நீங்கள் செய்த புண்ணியம் தீர்ந்து விட்டால் அடுத்து உங்களுக்கு இதெல்லாம் தான் நடக்கும் !!

நம் வாழ்க்கை சிறப்பாக செல்வ செழிப்புடன் அமைந்திருக்கிறது என்றால் அதற்கு நாம் செய்த புண்ணியங்கள் தான் காரணமாக இருக்கும். நாம் செய்த புண்ணியமோ அல்லது நமது முன்னோர்கள் செய்த புண்ணியமோ நம்மை இன்று இந்த நிலைமையில் நன்றாக வைத்திருப்பதற்கு நம்முடைய நல்ல கர்ம பலன்கள் தான் துணையாக இருக்கும். நீங்கள் எவ்வளவு தான் நல்லது செய்தாலும் உங்கள் கணக்கு படி, நீங்கள் செய்த புண்ணியம் தீர்ந்ததும் உங்களுக்கு என்ன நடக்கும்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். ஒரு ஊரில் ஒரு வியாபாரி மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு அமைந்த குடும்பம் மிகவும் அன்பு நிறைந்த குடும்பமாக இருந்தது. மனிதராகப் பிறந்து விட்டாலே அவர்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் நிச்சயம் இருக்கும். ஆனால் இவருக்கோ எந்த கஷ்டமும் இறைவன் கொடுத்ததில்லை. அவரிடம் இருக்கும் செல்வாக்கு, அந்த ஊரையே விலைக்கு வாங்கும் அளவிற்கு இருந்தது.

அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை பார்த்து பொறாமை படாத நாட்களே கிடையாது எனலாம். அந்த அளவிற்கு அவர்கள் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் கொட்டிக்கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கனவில் தோன்றிய மகாலட்சுமி தேவி இவ்வாறு கூறியதைக் கேட்டு வியாபாரி குழப்பம் அடைந்தார். மகாலட்சுமி கனவில் கூறியது என்னவென்றால், ‘இத்தனை ஆண்டுகள் வரை நீயும் உன் குடும்பமும் செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு நீ செய்த புண்ணியமும் உனது முன்னோர்கள் செய்த புண்ணியமும் தான் காரணமாக இருந்தது. இப்போது நீங்கள் செய்த புண்ணியங்கள் தீர்ந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் நான் இந்த வீட்டை விட்டு சென்று விடுவேன் அதற்கு முன் என்னிடம் ஏதாவது வரம் கேட்க வேண்டுமென்றால் நீ தாராளமாக கேட்கலாம் என்று கூறி மறைந்தாள்’. தூக்கத்திலிருந்து விழித்த அந்த வியாபாரிக்கு மிகவும் குழப்பமான மனநிலை இருந்தது.

உடனே வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து கனவில் நடந்ததை எல்லாம் கூறினார். மகாலக்ஷ்மி தேவியிடம் என்ன வரம் கேட்பது? என்று வியாபாரி குடும்பத்தாரிடம் கேட்டார். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வரத்தை கேட்டனர். ஒருவர் நிறைய தங்க நகைகளையும், வைர வைடூரியங்களையும் கேட்டார். மனைவியோ பெரியபெரிய அரண்மனைகளை கேட்டார். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரத்தை கேட்க சொல்லி அறிவுறுத்தினார்கள். ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த கடைக்குட்டி பெண் பிள்ளையோ, அப்பா, நீங்கள் இவற்றையெல்லாம் கேட்டால் எதுவும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் மகாலட்சுமி நம் வீட்டை விட்டு செல்ல இருக்கிறார். அப்படி என்றால் நாம் இதைக் கேட்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. மகாலட்சுமி வீட்டை விட்டு சென்றால் இவை அனைத்தும் சென்றுவிடும். அதனால் நீங்கள் இதையெல்லாம் கேட்காதீர்கள்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியுடனும் எப்போதும் இருக்க வேண்டும் என்ற வரத்தை கேளுங்கள் என்று கூறினாள். இதைக் கேட்ட அந்த வியாபாரிக்கு தன் இளைய மகளை நினைத்து பெரும் பூரிப்பு ஏற்பட்டது. இதுவே சரி என முடிவெடுத்த வியாபாரி மறுபடியும் தூங்க சென்றார். மகாலட்சுமியிடம், எங்கள் குடும்பம் எப்போதும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்ற வரத்தினை கேட்டுவிட்டார். இதைக் கேட்ட மகாலட்சுமி தேவியோ நெகிழ்ந்து போனாள். நீ இப்படி ஒரு வரத்தை என்னிடம் கேட்பாய் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. நீ வேறு ஏதாவது ஒரு வரத்தை கேட்டிருந்தால் நான் அதை உனக்கு மனமுவந்து வரம் அளித்து விட்டு உடனே இங்கிருந்து சென்றிருப்பேன். ஆனால் இப்படி ஒரு வரத்தைக் கேட்டு என்னை இங்கிருந்து செல்ல முடியாமல் செய்து விட்டாயே! என்று கூறினாள். அதன்பிறகு மகாலட்சுமி அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டாள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை கூறலாம்.