நம் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் செய்யும் இந்த மூன்று தவறுகள் தான் காரணம் !!

மனிதனாகப் பிறந்துவிட்டால் கஷ்டத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி, என்று கூறுவார்கள். ஆனால், ஒரு நல்ல மனிதனால் கட்டாயம் கஷ்டம் இல்லாமல் வாழ முடியும். அது எப்படி என்ற கேள்விக்கான விடையைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நமக்கு வாழ்க்கையில் ஒரு கஷ்டம் நேர்கிறது என்றால், அந்த கஷ்டம் அடுத்தவர்களால் உண்டாக்க படுவது அல்ல. ‘நேற்று நாம் செய்த தவறு, இன்று நமக்கு கஷ்டமாக வருகிறது. அவ்வளவு தான்’. முதலில் ஒரு மனிதன் இதை உணர வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் எதற்காக இத்தனை கஷ்டங்கள்? என்ற கேள்விக்கான பதிலை காஞ்சி மகா பெரியவா மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். நம்முடைய கர்ம வினை‌. இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நாம் எதை விதைத்தோமோ, அதற்கான பலனை, நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால், நம்முடைய நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் மூலம், நம் கர்ம வினையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து விடலாம் என்று சொல்கிறார், பெரியவர்! தரையில் இருக்கும் முல்லை நாம்தான் மிதித்து, காலில் குத்து கொண்டிருப்போம்.

இது நம்முடைய தவறு தான். ஆனால் நம்முடைய மனமும், வாயும் என்ன சொல்லும்? அந்த ‘முள் குத்திவிட்டது’. முள் வந்து உங்களை குத்துச்சா? எந்த இடத்தில், எந்த கஷ்டம், நிகழ்ந்தாலும், அதற்கு நாம் காரணம் இல்லை, என்று நினைப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு, நாம்தான் காரணமாக இருக்க முடியும். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. நாம் என்றோ அறியாமல் செய்த தவறுக்கான தண்டனையை, பல நாட்கள் கழித்து, அனுபவிக்கும் நேரமும் காலமும், நமக்கு வரும். அப்போது சிந்திப்போம்! எதற்காக நமக்கு இந்த பிரச்சனை வந்தது என்று? சொல்லப்போனால், அதற்கான விடையை நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது. நாம் செய்த தவறை என்றோ மறந்திருப்போம். ஆனால், அந்தத் ‘தவறு’, நம்மை விடாமல் பின்தொடர்ந்து வந்து, சமய சந்தர்ப்பம் பார்த்து, நமக்கான தண்டனையை கொடுக்குமாம். அதுதான் கர்மவினை. சரி, இந்த கர்மாவில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது? சுலபமான இந்த 3 வழிகளை பின்பற்றினாலே போதும். முதலாவதாக நீங்கள் பேசும் வார்த்தைகளை நல்ல வார்த்தைகளாக பேச வேண்டும். அடுத்தவர்களிடம் நீங்கள், நல்லதையே பேசினால், மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது, நல்ல முறையிலேயே பேசுவார்கள்.

நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் தான், நமக்கு திரும்பவும் வரும். நீங்க கோவமா கெட்ட கெட்ட வார்த்தையா பேசினால், அடுத்தவங்க உங்களை கெட்ட கெட்ட வார்த்தையா பேசிட்டு போயிடுவாங்க! நீங்கள் அடுத்தவர்களிடம் மரியாதையாக பேசினால், உங்களை யாரும் மரியாதைக் குறைவாகப் பேச மாட்டார்கள். நீங்கள், எல்லோராலும் மதிக்கத்தக்க மனிதராக மாறி விட்டால், உங்களுக்கு கஷ்டம் வராது. இரண்டாவதாக, நம்முடைய எண்ணங்கள். எப்போதுமே அடுத்தவர்களைப் பற்றி நல்லதாகவே நினைக்க வேண்டும். இப்படி நாம் செய்தால், அடுத்தவர்கள் நம்மைப் பற்றி எப்போதுமே நல்லதாகத்தான் நினைப்பார்கள். நல்லெண்ணம் எப்போதுமே நமக்கு நல்லதைத் தான் தரும். கஷ்டத்தைத் தராது. எதிர்மறையான, கெட்ட எண்ணத்திற்கு உங்களிடம் இடம் இருக்கக் கூடாது. மூன்றாவதாக, நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும், அந்த வேலையின் மூலம் அடுத்தவர்களுக்கு சிறிய பாதிப்புகூட, வராத அளவுக்கு இருக்க வேண்டும். ‘இப்படி எல்லாம் வாழ்ந்தால் பிழைக்க முடியாது’ என்று எண்ணாதீர்கள். இன்றைக்கு நாம், அடுத்தவர்களை பற்றி சிந்தித்தால் தான், நாளைக்கு நம்மை பற்றி அடுத்தவர்கள் சிந்திப்பார்கள். (‘அடுத்தவர் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை, என்று நாம நினைச்சா’! ‘நாம எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று, அடுத்தவன் கட்டாயம் நினைப்பான்’.) என்றைக்குமே அடுத்தவர்களுடைய நலனிலும் ஒரு சிறு அக்கறையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அனுசரணை என்பது எப்போதுமே நம்மிடத்தில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தவர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு, கட்டாயம் கஷ்டம் வரவே வராது. சின்னச் சின்ன விஷயங்கள் தான்! பின்பற்றுவதில் எந்த ஒரு சிரமமும் இல்லை. கஷ்டம் இல்லாத வாழ்க்கை வாழ்வது இவ்வளவு சுலபமா? மகா பெரியவா சொன்ன இந்த வார்த்தைகளை வைத்து, இந்த வாழ்க்கையே நாமும் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே!