நந்தியின் வாயில் கட்டப்பட்டுள்ள இந்த மஞ்சள் துணிக்கு பின் உள்ள ரகசியம் தெரியுமா ??

கொரானா வைரஸின் விபரீத விளைவுகளை, புரிந்து கொள்ளாமல் பலபேர், பல விதமான வதந்திகளை சமூகவலைதளங்களில் இன்றளவும் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அந்த வதந்தி களின் வரிசையில், இன்று நம்முடைய ஆன்மிகமும் சிக்கியுள்ளது என்பதை நினைக்கும் போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. கொரோனாவோடு தடர்பு படுத்தி, ஒரு கோவிலில் நந்தியின் வாயில் மஞ்சள் நிற துணி ஒன்று கட்டபுள்ள புகைப்படும் சமூக வழியத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நந்தியின் வாயில் துணி கட்டப்பட்டிருப்பதென்னவோ உண்மை தான். ஆனால் அதற்க்கு ஆன்மிகம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன. அந்த நந்தி சிலை எந்த கோவிலில் உள்ளது? நந்தி பகவானுக்கு அங்கு மஞ்சள் நிற துணி கட்டப்பட்டிருப்பது ஏன் என்பன போன்ற பல தகவல்களை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீசைலம் அருள்மிகு ஸ்ரீ பிரம்மராம்பிகா ஸமேத ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி ஆலயம். வீரசைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், வீரசைவ காரணாகம முறைப்படியே இன்றளவும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. சைவ முறையின் பாரம்பரியப்படி இத்திருத்தலங்களில் இருக்கும் நந்தி கேஸ்வரருக்கு நித்திய நெய்வேதியம் கிடையாது. அதாவது தினம்தோறும் பிரசாதம் படைக்கப்பட்டு பூஜை நடைபெறாது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்றும், பிரதோஷ தினத்தன்றும், மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாக்காலங்களிலும் இந்த நந்திகேஸ்வரருக்கு ஊறவைத்த மூக்கடலை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ஊற வைத்த இந்த மூக்கடலையானது நந்திகேஸ்வரரின் வாயில் இருந்து கீழே விழாமல் இருப்பதற்காக, ஒரு மஞ்சள் நிறத் துணியில் நந்திகேஸ்வரரின் வாயோடு சேர்த்து கட்டிவிடுவார்கள்.

இது பாரம்பரியமாக வீர சைவர்களின் சம்பிரதாய முறையாக, காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ‘நந்திகேஷ வ்ருத கல்ப’ முறை என்று சொல்லுவார்கள். பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மூக்கடலையை வாங்கி, கோவில் தேவஸ்தானத்தில் தானமாக கொடுத்து விடுவார்கள். அதன்பின்பு அந்த மூக்கடலையை நந்தீஸ்வரருக்கு ‘நந்தி வ்ருத கல்ப’ முறையில் நெய்வேதியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு மீண்டும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக குழந்தை வரம் இல்லாதவர்களும் வேலைவாய்ப்பு தேடி கொண்டிருப்பவர்களும் கொண்டைக்கடலையை கோவிலுக்கு தானமாக கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிலை ஆந்திர மன்னர்கள் மட்டும் அல்லாமல் வட இந்திய மன்னர்களும் போற்றி பாதுகாத்துள்ளனர். இந்த கோவிலில் உள்ள வடக்கு கோபுரமானது, கடந்த 1677 ஆண்டு சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்டது என்று குறிப்புகள் கூறுகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலியவர்களால் பாடல்பெற்ற இஸ்தலம் இது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த இஸ்தலத்தில் உள்ள நந்தி பகவானின் நெய்வேதியத்தைதான் சிலர் கொரோனா பாதுகாப்பு கவசத்தோடு தொடர்புபடுத்தி பதிவிடுகிறார்கள். காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் ஆன்மீக பாரம்பரியங்களை தவறாக சித்தரித்து பேசுவதென்பது நிச்சயம் வருதத்தக்கது.