நண்பர்கள் வட்டத்தில் நிறைய துரோகங்கள் இருந்தன: பாலாஜி முருகதாஸ் போட்ட உருக்கமான பதிவு

என் நண்பர்கள் மற்றும் வட்டங்களிலிருந்து நிறைய துரோகங்கள் இருந்தன என்று பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டிற்கான பிக் பாஸ் போட்டி கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. இதில் ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள். ஒவ்வொரு வாரத்துக்கு இடையிலும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.

இதில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மொத்த பதிவான 30 கோடி ஓட்டுகளில், ஆரிக்கு 16 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. பாலாஜி இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளரான ஆரிக்கு சமூக வலைதளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்குப் பின் முதன்முறையாக இரண்டாம் இடம்பெற்ற பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

“வணக்கம் மச்சான்ஸ், தம்பிகளா, சகோதரிகளா. இது பாலா. ரொம்ப நன்றி மக்களே. நான் உள்ளே இருக்கும்போது என் நண்பர்கள் மற்றும் வட்டங்களிலிருந்து நிறைய துரோகங்கள் இருந்தன. ஆனால், நீங்கள் எனக்கு ஆதரவுத் தூணாக நின்றீர்கள். என்றும் நன்றியுடன் இருப்பேன். எந்த வருத்தங்களும் இல்லை. மனப்பூர்வமாக விளையாடினேன். இந்த 105 நாட்களை ரசித்தேன்.

இந்த அற்புதமான பயணத்தில் என்னை ஆதரித்த என் ரசிகர்கள் அனைவருக்கும், மேலும் என் திறமை மீது சந்தேகம் கொண்டு என்னைத் தொடர்ந்து கடினமாக உழைத்துச் சிறக்க உந்தியவர்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். மீண்டும் பெரிய நன்றி”.

இவ்வாறு பாலாஜி தெரிவித்துள்ளார்.