எப்படிப்பட்ட தீய சக்தி உங்களை சுற்றி இருந்தாலும், அதன் பாதிப்பு உங்களை நெருங்காமல் இருக்க வேல் பரிகாரம் செய்தால் போதும் …

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்றால், அவருக்கு கெட்ட ஆற்றலினாலும், கெட்ட சக்தியின் ஆதிகத்தினாலும், கண் திருஷ்டியினாலும் பிரச்சினைகளும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்கு நம்முடைய எதிரிகளை சந்தேகப்பட்டு, எதிரிகளை குறை கூறுவதை விட நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வளையத்தை போட்டுக் கொள்வதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். அந்த வரிசையில் எந்த ஒரு ஏவல், பில்லி, சூனியம் கண் திருஷ்டி, கெட்ட சக்தி, எதிர்மறை ஆற்றல் போன்ற பிரச்சினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், முருகப் பெருமானை நினைத்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேருக்கு கெட்ட ஆற்றலின் மூலம் மனநிலை பாதிக்கப்பட்டு, தன் நிலை அறியாமல், கோபம், எரிச்சல் மன உளைச்சல், தேவையில்லாத எண்ணங்கள் தோன்றுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

இப்படியான பிரச்சனைகள் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கோ காத்து கருப்பு பாதிப்பு உள்ளது என்ற சந்தேகம் வந்தால் இந்த பரிகாரத்தை செய்யலாம். முருகப் பெருமானை வேண்டி செய்யக்கூடிய பரிகாரம் தான் இது. பச்சை நிறத்தில் ஒரு பெரிய அளவிலான எலுமிச்சை பழத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கடைகளில் சிறிய அளவிலான வேல் விற்கின்றது. அதில் 9 வேல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒன்பது அகல் விளக்குகள். தீபமேற்ற நல்லெண்ணெய். முருகனுக்கு தினமும் நெய்வேதியம். இந்த பரிகாரத்தை ஒன்பது வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டு பூஜை அறை இல்லாமல், மற்ற ஏதாவது ஒரு இடத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். வாங்கி வைத்திருக்கும் எலுமிச்சை பழத்தை சுற்றி ஒன்பது வேலையும் குத்தி விட வேண்டும். அதை ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சம் பழத்திற்கு பக்கத்தில் 9 அகல் தீபங்களையும் ஏற்றி வைத்து விடுங்கள். முருகப்பெருமானுக்கு நைவேத்தியமாக ஒரு பழமாவது கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.

இப்படி செய்துவிட்டு முருகப்பெருமானின் நாமங்களை உச்சரித்து, இரு கைகளை ஏந்தி உங்களுக்கு இருக்கக்கூடிய பாதிப்பில் இருந்து விரைவாக வெளிவர வேண்டும். எந்த ஒரு கெடுதலும் உங்களை தாக்கக் கூடாது என்றும் வேண்டுதல் வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய், ஞாயிறு, வியாழன், இந்த மூன்று தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் செய்யலாம். முதல் வாரம் எந்த கிழமையில் தொடங்குகின்றீர்களோ, அடுத்து வரும், ஒன்பது வாரங்களும் அதே கிழமையில் தான் செய்யப்படவேண்டும். முதல் வாரம் எந்த நேரத்தில் செய்கிறீர்களோ அதே நேரத்தில் தான், தொடர்ந்து ஒன்பது வாரங்களும் இந்த பரிகாரம் செய்ய வேண்டும். மதியம் 11 மணியிலிருந்து 1 மணிக்குள், இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள் சூரியன் அஸ்தமித்த பிறகு, இரவு 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

எலுமிச்சை பழத்தை மட்டும் வாரத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள். பழைய வேலையே, புது எலுமிச்சை பழத்தில் அப்படியே குத்தி அடுத்தடுத்த வாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அகல் விளக்குகளையும் துடைத்து விட்டு மறுவாரம் பயன்படுத்திக்கொள்ளலாம். நெய்வேதியம் புதியதாக படைக்கப்பட வேண்டும். 9 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பு பரிகாரத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும், கட்டாயம் ஓடும் தண்ணீரில் கொண்டுபோய் போட்டு விட வேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முருகப் பெருமானை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு கெட்ட சக்தியின் மூலம் பாதிப்பு இருந்தாலும், அந்த பாதிப்பு கட்டாயம் குறைந்து, நமக்கு வரக்கூடிய கெடு பலன்களிலிருந்து, நம்மை நாமே கட்டாயம் காத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.