குடும்ப பிரச்சனை மற்றும் கணவன் மனைவி கருத்து வேற்றுமை நிரந்தரமாக தீர இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாமே !!

குடும்பம் என்றாலே பிரச்சனை என்பது நிச்சயமாக இருக்கும். எல்லோர் குடும்பத்திலும் இது நடப்பது தான். அதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பதால் எதுவும் மாறி விடப் போவதில்லை. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். நம் கைகளில் இருக்கும் விரல்களே அதற்கு உதாரணமாக இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பிரச்சனை என்று வரும் பொழுது மட்டும் நீ, நான் என்று பிரித்து பேசுவது பிரச்சனைக்கு தீர்வாகாது. அது இன்னும் பிரச்சினையை இன்னும் அதிகபடுத்துமே தவிர குறையச் செய்யாது என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். நமக்கு ஏதாவது வேண்டுமென்றால் உடனே நாம் ஓடி செல்வது தாயிடமாக தான் இருக்கும் அல்லவா?

தாயைத் தவிர நம் குறைகளை நாம் யாரிடமும் சொல்லி அழ முடியாது. அப்படி சொல்லி அழுதாலும் அதற்கான விரைவான தீர்வு நமக்கு கிடைக்காது. அதே போல் தான் நம் குறைகளை, கஷ்டங்களை நிவர்த்தி செய்ய அம்பாள் ரூபத்தில் இருக்கும் உலகைப் படைத்த சக்தி, நமக்கு தாயாக இருந்து நம் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வாள் என்பதை நம்புங்கள். அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் எண்ணிய எண்ணமெல்லாம் எண்ணியபடியே ஈடேறும் என்பார்கள். அவளிடம் நாம் வைக்கும் பிரார்த்தனைக்கான பரிகாரம் தான் இது. முதலில் உங்களுக்கு இஷ்ட தெய்வமான மிகவும் பிடித்த அம்பாள் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு மாரியம்மன் பிடிக்கும், ஒரு சிலருக்கு துர்க்கை அம்மன் பிடிக்கும், எல்லா அம்மனும் ஒன்று தான். எல்லோருமே தாய் தான். இருந்தாலும் உங்களுக்கு எந்த தாயிடம் அதிக நம்பிக்கை இருக்கிறதோ அந்த அம்பாளின் படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

வீட்டின் பூஜை அறையில் அல்லது நடு ஹாலில் சேர் அல்லது ஸ்டூல் வைத்துக் கொள்ளுங்கள். அதில் அம்மனின் படத்தை பன்னீரால் துடைத்து, சந்தன, குங்குமம் இட்டு, பூக்களை மாலையாகக் கோர்த்து அம்மனுக்கு சாற்றி விடுங்கள். அம்மனுக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கல் செய்து வைப்பது இன்னும் சிறப்பான பலனைத் தரும். செய்ய முடியாதவர்கள் கற்கண்டு அல்லது பாலும், சர்க்கரையும் நிவேதனமாக வைத்து வழிபட்டால் போதுமானது. முழு நம்பிக்கையுடன் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்குவதற்கும், தவறான எண்ணங்கள் நீங்கி புரிந்துணர்வு ஏற்படவும் வேண்டிக் கொள்ளுங்கள். மண் அகல் விளக்கு ஒன்றை தாம்பூலத்தில் வைத்து, அடியில் வெற்றிலையை வைத்து, இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து விளக்கு போடுங்கள். விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். அதன் பின் தூப தீப ஆராதனைகள் காண்பித்து, கற்பூர ஹாரத்தி எடுங்கள். நீங்கள் வைத்திருக்கும் படத்தில் இருக்கும் அம்பாளின் நாமத்தை உச்சரித்து போற்றி போற்றி என கூறுங்கள்.

லலிதா சகஸ்ரநாமம், 108 லக்ஷ்மி அஷ்டோத்திரம், அல்லது 108 போற்றிகள் உச்சரிக்கலாம். மந்திரங்கள் உச்சரித்த பின் உங்கள் மனம் அமைதி அடைவதை நீங்களே உணரலாம். அதன் பின் எழுந்து அந்தப் படத்தை சுற்றி ஐந்து முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் படத்தின் முன்பு மண்டியிட்டு நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். இது போல் ஐந்து முறை செய்து முடித்த பின் அமைதியாக வந்து படத்தின் முன் அமர்ந்து. ஒரு இரண்டு நிமிடம் மனதிற்குள் முழு நம்பிக்கையுடனும் பக்தி சிரத்தையுடனும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம். அதிலும் குறிப்பாக பஞ்சமி அல்லது பௌர்ணமி திதிகளில் செய்வது இன்னும் சிறப்பான பலன்களை தரும். பஞ்சமி மற்றும் பௌர்ணமி திதிகளில் அஷ்டலட்சுமி தெய்வங்களுக்கும் தனி சக்தி உண்டு. எனவே அந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்தால் இன்னும் சிறப்பான பலனைத் தரும். குடும்ப பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டைகள், சகோதர சகோதரிகளுக்கு இடையே உண்டாகும் மன சங்கடங்கள் போன்றவை நீங்குவதற்கு இந்த பரிகாரத்தை முறையாக மேற்கொள்ளலாம். தாயைப் போல அம்பாளும் உங்களுக்கு தாயாக இருந்து உங்களது குறைகளை அனைத்தையும் தீர்த்து வைப்பாள் என்று கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.