தடைகளைத் தகர்த்தெறியும் முருகன் வழிபாடு !! ஆறுமுகனை 6 நாட்கள் இப்படி வழிபாடு செய்தாலே வாழ்க்கையில் என்றுமேவெற்றிமுகம் தான் !!

வாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டங்களை எதிர்கொண்டாலும், வெற்றி என்பதே சிலபேருக்கு கிடைக்காது. எதைத் தொட்டாலும் தடைகள். எதை தொட்டாலும் தோல்வி. எதை தொட்டாலும் பிரச்சனை. இப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், ஆறுமுகனின் பாதங்களைப் பற்றிக் கொள்வது தான் ஒரேவழி. ஏனென்றால் வெற்றி கடவுள் முருகன் தான். உங்களது வாழ்க்கையில் வெற்றிகள் குவிய வேண்டும் என்றால், தடைக் கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டுமென்றால், ஆறு நாட்கள், ஆறுமுகனை நினைத்து இந்த வழிபாட்டை முழுமனதோடு செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் ஆறு முகங்களைக் கொண்ட முருகப்பெருமானின் திருவுருவப்படம் இருந்தால், அந்த திருவுருவப் படத்தின் முன்பாக இந்த வழிபாட்டை செய்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும். அப்படி ஆறுமுகம் கொண்ட, முருகனின் திரு உருவம் இல்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் முருகனின் திரு உருவ படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது.

ஆறு மண் அகல் தீபத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். ஆறு வகையான புஷ்பங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மல்லி, முல்லை, துளசி, அரளி பூ, செம்பருத்தி, சாமந்தி, வில்வம் இந்த புஷ்பங்கள் கிடைத்தால் பூஜை மேலும் சிறப்படையும். ஆறுமுகனுக்கு நெய்வேத்திய படைப்பதற்கு ஆறு பழங்கள் கட்டாயம் தேவை. ஆறு பழமும், ஆறு வகையாக இருப்பது சிறப்பு. எல்லாப் பொருட்களையும், ஒரு தாம்பாளத் தட்டில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜையை தொடங்குவதற்கு முன்பாக உங்களுக்கு உள்ள தடங்கல்களை, முருகப்பெருமானிடம் மனதார சொல்லி, எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.இப்போது பூஜையை தொடங்கலாம். முதல் முகமான முருகப்பெருமானின் முகத்தை வேண்டிக்கொண்டு, மல்லி அல்லது முள்ளை பூவை உங்கள் கைகளால் எடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். முருகப்பெருமானின் இரண்டாவது முகமான வாமதேவ முகத்தை நினைத்துக்கொண்டு, துளசி இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

முருகப்பெருமானின் மூன்றாவது முகம், அகோர முகம். மூன்றாவது முகத்திற்கு அரளி பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காவது முகமான தத்புருஷ முகத்திற்கு செம்பருத்தி பூ அல்லது சாமந்திப் பூக்களால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பானது. ஐந்தாவது முகமான சிவ முகத்திற்கு, வில்வ இலையால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறாவது முகமான அதோமுகத்திற்கு கையில் வைத்திருக்கும் அனைத்து பூவையும் முருகப்பெருமானின் பாதத்தில் போட்டு அர்ச்சனையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு முகத்தை நினைத்து, ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் போதும் 11 முறை ‘ஓம் முருகா சரணம்’ என்ற மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு முருகப்பெருமானின் ஆறுமுகத்தினிடைய, பெயரை எல்லாம் சொல்ல முடியவில்லை, என்றாலும் பரவாயில்லை. முதல் முகம் என்று உச்சரித்து விட்டு, முதலில், சொல்லப்பட்டிருக்கும் பூவை முருகப்பெருமானின் பாதங்களில் போட்டு ‘ஓம் முருகா சரணம்’ ‘முருகா சரணம்’ என்று பதினோரு முறை உச்சரியுங்கள். இரண்டாவது முகம் என்று சொல்லிவிட்டு, இரண்டாவதாக சொல்லப்பட்டிருக்கும் துளசி இலைகளை போட்டு 11 முறை ‘ஓம் முருகா சரணம்’ மந்திரத்தை உச்சரித்தால் போதும். இவ்வாறு உங்களது பூஜையை, இதே முறைப்படி ஆறு நாட்கள், தொடர்ந்து செய்து பாருங்கள். எப்படிப்பட்ட தடையும் காணாமல் போய்விடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.