தீராத கஷ்டங்களும் தீர்ந்து விடும் ஆடி கிருத்திகை விரதம் இருந்தால் !! முருகப் பெருமானை வேண்டி இப்படி விரதம் இருந்தால் ??

தோஷங்களை நிவர்த்தி செய்து, தடைகளை தகர்த்தெறிந்து, பக்தர்களின் வாழ்க்கையை சிறப்பிக்க வைக்கும் ‘கலியுகத்தின், கண்கண்ட கடவுள் கந்த பெருமானுக்கு’ மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்தான் இந்த ஆடி கிருத்திகை! பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்தால், நமக்கு இருக்கும் தோஷங்கள் கூட நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆடி கிருத்திகையை யாரெல்லாம் அவசியம் இருக்க வேண்டும்? கிருத்திகை விரதத்தை எப்படி கடைபிடிப்பது? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆடி மாத கிருத்திகை, ஆடி 1ஆம் தேதி வருகின்றது. அதாவது, ஆங்கில தேதியில் 16-07-2020. ஆடி கிருத்திகை தினத்தன்று குறிப்பாக, நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி முருகப்பெருமானை வேண்டி விரதம் இருக்கலாம். திருமணம் நிச்சயக்கப்பட்டவர்கள் நல்லபடி திருமணம் நடக்கவேண்டும் என்று முருகப் பெருமானை நினைத்து விரதம் இருக்கலாம்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் விரதம் இருக்க வேண்டும். இதே போல், சில பேர் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல், அதிகப்படியான விருத்தியையோடு தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருவார்கள். அப்படி வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருப்பவர்களும், முருகப் பெருமானை நினைத்து இந்த தினத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகள் தங்களுடைய குடும்பத்தில், சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டிக்கொண்டு, இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மன உறுதியை அதிகப்படுத்தக்கூடிய சக்தி முருகன் வழிபாட்டில் உடனடியாக கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எப்போதும்போல் விரதம் என்றால், முந்தைய நாளே வீட்டை சுத்தப்படுத்தி விட்டு, பூஜை அறையை சுத்தப்படுத்தி விட்டு, தயாராகிக் கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, முடிந்தால் முருகப்பெருமானை தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்லலாம். இல்லை என்றால், வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு, அரளி பூவால் அலங்காரம் செய்து, உங்களால் முடிந்த நைவேதியத்தை படைத்து, நெய்தீபம் ஏற்றி வைத்து உங்களது விரதத்தை தொடங்கலாம்.

திருமணமாகாதவர்களாக இருந்தால், உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால், ஆடிக் கிருத்திகை தினத்தன்று எதுவுமே சாப்பிடாமல் கூட மாலை 6 மணிவரை விரதத்தை மேற்கொள்ளலாம். மாலை 6 மணிக்கு முருகப்பெருமானுக்கு பூஜை செய்து விரதத்தை முடித்து விட்டு உணவு அருந்தலாம். வெறும் வயிற்றோடு விரதமிருக்க முடியாதவர்கள், வெறும் பால் பழம் மட்டும் குடித்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவும் முடியாதவர்கள் மூன்றுவேளை சாப்பிட்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு தவறும் இல்லை. கிருத்திகை தினத்தன்று, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இப்படிப்பட்ட பாடல்களை ஒலிக்கச் செய்து உங்களது காதுகளில் கேட்பது புண்ணியத்தை தேடித்தரும். நீங்கள் குறிப்பாக திருமணமாகாதவர்களாக இருந்தால், திருப்புகழில் சொல்லப்பட்டிருக்கும் இந்த பாடலை முருகப் பெருமானை நினைத்து, மனமுருகி ஒரே ஒரு முறையாவது உங்களது வாயால் உச்சரிக்கவேண்டும். கட்டாயம் அடுத்த ஆடிக்கிருத்திகைக்குள் உங்கள் வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான திருப்புகழ் பதிகம் இதோ!

திருச்செந்தூர் திருப்புகழ்: விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்துவெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம்வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்துகுறுகாயோ மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்தமதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்தஅதிதீரா அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு மடியா ரிடைஞ்சல்களைவோனே அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து லைவா யுகந்தபெருமாளே இந்தப் பாடலை மனதார உச்சரித்து விட்டு, அப்படி உங்களுக்கு இந்தப் பாடலை உச்சரிக்க முடியவில்லை என்றாலும், முருகப் பெருமானை மனதார நினைத்து, ‘உன் கழுத்தில் இருக்கும் மாலையை, எனக்குத் தந்து, திருமண வாழ்க்கையை அமைத்து தர வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டாலே போதும். முருகப்பெருமானின் பரிபூரண ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துவிடும். உங்களுக்கு வேலையில் முன்னேற்றம் வேண்டும். தொழில் முன்னேற்றம் வேண்டும். குழந்தைகளுக்கு படிப்பில் முன்னேற்றம். கடன் பிரச்சனை தீர வேண்டும். அதிகப்படியான வருமானம் கிடைக்க வேண்டும். மன உறுதி அதிகரிக்க வேண்டும். என்ற எந்த வேண்டுதலாக இருந்தாலும் சரி, அந்த வேண்டுதலை ஆடி கிருத்திகை நட்சத்திரத்தன்று வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிக்கிருத்திகை தினத்தை எல்லோரும் சிறப்பாக வழிபாடு செய்து, முருகப் பெருமானின் அருளாசி பெற வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.