தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பலகஷ்டம் தான் வரும் !! ஏன்னு நீங்களும் தெரிஞ்சிக்கணுமா ??

ஓடியாடி கலைத்து விட்டு நாம் நிம்மதியாக தூங்குவது இரவில் தான். அந்தக் கொஞ்ச நேரம் கூட நமக்கு நிம்மதியாக இல்லை என்றால் மனம் மோசமாக பாதிக்கும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நீங்கள் தூங்கும் பொழுது உங்கள் பக்கத்தில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் தயவு செய்து தூக்கி வேறு இடத்தில் வைத்து விடுங்கள். இந்த பொருட்களெல்லாம் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்துவின் படி இந்த பொருட்கள் உங்களுக்கு பிரச்சனைகளை தரும். அப்படியான பொருட்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். முதலாவதாக தூங்கும் பொழுது உங்கள் அருகில் சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் எதுவுமே இருக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக பூட்டு-சாவி, வாகன சாவி, காந்தம் போன்ற எந்த பொருட்களும் தலையணைக்கு அருகில் வைத்து தூங்குவது தவிர்த்து விடுங்கள்.

இதனால் பணவரவு தடைபடும் என்று வாஸ்து கூறுகிறது. சில பேர் இரவு நேரத்தில் போட வேண்டிய மாத்திரை, மருந்துகளை போட்டு அப்படியே பக்கத்தில் வைத்து தூங்கி விடுவார்கள். நாம் இரவில் தூங்கும் பொழுது கட்டாயம் நம்முடைய தலையணைக்கு அருகில் மாத்திரை, மருந்துகள் போன்ற மருத்துவரீதியான எந்த விஷயங்களும் இருக்கவே கூடாது. இவை எதிர்மறை ஆற்றல்களை மனதிற்குள் வெளியிடும். இதனால் நிம்மதியான தூக்கம் வராது என்று வாஸ்து கூறுகிறது. தூங்கும் பொழுது உங்கள் அருகில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மணி பர்ஸ், வாலட் போன்ற பணம் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களும் வைத்திருக்க கூடாது. இவற்றை அலமாரியில் அல்லது பீரோவில் வைத்து விடுங்கள். இவைகள் தூங்கும் போது தலையணைக்கு அருகில் இருந்தால் நிச்சயம் பண கஷ்டம் வரும். நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரலாம். வாஸ்துவின் படி நாம் தூங்கும் பொழுது நமது தலையணைக்கு அருகில் நியூஸ் பேப்பர் மற்றும் பத்திரிக்கை போன்ற பொருட்களை வைத்துக் கொள்ளக்கூடாது. இதனால் வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டாகும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

சிலர் புத்தகம் படிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். படித்து விட்டு அப்படியே தூங்கி விடுவார்கள். புத்தகங்களை தலையணைக்கு அருகில் வைக்காமல் கட்டிலுக்குக் கீழே வைத்து விட்டு தூங்கலாம். தூங்கும் போது திடீரென இரவு நேரத்தில் எழுந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு இருக்கும். தண்ணீர் என்பது சந்திரனை குறிப்பதால் தண்ணீர் பாத்திரம் அல்லது குடம் போன்றவற்றை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. அதற்கு பதிலாக ஒரு சிறிய பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளுங்கள். எப்போதும் படுக்கை அறை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் உட்கார்ந்து தலைவாரக் கூடாது. அப்படி செய்யும் போது தலைமுடி அல்லது தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் அவற்றில் படிந்திருந்தால் வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும். அது போல் பழைய அல்லது அழுக்கு துணிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

ஒரு சிலர் வெளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும் வேறு உடையை மாற்றுவார்கள். அந்த பழைய உடையை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். இப்படி செய்வதால் உங்களை சுற்றி எதிர்மறை ஆற்றல் ஊடுருவ கூடும் என்று வாஸ்து சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதனால் தேவையில்லாத கனவுகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. தூங்கும் பொழுது உங்கள் அருகில் மின்சாரம் சார்ந்த எந்த நவீன உபகரணங்களும் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மொபைல் போன், வீடியோ கேம், டிவி, லேப்டாப் போன்ற எந்த மின்சார பொருட்களும் நாம் தூங்கினாலும் அவைகள் தூங்குவதில்லை என்பதால் அவற்றை அருகில் வைத்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. அது போல் தூங்கும் பொழுது அறையில் பக்கத்தில் கட்டாயம் காலணிகளை, ஷூ போன்றவற்றை வைத்துக் கொள்ளக் கூடாது. இவற்றால் எதிர்மறை ஆற்றல்கள் எளிதில் ஊடுருவ வாய்ப்புகள் உண்டு. இவைகள் வாஸ்து பிரச்சனைகளை உண்டாக்கி வீட்டில் தேவையில்லாத பண கஷ்டங்களையும், சங்கடங்களையும் உருவாக்கும். இவற்றை முறையாக கடைபிடித்தால் நிச்சயம் நல்ல உறக்கமும் வரும்.