சிவன் மலையில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் வேல் !! இதில் அடங்கியுள்ள உண்மையான பின்னணி பற்றி தெரியுமா ???

நம் நாட்டில் இருக்கக்கூடிய புராதன கோவில்களில், ஒவ்வொரு கோவில்களுக்கு என்றும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. அந்த வரிசையில் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும், சிவன் மலை மீது உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே அங்கு வைக்கப்பட்டிருக்கும் ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ தான். அந்தப் பெட்டியில் என்ன பொருள் வைக்க வேண்டும் என்பதை முருகப் பெருமானே, பக்தர்களின் கனவில் வந்து கூறுவதாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எந்த பக்தரின் கனவில் முருகப்பெருமான் வந்து, எந்தப் பொருளை அந்தப் பெட்டியில் வைக்கும்படி சொல்கிறாரோ, அந்த குறிப்பிட்ட பக்தர், அந்தக் கோவிலுக்கு, முருகப்பெருமான் கனவில் வந்து சொன்ன அந்தப் பொருளை காணிக்கையாக, செலுத்துவார். அதன்பின்பு பூ போட்டு பார்த்து அந்தப் பொருளை, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கலாமா? வேண்டாமா? என்பதை அந்த கோவில் குருக்கள் முடிவு செய்வார். இதுதான் காலம்காலமாக அந்த கோவிலில் பின்பற்றி வரக்கூடிய பழக்கமாக இருந்து வருகிறது.

அந்தப் பெட்டியில் வைக்கும் பொருளுக்கு ஏற்றவாறு, தமிழ்நாட்டில் சம்பவங்களும் நிகழும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்துவருகிறது. இதன்படி சில நாட்களுக்கு முன்பாக ஒரு பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி மஞ்சளை அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்தவகையில் கடந்த 29ஆம் தேதி அன்று, கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் கிழங்கில், மஞ்சள் கயிறு கட்டி பக்தர்கள் வைத்து வழிபட்டு வந்தார்கள். மஞ்சள் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஒரு பொருள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த சமயம், அந்த பெட்டியில் வைக்கப்பட்ட மஞ்சளை தொடர்புபடுத்தும் வகையில், நம்முடைய நாட்டில் கொரானா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது. அந்த வைரஸை தடுப்பதற்காகத்தான், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சளை இறைவன் அந்தப் பெட்டியில் வைக்க சொல்லியிருக்கிறார் என்ற சர்ச்சை மக்களிடையே எழுந்தது.

மஞ்சளை, ஆண்டவன் அந்தப் பெட்டியில் வைக்க சொன்ன போது இந்த உண்மை பக்தர்களுக்கு புரியாமல் போனாலும், நோய்த்தொற்று ஏற்பட்ட பின்பு புரிந்தது ஆச்சரியப்படக் கூடிய விஷயம்தான். இதேபோல் இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், வேல் வைத்து வழிபட வேண்டும் என்று, நெல்லையை சேர்ந்த ஒருவருடைய கனவில் முருகப்பெருமான் ஆணை பிறப்பித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த அந்த பக்தரின் கனவில் வந்ததுபோல் வேலை வைக்கலாமா என்று பூப்போட்டு பிரசன்னம் பார்த்துவிட்டு, ஆண்டவனின் உத்தரவு கிடைக்கப்பட்ட பின்பு, தற்போது ஒரு வெள்ளி வேலை, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபட்டு வருகின்றார்கள் பக்தர்கள். இந்தக் கனவினை பற்றி நெல்லையைச் சேர்ந்த அந்த பக்தரிடம் கேட்டபோது, அந்த பக்தர் இதுநாள்வரை சிவன்மலை முருகன் கோவிலுக்கு வந்ததே இல்லை என்று கூறுகின்றார். இது இன்னும் நம்மை ஆச்சரியத்தில் முழ்கடிக்கிறது. இதனடிப்படையில் பார்த்தோமேயானால், வேல் என்பது தமிழ் கடவுள் முருகனின் கையில் வைத்திருக்கும் ஒரு ஆயுதம்.

சூரசம்ஹாரத்திற்க்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம். பார்வதி தேவி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் உள்ளடக்கி தன் மகனுக்காக கொடுத்த ஆயுதம். ஆக மொத்தத்தில் வேல் என்பது அதர்மத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இன்றைக்கு நம் உலகம் அதர்மத்தால் சூழப்பட்டுள்ளதால் தான், நமக்கு இவ்வளவு பிரச்சனைகள் என்று கூறுகிறது ஒரு தரப்பு பிரிவு. அதாவது அதர்மத்துக்கு கிடைத்த தண்டனை தான் இந்த அழிவு என்று பல பேரின் கருத்தும் இருந்து வருகிறது. கண்ணுக்குத் தெரியாத கிருமி மூலம் உலகத்தின் ஒரு பகுதியை நாம் இழக்கும் சூழ்நிலைகே போய்விட்டோம். தலைவிரித்தாடும் அதர்மத்தை வதம் செய்வதற்காகத்தான் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இந்த வேலை வைக்கும்படி சொல்லி இருக்கின்றாரோ? அல்லது அதர்மத்தோடு சேர்த்து கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸையும் அழிப்பதற்கு அந்த முருகன், வேல் அவதாரம் எடுத்துள்ளாரா? என்ற சந்தேகம் பக்தர்களின் மனதில் இருக்கிறது. எது எப்படியாக இருந்தாலும் சரி. அதர்மம் அழிந்து, அதனுடன் இந்த கொரானா வைரஸும் அழிய வேண்டும் என்று அந்த வேலனை மனதார பிரார்த்தனை செய்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.