எதிர்பாராத இன்றைய சூழ்நிலையில் நஷ்டத்தை அடைந்த தொழில்கள் அனைத்தும் விரைவாக லாபத்தை அடைய என்ன செய்வது ?? இந்த முறையான பரிகாரங்களை செள்தால் போதும் ..

இன்றைக்கு உலகம் இருக்கும் சூழ்நிலையில் பிரச்சனைக்கு பஞ்சமே இல்லை. இருக்கின்ற பிரச்சனையோடு விதியின் விளையாட்டால் பலவகையான இழப்புகளை சந்தித்து வருகின்றோம். நிதி நெருக்கடி, வருமான இழப்பு, தொழில் செய்ய முடியாத சூழ்நிலை, வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை, நம்மை பெரிய நஷ்டத்தில் தள்ளி விட்டிருக்கிறது. (இவை எல்லாவற்றையும் விட பலரின் உயிரிழப்பு. அதை அந்த ஆண்டவனால் தான் சரி செய்ய முடியும்.) சிறிய வியாபாரிகள் முதல், பெரிய தொழிலதிபர்கள் வரை அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு நஷ்டத்தை அடைந்துள்ளார்கள். இப்படியிருக்க சிறிய தொழிலாக இருந்தாலும், பெரிய வியாபாரமாக இருந்தாலும் தங்களுடைய நஷ்டத்தை ஈடுசெய்ய என்ன செய்யப் போகின்றோமோ? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வியாபாரிகளுக்கு, நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள இந்த பரிகார முறைகளை முறையாக செயல்படுத்தினால், தங்களுடைய தொழிலை கூடிய விரைவிலேயே லாபத்தோடு தூக்கி நிறுத்தி, வெற்றி அடைய செய்துவிடலாம்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை, விரைவாக லாபமாக மாற்றக் கூடிய சில பரிகாரங்கள் உங்களுக்காக இதோ! அந்தக் காலங்களில் எல்லாம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது தொழிலில் நஷ்டம் ஏற்படாமல், லாபத்தை அதிகமாக ஈட்ட வேண்டும் என்றாலும் இந்த பரிகார முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் வீட்டிலிருந்து கடைக்கோ அல்லது தொழில் செய்யும் இடத்திற்கோ செல்வதற்கு முன்பாக மஞ்சள் சாமந்தி பூவின் சாறை உங்களது நெற்றியில் வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். மஞ்சள் சாமந்திப் பூவின் இதழ்களை இலேசாக கையின் கசக்கினால், வரக்கூடிய சிறிதளவு சாறை நெற்றியில் வைத்துக்கொண்டால் போதும். தொழில் செய்யும் இடத்தை, காலையில் திறந்த உடனேயே, முதலில் கூட்டி சுத்தம் செய்து விடுங்கள். இரவு வீட்டிற்கு போகும்போது சுத்தம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தை அடியோடு தவிர்த்து விடுங்கள். அப்படி செய்தால் மகாலட்சுமி தங்க மாட்டாள்.

சில கடைகளில் இரவு நேரங்களில் குப்பை எல்லாம் கூட்டி எரித்து விடுவார்கள். அப்படி இரவு நேரத்தில் கடையை சுத்தப்படுத்துவது மிகப் பெரிய தவறு. அவரவர் வீடுகளில் கட்டாயம் அவர்களுடைய குலதெய்வத்தின் விபூதியோ, குங்குமமோ, சந்தனமோ ஏதாவது ஒரு பிரசாதம் கண்டிப்பாக இருக்கும். எந்த பிரசாதமாக இருந்தாலும் தினம்தோறும் ஒரு சிட்டிகை அந்த பிரசாதத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, காலை வேளையில் உங்களது கடை முழுவதும் தெளித்து விடுங்கள். அதன் பின்பு தினம்தோறும் உங்களது கடையில், தொழில் செய்யும் இடத்தில் தீப, தூப ஆராதனை காட்டப்பட வேண்டும். அந்த ஆராதனையானது கண்டிப்பாக முதலில் சூரிய பகவானுக்கு தான் காட்டப்பட வேண்டும். அதன் பின்புதான் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைத்திருக்கும் இறைவனுக்கும், உங்கள் கல்லாப்பெட்டி காட்டுவது முறையாகும். ஏனென்றால் தொழிலுக்கு அதிபதியாக திகழ்பவர் சூரிய நாராயண மூர்த்தி தான். அவரை தினம்தோறும் முதலில் வழிபடுவது தொழில் முன்னேற்றத்திற்கு மிகவும் நல்லது. அதன்பின்பு எச்சில் படாத ஒரு கண்ணாடி டம்ளரில், தண்ணீரை எடுத்துக்கொண்டு மூன்று முறை சூரியபகவானுக்கு தீர்த்தம் விட வேண்டும்.

அதாவது சூரியனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுப்பது போன்ற முறையில் மூன்று முறை தண்ணீரை, பூமாதேவியின் மீது விடுங்கள். அதன் பின்பு அந்தத் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு உங்கள் கடையிலேயே சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அடுத்ததாக உங்களது குலதெய்வ கோவிலில் குடிமியோடு இருக்கும், நல்ல முழு தேங்காயை வாங்கிக் கொடுத்து சுவாமியின் பாதங்களில் வைத்து பூஜை செய்து, எடுத்து வரவேண்டும். அந்த தேங்காயை ஒரு சிகப்பு துணியில் நன்றாக கட்டி முடிச்சுப் போட்டு கடைக்கு உள்பக்கமாக கட்டி தொங்க விட்டு விடுங்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த தேங்காயை மாற்றிக்கொண்டே இருப்பது நல்லது. மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று வெண்பூசணியை ஏழுமுறை உங்களது கடையை சுற்றி முச்சந்தியில் ஓரமாக உடைப்பது கண் திருஷ்டியை நீக்க ஒரு சிறந்த வழி. காலை கடை திறந்த உடனேயே முதல் வியாபாரம் ஆவதற்கு முன்பாகவே பிச்சைக்காரர்கள் யாராவது வந்து பிச்சை கேட்டால் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய், தரலாம். அதற்கு மேல் அதிகமாக தானம் கொடுக்க வேண்டாம். கடையில் இருக்கும் பொருட்களையும் தானமாக கொடுப்பது தவறு. முதல் வியாபாரம் அதாவது ‘போனி’ என்று சொல்வார்கள். முதல் வியாபாரம் நடந்த பின்பு தாராளமாக தானம் தர்மம் செய்வது தவறு அல்ல.