குல தெய்வத்தை நினைத்து குழந்தை வரம் வேண்டி இந்த தீபத்தை ஏற்றினால் கை மேல் பலன் நிச்சயம் !!

குலவிருத்தி அடைய வேண்டும் என்றால், அது குலதெய்வத்தின் கையில்தான் உள்ளது. வாழையடி வாழையாக குலம் தழைக்க வேண்டும் என்று தான் நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். இதன்படி வாழைத்தண்டு திரியை வைத்து ஒரு தீபத்தை முறையாக, நம் முன்னோர்கள் சொல்லியபடி ஏற்றுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்றால், அதை முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. குழந்தை வரத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும், சிகிச்சையும் செய்து கொள்ள வேண்டும். ஆன்மீக ரீதியாக இந்த தீபத்தையும் ஏற்றி பாருங்கள். நிச்சயமாக ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்பது தான் நம்பிக்கை. இந்த தீபத்தை முறைப்படி எப்படி ஏற்றலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வாழைத்தண்டு திரியானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதைவிட வாழைத்தண்டை வெட்டும்போது அதன் உள்ளே நார் வரும். அந்த நாரை சிறிது சிறிதாக எடுத்து சேகரித்து ஒரு திரியை வீட்டிலேயே தயாரிப்பது இன்னும் சிறப்பு. இதை வீட்டில் செய்வதற்கு எல்லோராலும் முடியாது. நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாழை தண்டு திரியை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தீபத்தை 12, 24, 48 இந்த மூன்று கணக்கில் ஒன்றை தேர்ந்தெடுத்து, இந்த தீபத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். வளர்பிறை நாளில் தொடங்க வேண்டும். நல்ல நாள் பார்த்து ஏற்ற தொடங்குங்கள். தீபத்தை ஏற்றி வழிபடும் நாட்களில் அசைவ சாப்பாடு கட்டாயம் சாப்பிட கூடாது. தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்கள். மண் அகல் தீபம் ஒன்று, வாழைத்தண்டு திரி, வெற்றிலை ஒன்று(வெற்றிலை சேதாரம் இல்லாமல் இருக்க வேண்டும்), மஞ்சள், சிறிதளவு குங்குமம், சுத்தமான பசு நெய், எருமை நெய் கட்டாயம் கலந்து இருக்கக்கூடாது.

சுத்தமான பசுநெய் அவசியம். செம்பு தட்டு. செம்பு தட்டின் மேல், ஒரு வெற்றிலையை வைத்து, வெற்றிலையின் மேல் சிறிதளவு மஞ்சள் தூளை கொட்டி, மஞ்சளின் மேல் அகல் தீபத்தை வைத்து, சுத்தமான பசு நெய் ஊற்றி, வாழைத்தண்டு திரி போட்டு தீபத்தை ஏற்ற வேண்டும். தீபம் கிழக்கு நோக்கி எறிய வேண்டும். வெற்றிலையின் காம்பு வடக்கு பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும். வெற்றிலையின் வால் பகுதி தெற்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபமானது ஒரு மணி நேரம் வரை எரியும். அதன் பின்பு அதை தானாக குளிர விடாமல், ஒரு பூவை வைத்து மலை ஏற்றி விடுங்கள். அகல்விளக்கிற்கு கீழே வைத்த சிறிதளவு மஞ்சளை சமைப்பதில் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்திலும் தேய்த்து குளிக்கலாம்.

நெற்றியிலும் இட்டுக் கொள்ளலாம். இப்படியாக தொடர்ந்து நம்பிக்கையோடு குலதெய்வத்தை நினைத்து இந்த தீபத்தை ஏற்றி, உங்களது குலம் விருத்தியாக வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். தீபத்தை ஏற்றி வைத்து பெண்களாக இருந்தாலும் தீபத்தை தொட்டு கண்களில் வைத்துக் கொள்ளும்போது உங்களுடன், உங்களது கணவர் இருந்தால் மிகவும் சிறந்தது. தம்பதியாக மனமுருகி கேட்கப்படும் வரத்தை அந்த இறைவன் உடனே கொடுப்பார் என்பது நம்பிக்கை. மருத்துவ ஆலோசனை பெறுபவர்கள் மருத்துவத்தை நிறுத்திவிட வேண்டாம். மருத்துவத்தோடு சேர்த்து ஆன்மிக வழிபாட்டையும் தொடருங்கள். நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.