திருமாங்கல்ய காணிக்கை செலுத்துவதில் பலன் இல்லையா ?? சாஸ்திரம் என்ன சொல்கிறது ??

திருமணமான பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம் இவைதான் மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட மங்களகரமான பொருட்கள் எல்லாம், பெண்களிடத்தில் நிரந்தரமாக கடைசிவரை நிலைத்திருக்க வேண்டும் என்றால், அதற்கு அந்தப் பெண்ணினுடைய கணவர் நீண்ட நாட்கள் வரை, நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். பல பெண்கள் தங்களுடைய கணவரும், குடும்பமும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பூஜை புனஸ்காரங்களையே மேற்கொள்கிறார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஒரு திருமணமான பெண்ணுக்கு தன்னுடைய கணவரின் மூலம், ஏதாவது பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், அந்த பிரச்சனை உச்சக்கட்டத்தை அடைந்து, கணவனும் மனைவியும் பிரியும் பட்சத்தில், தன்னுடைய திருமண வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய மஞ்சள் குங்குமத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன் கழுத்தில் அணிந்திருக்கும் மாங்கல்யத்தை, கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்வார்கள்.

குடும்ப சிக்கல்களின் மூலம், அந்தப் பிரச்சினை விவாகரத்து வரை சென்றிருந்தாலும், தன்னுடைய கணவர், தன்னை விட்டு பிரியப் போகிறார் என்று தெரிந்துகொண்ட தருணத்தில், அல்லது தன்னுடைய கணவருக்கு உயிருக்கு ஏதாவது பிரச்சினை என்றால், வேறு வழியே இல்லாமல் இறைவனின் பாதங்களில் சரணடைந்து தன்னுடைய கணவரையும், வாழ்க்கையையும் காப்பாற்றி தரும்படி வேண்டிக் கொண்டு, தன் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி விடுவார்கள், பெண்கள்! இது ஒரு மிகப்பெரிய வேண்டுதல். இப்படிப்பட்ட வேண்டுதலை இறைவனிடம் வைக்கும் பட்சத்தில், அதற்கான பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை‌. பெண்கள் மாங்கல்ய காணிக்கை செலுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை. சொல்லப்போனால், மாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தினால், அவர்களது இல்லற வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும், அந்த ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், நம்மில் பல பேருக்கு தெரியாத சாஸ்திரம் இதில் மறைந்துள்ளது. ஒரு பெண்ணினுடைய ஜாதகத்தில் ஏதோ ஒரு தோஷம் இருப்பதால் தான், கணவரோடு தீர்க்கமுடியாத பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறாள். அந்த தருணத்தில் அந்த தோஷம் நீங்குவதற்காக, தான் கட்டியிருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்து, இறைவனின் சந்நிதானத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் சேர்த்து விடுகின்றாள். அப்போது, அவளுக்கு இருந்த தோஷம் நீங்கி விட்டது என்பதுதான் அர்த்தம். திரும்பவும் புதியதாக ஒரு திருமாங்கல்யத்தை செய்து அந்தப் பெண், கழுத்தில் அணிந்து கொண்டால், அந்த தோஷமானது திரும்பவும், அந்தப் பெண்ணிடமே வந்து விட்டது என்று தானே அர்த்தம். ஆகவே, திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்திய பெண்கள், மீண்டும் புதிய திருமாங்கல்யத்தை செய்து கழுத்தில் போட்டுக் கொள்ளக்கூடாது, என்ற குறிப்பு நம்முடைய சாஸ்திரத்தில் உள்ளது. அதாவது, அவரவர் குடும்ப வழக்கப்படி, கருமணி அல்லது சிவப்பு மணி, நாணல், மஞ்சள் கயிறு, மாங்காயைப் போட்டு இவைகளை எல்லாம் போட்டுக் கொள்ளலாம்.

ஆனால், அந்தத் தாலி குண்டுகள் இருக்கும் அல்லவா? அந்த குண்டுகளை மட்டும், புதியதாக செய்து போட்டுக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக மகாலட்சுமி தாயார் இருப்பது போன்ற டாலரை அணிந்து கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் முறைதான் இது. நிறைய பேருக்கு இந்தக் குறிப்பு தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. ஏனென்றால், தாலியை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்திய பெண்கள், மீண்டும் அதே போல் தாலியை செய்து அணிவதை தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படி செய்யும் பட்சத்தில், நீங்கள் காணிக்கையாக செலுத்திய அந்த பரிகாரத்திற்கு முழுமையான பலனை அடைய முடியாது என்ற கருத்தும் உள்ளது. சில பெண்களுக்கெல்லாம் தங்களுடைய தாலியை காணிக்கையாக செலுத்திய பின்பும், பிரச்சனை தீராமல் இருப்பதற்கு, இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.