தர்மம் செய்யாதே என்றாரா ஸ்ரீ கிருஷ்ணர் ?? உண்மையில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசித்தது என்ன ??

கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் பொழுது நடந்த சுவையான சம்பவம் இது. நாம் தர்மம் செய்வது சரியானதா? தர்மம் செய்ய வேண்டுமா? அல்லது செய்யக் கூடாதா? அதை எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? இப்படி பல கேள்விகளுக்கு நமக்கு அவர் அளித்த பதில்கள் மூலம் விடை கிடைக்கும். அப்படி அர்ஜுனனும், கிருஷ்ணரும் என்ன பேசிக் கொண்டார்கள்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். மனிதராகிய நமக்கு வாழ்ந்து முடித்த பிறகு இறுதியில் கிடைக்க வேண்டியது மோட்சம், அதாவது சொர்கம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு மோட்சத்தை அடைய விரும்பினால் நீ தர்மம் செய் என்று கூறுகிறார். அதற்கு அர்ஜுனன், நான் தர்மம் செய்தால் அதனால் வரும் பலம் எனக்கு கிடைத்து விடும் அல்லவா? பிறகு எப்படி நான் மோட்சத்திற்கு செல்ல முடியும்? என்று கேட்டாராம். அதற்கு கிருஷ்ண பரமாத்மா, அப்படி என்றால் நீ தர்மமே செய்யாதே என்று கூறினாராம். புண்ணியம் செய்யாமல் இருந்தாலும் மோட்சம் கிட்டாது அல்லவா? என்று கேட்டான் அர்ஜுனன். உடனே இப்போது நமக்கு குழப்பம் எழுகிறது அல்லவா? தர்மம் செய் என்கிறார்கள். செய்யாதே என்றும் கூறுகிறார்கள். எதைத் தான் நாம் சரி என எடுத்துக் கொள்வது? என்று மனம் குழம்பும். அதற்கு கிருஷ்ணன் அளித்த பதிலை கேளுங்கள். அர்ஜுனா!

உனக்கு மோட்சத்தை கொடுப்பவன் நான் தான். நீ மோட்சம் செல்ல வேண்டும் என்றால் எனக்கு பிடித்ததை செய்ய வேண்டும். அதாவது புண்ணியம் செய்ய வேண்டும். தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். ஆனால் நீ செய்யும் பொழுது உனக்காக செய்யக்கூடாது. அதாவது நீ தர்மம் செய், ஆனால் நான் தான் செய்தேன் என்று மனதில் நினைக்காமல் செய். அப்படி நீ செய்தால் நீ தர்மம் செய்தாலும் அதன் பலம் உன்னை சேராது. அதை நான் பார்த்துக் கொள்வேன் என்று கூறினாராம். இதைத்தான் இன்று நாம் யாரும் புரிந்து கொள்வதே இல்லை. இதைக் கேட்டு இன்னும் மனம் குழம்ப தான் செய்யும். கடவுளுக்கு எது பிடிக்கும் என்று நமக்கு எப்படி தெரியும்? அது எப்படி தர்மம் செய்யும் பொழுது நான் செய்கிறேன் என்று நினைக்காமல் செய்வது? என்ற கேள்விகளும் எழும். எந்த ஒரு விஷயத்திலும் நன்மை தீமை என இரண்டு பக்கங்கள் உண்டு.

இதை சாதாரண ஒரு மனிதனால் பிரித்து பார்க்க முடியாது. முற்றும் துறந்த துறவிகளும், ஞானிகளும், ரிஷிகளும் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நாம் செய்ய இருக்கும் செயல்களால் விளையப் போவது நன்மையா? தீமையா? என்பது நமக்கு தெரியாது. உதாரணத்திற்கு நம் கண் முன்னே ஒரு புலி தன் குட்டியின் பசிக்காக ஒரு மானை வேட்டையாடுகிறது என வைத்துக் கொள்வோம். இந்த இரண்டில் எது இப்போது சரியானது? நாம் மானை காப்பாற்ற நினைத்தால் குட்டிப்புலியின் நிலைமை என்னாவது? மானை காப்பாற்றாமல் விட்டால் மானின் உயிர் போகுமே! ஒரு செயல் நாம் செய்யும் பொழுது அதனால் நமக்கு கிடைக்க போவது தர்மமா? அதர்மமா? என்பதை நம்மால் யூகித்து சொல்லவே முடியாது. நாம் நல்லதை தான் நினைத்து எதை வேண்டுமானாலும் தைரியமாக செய்ய வேண்டும். அதனால் நமக்கு வெற்றி கிடைக்குமா? தோல்வி கிடைக்குமா? புண்ணியம் கிடைக்குமா? பாவம் கிடைக்குமா? என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்க கூடாது. நமக்கு என்ன கிடைக்கும் என்று பிரதிபலனை பார்க்கக்கூடாது என்பது தான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். நல்லது செய், தர்மம் செய், புண்ணியம் செய் அதனால் கிடைக்கும் பலனை இறைவனிடம் கொடுத்து விட வேண்டும்.