நீங்கள் வாழ்க்கையில் படாதபாடு படுகிறார்களா ?? அதற்கு இவற்றில் சிலவும் காரணமாக இருக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள் !!

நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ நிறைய பாவங்களையும், தவறுகளையும் செய்து விடுகிறோம். இதனால் நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்லாமல் நம்முடைய சந்ததியினர் வாழ்க்கையும் அல்லல்படும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். தோஷங்கள் ஜாதகத்திலும், நம்முடைய வாழ்க்கையிலும் ஏற்பட என்னென்ன காரணங்கள் குறிப்பாக இருக்கின்றன? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். தோஷங்களில் நிறைய வகைகள் இருந்தாலும் அதில் குறிப்பாக பித்ரு தோஷம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே போல் ஒருவர் வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் அதை ஏழேழு பிறவிக்கும் நம்மைப் பின் தொடர்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. தோஷம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் தவறு செய்யும் பொழுது அது தவறு என்று நமக்கு தெரிவதில்லை. ஆனால் அதனுடைய பாதிப்பு நமக்கு எதிராக திரும்பும் பொழுது நிச்சயம் செய்த தவறுக்காக மனம் வருந்துவோம்.

நாம் செய்யும் செயல்களாலும், சொல்லாலும் மற்றவர்கள் காயப்பட்டால் நிச்சயம் அதற்குரிய தண்டனை தோஷமாக மாறும். நம்முடைய சந்ததியினர் வரை அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பது உண்மை. பாவம் செய்தவர் ஒருவர் தண்டனை அனுபவிப்பது இன்னொருவரா? என்கிற கேள்வி எழும். ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் இன்னொருவரை சென்றடையவில்லையா? அதேபோல் தாங்க சொத்தில் மட்டுமில்லை, முன்னோர்கள் செய்த பாவத்திலும் சந்ததியினருக்கு பங்கு உண்டு என்கிறது வேதம். பித்ரு தோஷம் நம்முடைய முன்னோர்களால் ஏற்படுவது. அவர்களுடைய திதி, தர்ப்பணங்களை முறையாக செய்யாவிட்டால் அந்த ஆன்மா பசியிலும், துன்பத்திலும் வாடுவதாக சாஸ்திரம் கூறுகிறது. அந்தக் கொடுமையை அவர்களுடைய சந்ததியினரும் அனுபவிக்குமாம்.

இதனால் தான் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தினர் அல்லாமல் மற்றவர்களுக்கு செய்யும் பாதிப்புகளும், வயதில் முதிர்ந்தவர்களை தனிமைப்படுத்தி உடலாலும் மனதாலும் வலியை உண்டாக்கினால் கூட தோஷம் ஏற்படுகிறது. விதவைப் பெண்களின் வலியை உணராமல் இருப்பது, அடுத்தவர்களின் பொருளை அபகரிப்பது, பெண்களுக்கு மன ரீதியான மற்றும் உடல் ரீதியான தொல்லைகள் கொடுப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை பிரித்து மகிழ்வது போன்ற செயல்களால் ஒருவருக்கு தோஷங்கள் உருவாகிறது. இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் வம்சவிருத்தி பிரச்சனைகள், பண பிரச்சனைகள், மனக் கஷ்டங்கள் உருவாகிறது. இது அடுத்தடுத்த சந்ததியினரையும் பாதிக்கிறது.

இவற்றில் குறிப்பாக உண்மை தன்மை எதுவென்று தெரியாமல் ஒருவரை பற்றிய தவறான வதந்திகளை புரளி பேசுவது மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. உண்மையில் அவர்கள் தவறு செய்யாத பட்சத்தில் அதற்குரிய தண்டனையாக உங்களுக்கும் உங்களுடைய சந்ததியினருக்கும் நிச்சயம் வறுமையை உண்டாக்கும். தீராத வியாதிகள் உண்டாக இதுவும் ஒரு காரணமாம். சிலருக்கு என்ன தான் மருத்துவம் செய்து கொண்டாலும் ஆரோக்கிய பிரச்சினைகள் தீர்வதில்லை. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆரோக்கியப் பிரச்சினை நிரந்தரமாக இருக்கும். இது போன்றவர்கள் தோஷத்திற்கு உட்பட்டதாக அர்த்தமாகிறது. மேற்கூறிய விஷயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, பிரச்சனைகள் தீர்வதற்கு எளிய பரிகாரங்களை மேற்கொள்ளலாம். மீண்டும் அதே தவறை நீங்கள் செய்யாமல் இருக்கலாம். இந்த தோஷங்களுக்கு பரிகாரமாக சிவலிங்கத்திற்கு வில்வ அர்ச்சனையும், உங்களால் முடிகின்ற பொழுது இயலாதவர்களுக்கு அன்னமும், வஸ்திரம் தானம் செய்து வந்தால் துன்பங்கள் குறையுமாம்.