உண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் ?? நடந்தது என்ன ?? ஆச்சரியமூட்டும் புதிய தகவல்கள் !!

18 சித்தர்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் உண்மையில் சித்தர்கள் நூற்றுக்கணக்கானோர் இருக்கின்றனர். அதில் பெண் சித்தர்களும் அடங்குவர். ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் கற்று தேர்ந்தவர் போகர். இவர் இயற்பியல், வேதியியல், கணிதம் என்று அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கியவர். அஷ்டமா சித்திகளையும் கற்றுணர்ந்தவர். இவருக்கு கூடுவிட்டு கூடுபாயும் அற்புதக் கலையும் தெரியுமாம். மனிதர்கள் சாகாவரம் பெறுவதற்கு பல ஆராய்ச்சிகளை தன் சக்தியின் மூலம் மேற்கொண்டவர். அதில் வெற்றியும் கண்டவர் என்ற குறிப்புகள் உள்ளது. சாகாவரம் என்பது இயற்கைக்கு புறம்பான ஒரு விஷயமாகும். மேலும் இது இறைவனுக்கு எதிராக செயல்படும் என்பதால் பல முனிவர்களும், சித்தர்களும் இவரிடம் இதை நிறுத்தும்படி கோரியுள்ளனர். இதற்கான சான்றுகள் பல முனிவர்கள் குறிப்புகளாக எழுதியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற போகர் தன்னுடைய இந்த அசாத்திய ஆராய்ச்சியை நிறுத்திவிட்டார். அதன் பிறகு இவர் அதை பயன்படுத்தினாரா? என்பது பலருக்கும் இன்றுவரை விடை தெரியாத ஒரு கேள்வியாக நிற்கிறது.

போகர் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான அற்புத மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த சாகாமூலியை தான் பிரித்து எரியூட்டி பல கட்டத்திற்கு பிறகு பாஷாணங்களாக மாற்றி சில மாற்றங்கள் செய்து நவபாஷாணமாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த நவபாஷாணத்தால் கொண்டு செய்யப்பட்ட சிலை தான் பழனி முருகன் கோவிலில் இருக்கும் நவபாஷாண முருகன் சிலை ஆகும். இவர் இன்னும் சில நவபாஷாண சிலைகளை செய்ததாக குறிப்புகள் உள்ளது. ஆனால் அவைகள் எங்கு உள்ளது என்பது யாருக்கும் இதுவரை தெரியாது. நவபாஷாண முருகன் சிலையை செய்ததும் பழனியில் இருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் போகரை யாரும் பார்க்கவில்லை. போகர் பழனியிலேயே ஜீவசமாதி அடைந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். பழனியில் இருக்கும் போகரின் ஜீவசமாதிக்கு வியக்க வைக்கும் ஒரு தகவலும் உண்டு. பழனியில் இருக்கும் மூலவர் சந்நிதியில் இருந்து போகரின் ஜீவசமாதிக்கு இடையில் ஒரு சுரங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் மர்மம் என்ன என்பது அவிழ்க்க முடியாத முடிச்சாக இன்று வரை இருக்கிறது. நம்முடைய மூதாதையர்கள் மற்றும் சித்தர்களின் ஆற்றல் இன்றைய நவீன அறிவியலாளர்களுடன் ஒப்பிடும் பொழுது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

இன்றைய நவீன யுகம் 9 கோள்களை கண்டுபிடித்து கூறினாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரகங்களை கூறியிருப்பது ஆச்சரியம் தரும் ஒரு விஷயம் தான். அதை மறுப்போர் யாரும் இங்கு இல்லை. அதேபோல் புஷ்பக விமானம் என்று புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டது அன்றைய காலகட்டத்தில் நம்ப முடியாவிட்டாலும் இன்று விமானமாக நம்முடன் நெருங்கிய தொடர்பில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மற்ற கிரகங்களுக்கு மனிதர்கள் செல்ல முடியும் என்பதை கூறியிருந்தால் யாரும் அன்றைய காலக் கட்டத்தில் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அது சாத்தியமாகிறது அல்லவா? அது போல் தான் ஒவ்வொரு ஆன்மீக விஷயத்திற்கும் பின்னால் விஞ்ஞான அறிவியலும் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதனை மனிதன் உணரும் காலம் மிக வெகு தொலைவில் ஒன்றும் இல்லை. செவ்வாய் கிரகத்தின் கதிர்வீச்சு நேரடியாக பழனியில் விழுவதால் இந்த இடத்தை போகர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நவபாஷாணம் என்பதற்கு 9 விஷம் என்றும் பொருள் உள்ளது. அதனால் இதனை நேரடியாக பயன்படுத்த முடியாது.

ஆனால் சிலையில் இருந்து வெளிவரும் நீர் போன்ற திரவத்தை பயன்படுத்தலாம். இதனால் முருகனுக்கு ராக்கால பூஜையில் சிலையின் சிரசில் சந்தனம் வைக்கப்படுகிறது. நவபாஷாணதிற்கு இயற்கையாக இருக்கும் உஷ்ணத்தன்மையை வெளியேற்ற சந்தனம் உதவி புரியும். இதனால் வெளியாகும் நீரை தான் கௌபீன தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கபடுகிறது. இதன் மூலம் பல வியாதிகள் குணமடைவதாக குறிப்பிடப்படுகிறது. -மனிதனால் சாகாவரத்தை பெற முடியும் என்பது ஒரு தரப்பினரின் வாதமாக இருக்கிறது. அறிவியலும் அதை ஒப்புக் கொண்டிருப்பது ஆச்சரிய தகவலாக இருக்கிறது. ஒரு மனிதனின் டிஎன்ஏவை சுத்திகரிப்பதன் மூலம் சராசரியாக 1200 ஆண்டுகள் வரை மனிதனால் உயிர் வாழ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்து இருக்கிறது. ஆனால் அதற்கான சரியான வழிமுறைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வரும் காலங்களில் இதற்கான விடைகள் தெரியவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் அறியலாளர்கள். இந்நிலையில் ஏற்கனவே கூடு விட்டு கூடு பாயும் வித்தையை அறிந்த போகர், தான் அரும்பாடுபட்டு கண்டுபிடித்த சாகாமூலியை உபயோகப்படுத்தாமல் இருந்திருப்பாரா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. நவபாஷாண சிலையை செய்ததும் ஜீவசமாதி ஏன் அடைந்தார்? அந்த சுரங்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? அவரின் ஆவி அலைவதாக சர்ச்சைகள் எழுவதும், மீண்டும் போகர் அவதரிப்பார் என்று சித்தர்கள் கூறுவதும் இதை மேலும் உறுதிபடுத்துவதாக இருக்கிறது அல்லவா? காலம் தான் இதற்கு விடை அளிக்கும்.