நீங்கள் உறங்கும் போது இதுயெல்லாம் உங்கள் கனவில் வந்தால் லக் அடிக்கப் போகுதுன்னு அர்த்தம் !!

பொதுவாகவே நமக்கு ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் எல்லாம், நம் எண்ணத்தின் வெளிப்பாடு என்பதாக ஒரு கூற்று இருந்தாலும், இன்னொரு பக்கம் நம்முடைய முன்ஜென்மத்தில் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் கூட, நம் கனவில் வரும் என்று சில ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது போன ஜென்மத்தில் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நம்முடைய ஆழ்மனதில் பதிந்து இருந்தால், அந்த ஆசையானது, தூண்டப்பட்டு, சித்த விருத்தி செய்யப்பட்டு நம் கனவாக வெளிப்படும். அந்த ஆசை இந்த ஜென்மத்தில் நிறைவேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சம்மந்தமே இல்லாமல் நமக்கு வரும் சில கனவுகளுக்கும், போன ஜென்மத்திற்கும், சம்பந்தம் உண்டு என்றால் அது நிச்சயம் பொய்யாகாது. இது கலியுகம். கலியுகத்தில் கடவுள் நமக்கு என்ன சொல்ல வருகிறாரோ, அதை நேரடியாக சொல்ல வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே, கடவுளுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய ஒரு பாலமாக இந்த கனவு அமைந்திருக்கிறது என்று கூட சொல்வதில் தவறில்லை.

நம்முடைய வாழ்க்கையில் நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவுறுத்தும் இந்த கனவு, குறிப்பாக அதிகாலையில் வந்தால் நிறைவேறும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். இதற்குக் காரணம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்களின் வருகை இருக்கும் அல்லவா? நமக்கு வரக்கூடிய கனவுகளில் குறிப்பிட்ட இந்த பொருட்கள் எல்லாம் வந்தால் நமக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் என்ன என்ன என்பதைப் பற்றியும், குறிப்பிட்ட இந்த பொருட்கள் கனவில் வந்தால் எதை உணர்த்துகிறது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய கனவில் வெள்ளை அரளி, வெள்ளை மல்லி, வெள்ளை தாமரை, வெள்ளை குதிரை இவைகள் வந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதை குறிக்கும். குறிப்பாக வெள்ளை நிறத்தில் எந்த பொருள் வந்தாலும் அது நன்மை தான். அதிலும் வெள்ளை நிற பசு, அதாவது வெள்ளை நிற கோமாதா உங்கள் கனவில் தோன்றினால் நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொண் டிருக்கும் வேண்டுதல், கூடிய விரைவில் நிறைவேற போவதை குறிப்தாக சொல்லப்பட்டுள்ளது.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் ருத்ராட்ச மாலையோ, ருத்ராட்சத்தை அணிந்து இருப்பவரோ, ருத்ராட்சம் சம்பந்தப்பட்ட எந்த கனவு உங்களுக்கு வந்தாலும், சிவனின் அருளும் ஆசீர்வாதமும் விரைவாக உங்களுக்கு கிடைக்கப் போவது என்பதை குறிக்கும். கட்டாயம் 48 நாட்களுக்குள் சிவனின் அருள் உங்களுக்கு கிடைத்து விட்டதை உணர்த்தும் அளவில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. சிவனின் தலையில் இருக்கும் பிறைநிலா உங்களது கனவில் வந்தாலும் நல்லதே நடக்கப்போகிறது என்பது தான் அர்த்தம். ஆதிசேஷனான ஐந்து தலை நாகம் உங்களது கனவில் வந்தால், விஷ்ணுவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கப் போவதை குறிப்பதாக அர்த்தம். மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் கிடைத்தால், லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும். எதிர்பாராத வரவினை நீங்கள் எதிர்பார்க்கலாம். பாம்பானது படமெடுக்கும் கோலத்தில் கனவில் வரலாம்.

படுத்திருக்கும் நிலையில் தான் கனவில் வரக்கூடாது என்று கூறுவார்கள். அதே பாம்பு உங்களை கடித்து ரத்தம் வருவது போல் கனவு வந்தால் விபத்து ஏற்படும். தண்ணீர் நிரம்பிய குடம், அதாவது நிறைகுடம் உங்களது கனவில் வந்தால், குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும் என்பதை கடவுள் வலியுறுத்துவதாக அர்த்தம். இந்தக் கனவு உங்களுக்கு வரும் பட்சத்தில் முடிந்தவரை தினம்தோறும் குலதெய்வத்தை மறக்காமல் வீட்டிலிருந்து நினைத்து, நீங்கள் பூஜை செய்வது நல்லது. அதாவது நீங்கள் உங்கள் குலதெய்வத்தை மறைந்தாலும், உங்கள் குலதெய்வம் உங்களை மறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிறைகுடம் உங்கள் கனவில் வந்தால் எப்படியாவது உங்க குல தெய்வ கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்திருங்க! அது ரொம்ப நல்லது. சாதுக்கள், முனிவர்கள் இப்படிப்பட்டவர்கள் உங்களின் கனவில்வந்தால், அந்த கடவுளே வந்து உங்களை ஆசிர்வாதம் செய்ததாக அர்த்தம். உங்களுக்கு இருக்கக் கூடிய பெரிய பிரச்சனையில் இருந்து விடிவுகாலம் கிடைக்கப் போகிறது என்பதை இது குறிக்கிறது.