடுவார்கள். அதற்கு பகடையை உருட்டுவார்கள். அதாவது ஆங்கிலத்தில் dice என்று சொல்லுவார்கள். இந்த பாகடையையும், தாயக்கட்டையையும் வீட்டில் உருட்டிக் கொண்டே இருக்கலாமா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வரலாற்றுப் படி பார்த்தால், மாகாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் தன் நாட்டையும், பாஞ்சலியையும் பணையமாக்கி இழந்த, சகுனியின் வஞ்சக விளையாட்டு! நளவெண்பாவில் நளன், கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்! இப்படிப்பட்ட சூதாட்டத்தை நாம் ஒரு விளையாட்டாகத் தான் நம்முடைய வீடுகளில் விளையாடி வருகின்றோம். ஆனாலும் நம்முடைய வழக்கப்படி இது ஒரு சூதாட்டம் தான். விளையாட்டு கூட, வினையாக மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டுள்ள விளையாட்டு. பகல் நேரங்களில் பொழுதுபோக்கிற்காக, விளையாட்டாக, இந்த விளையாட்டை விளையாடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. வெள்ளிக்கிழமை அன்று இந்த விளையாட்டை விளையாடாமல் இருப்பது நல்லது. அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் இந்த விளையாட்டுகளை, முடிந்தவரை வீட்டிற்கு உள்ளே விளையாட மாட்டார்கள். வீட்டிற்கு வெளியே திண்ணையில் அமர்ந்து விளையாடுவார்கள்! அல்லது தெருக்களில் அமர்ந்து கூட விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வெள்ளிக்கிழமை தினத்தில் 6 மணிக்கு மேல், வீட்டில் விளக்கு வைக்கும் சமயத்தில், தாயக்கட்டையையோ அல்லது பகடையையோ உருட்டும் சத்தம் கேட்கவே கூடாது. அது மகாலட்சுமி களஞ்சியத்தை குறைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. சூதாட்டத்திற்கு இணையாக சொல்லப்பட்டிருக்கும் இந்த விளையாட்டை, முடிந்தவரை பொழுதுபோக்கிற்காக பகல் நேரங்களில் விளையாடினால் எந்த ஒரு தவறும் இல்லை. விளக்கு வைத்த பின்பு வீட்டிற்குள் மகாலட்சுமி வரும் சமயத்தில் தாயக்கட்டை உருட்டும் சத்தம் வீட்டிற்கு தரித்திரத்தை தேடித் தரும். தாயக்கட்டை உருட்டும் சத்தம் கேட்கும் இடத்தில் மகாலட்சுமி வருகை தர மாட்டாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சில பேர் வீடுகளில் எல்லாம் விளையாட்டாக ஆரம்பிக்கும் தாய விளையாட்டின் மூலம், வெற்றி தோல்வியின் காரணமாக, பெரிய பெரிய பிரச்சனைகள் கூட வந்திருக்கின்றது. அப்படிப்பட்ட பிரச்சினைகள் விளக்கு வைத்த பின்பு வீட்டில் வரக்கூடாது என்பதற்காக கூட இந்த விளையாட்டை, விளக்கு வைத்த பின்பு விளையாடக்கூடாது என்று, நம்முடைய முன்னோர்கள் சொல்லிவைத்து இருக்கலாம்! காரணம் காரியம் இல்லாமல் எந்த ஒரு சாஸ்திரமும் சொல்லப்படவில்லை.

இதேபோல் தான், பரமபத விளையாட்டும். வைகுண்ட ஏகாதேசி அன்று மட்டும்தான் பரமபத விளையாட்டை இரவு நேரத்தில் விளையாட வேண்டும் என்பது சாஸ்திரம். புண்ணியம் செய்தவர்கள் ஏணியின் வழியாக ஏறி சொர்க்கவாசல் அடைவார்கள் என்பதும், பாவம் செய்தவர்கள் பாம்பு தலை வழியாக இறங்கி, நரகத்திற்கு செல்வார்கள் என்பதும் ஐதீகமாக சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, வீட்டில் நல்ல நாள் கிழமைகளில், இந்த விளையாட்டை விளையாட கூடாது, குறிப்பாக வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் விளக்கு வைத்த பின்பு இந்த விளையாட்டு விளையாட கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள். முடிந்தவரை, எந்த கிழமையாக இருந்தாலும், இந்த விளையாட்டுக்களை பகல் நேரத்தில் விளையாடுங்கள். உங்களுடைய வீட்டிலும் விளக்கு வைத்த பின்பு இந்த விளையாட்டை விளையாடாமல் இருப்பது நல்லது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.