உங்கள் வீட்டில் பூஜை செய்யும் பொழுது இந்த பொருட்களை எல்லாம் தெரியாமல் கூட வெறும் தரையில் வைத்து விடாதீர்கள் !!

பூஜையின் பொழுது நமக்கு கவனம் முழுவதும் பூஜையில் தான் இருக்க வேண்டும். நம்முடைய வீட்டில் எந்த பூஜைகள் செய்தாலும் பூஜை செய்யக் கூடிய சில பொருட்களை தெரியாமல் கூட தரையில் வைத்து விடக் கூடாது. அப்படியான பொருட்கள் என்ன? ஏன் இந்த பொருட்களை எல்லாம் தரையில் வைக்கக் கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பூஜையின் பொழுது நமக்கு மனம் ஒருநிலைப்படும் என்பார்கள். பூஜைக்கான ஏற்பாடுகளை நாம் செய்து கொண்டிருக்கும் பொழுது சுற்றி நடக்கும் எந்த விஷயமும் நமக்கு தெரிவதில்லை. நம்முடைய கவலைகள், துன்பங்கள் அனைத்தையும் மறந்து இறை வழிபாட்டில் முழுமையாக ஈடுபடுகிறோம். அது போன்ற சமயத்தில் இந்த ஒரு சில விஷயங்களை மட்டும் தவறாமல் மனதில் வைத்து கடைபிடிப்பது மிகவும் முக்கியம்.

பூஜையின் போது எக்காரணம் கொண்டும் பூஜைக்கான விளக்கை வெறும் தரையில் வைத்து விடக்கூடாது. ஒருமுறை நீங்கள் விளக்கிற்கு சந்தன, மஞ்சள், குங்குமம் இட்டதும் நேரடியாக பூஜை அறையில் வெறும் தரையில் வைக்கக் கூடாது. கண்டிப்பாக விளக்கிற்கு கீழ் ஒரு தட்டு அல்லது இலை போன்ற ஏதாவது ஒரு விஷயம் அடியில் வைக்க வேண்டும். விளக்கிற்கு அடியில் சில அரிசிகளை மட்டுமாவது போட்டு வைக்க வேண்டும். வெறும் விளக்கு கட்டாயம் எரியக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பூஜையின் போது வெற்றிலை, பாக்கு வைக்கும் பொழுது கட்டாயம் ஒரு ரூபாய் நாணயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெற்றிலையின் மேல் ஒரு ரூபாய் நாணயம் வைக்காமல் தனியாக வைக்க கூடாது.

பூஜைக்கு நீங்கள் பயன்படுத்தும் ரத்தினங்கள், சாளக்கிராமக் கற்கள், வலம்புரி சங்கு, கருங்காலி கட்டை போன்ற எந்த ஒரு விஷயங்களையும் நேரடியாக தரையில் படும்படி வைத்து விடவே கூடாது. இதைத் தெரியாமல் கூட நீங்கள் செய்வதால் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை இழக்க நேரிடும். இது மாதிரியான தெய்வீக விஷயங்களை சுத்தமான பட்டு துணி அல்லது சாதாரண துணியில் வைத்துக் கொள்ளலாம். பூஜைக்கு பயன்படுத்தும் மலர்கள் ஒரு போதும் கீழே தரையில் வைக்கக்கூடாது. இவைகள் புனிதமாக கருதப்படுவதால் இவைகளை ஒருபோதும் நேரடியாக தரையில் வைப்பது கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பித்தளை அல்லது செம்பு பாத்திரம் அல்லது சாதாரண எச்சில் படாத எவர்சில்வர் பாத்திரத்தில் கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாமே ஒழிய தரையில் மட்டும் வைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அது போல் விக்ரஹங்கள் வீட்டில் வைத்திருந்தால் அதை தப்பி தவறி கூட தரையில் வைத்து விடாதீர்கள். சுவாமி சிலைகள் சக்தி கொடுக்கப்பட்ட பின் வெறும் தரையில் வைத்தால் அதில் பலன் இருக்காது. எனவே விக்ரகங்களை ஏதாவது ஒரு உலோக சிம்மாசனம் அல்லது மரப் பேழையில் அமர வைக்க வேண்டும். அது போல் கடவுளுக்கு சாற்றப்படும் புனித ஆடைகளை மற்றும் நகைகளை தனியாக வைத்திருப்பவர்கள் அதை வெறும் தரையில் வைக்கக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் பொழுதும், வெளியே எடுக்கும் பொழுதும் இவற்றை தரையில் வைக்காமல் ஏதாவது சுத்தமான துணி விரித்து அதன் மேல் வைக்க வேண்டும். இது மாதிரியான விஷயங்களை தெய்வீக வழிபாடுகள் போது கண்டிப்பாக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் குறையாமல் நிறைந்து இருக்கும்.