பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தெரியாமல் கூட இப்படி செய்து விடாதீர்கள் !! அந்த தண்ணீரை என்னதான் செய்வது ??

வீட்டில் பூஜை செய்யும் பொழுது எல்லோரும் நிவேதனம் மற்றும் தண்ணீரை தீர்த்தம் வைப்பது வழக்கம். நிவேதனமாக ஏதாவது ஒரு பிரசாதத்தை கட்டாயம் வைக்க வேண்டும். எதுவும் இல்லை என்றால் கூட கல்கண்டு, சர்க்கரை, பேரிச்சை, உலர் திராட்சை, உடைத்த கடலை இது போன்று ஏதாவது ஒன்றை நிச்சயம் வைத்து தான் வழிபட வேண்டும். எதுவும் வைக்காமல் வழிபடக் கூடாது. அது போல் கட்டாயம் தண்ணீர் வைக்க வேண்டும். நிறைய பேர் பஞ்சபாத்திரம் வைத்திருப்பார்கள். செம்பு அல்லது பித்தளை, வெள்ளி போன்ற உலோகங்களில் பூஜைக்கு தீர்த்தம் வைக்க சிறிய அளவிலான சொம்பு அல்லது டம்ளர் வைத்திருப்பார்கள். அதை பஞ்சபாத்திரம் என்பார்கள். அதில் தண்ணீர் மட்டுமாவது நிச்சயம் வைக்க வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீரில் துளசி இலைகள், பச்சைக் கற்பூரம், மஞ்சள் போன்ற மேலும் சில தெய்வீக சக்தி உள்ள பொருட்களை அதில் சேர்ப்பார்கள்.

முடியாதவர்கள் வெறும் தண்ணீரை வைத்தால் போதும். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை பூஜைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி, ஏதாவது ஒரு பொருளை நிவேதனம் வைத்து, பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு வந்தால், எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் உருவாகும் என்பார்கள். கஷ்டமே இல்லாதவர்கள் யாரும் இல்லை. அதை தாங்கக்கூடிய சக்தி எல்லோருக்கும் இருந்து விடுவதில்லை. இறைவனிடம் வேண்டும் பொழுது, எனக்கு கஷ்டமே இல்லாத வாழ்க்கை கொடு, என்று வேண்ட கூடாது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை தாங்கக்கூடிய தைரியத்தை கொடு, அதை எதிர்கொள்ள கூடிய தன்னம்பிக்கையை கொடு என்று தான் வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் வேண்டும் அத்தனை வேண்டுதல்களும், இறுதியில் பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் நீரில் வந்து இறங்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதனால் தான் பஞ்சபாத்திரம் மிகவும் முக்கியமாக வைக்கப்பட வேண்டிய பூஜைப் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படியாக பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரை பலரும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கின்றனர்.எந்த காரணத்தைக் கொண்டும் பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தமாக வைத்திருக்கும் தண்ணீரை கீழே கொட்ட கூடாது. ஒரு சிலர் சில நாள் கழித்து சமையலறையில் இருக்கும் சிங்கிள் கொட்டி விடுவார்கள். இது மிகவும் பெரிய பாவச்செயலாகும். இன்னும் சிலர் என்ன செய்வார்கள் என்றால், அந்த தண்ணீரை செடி, கொடிகளுக்கு ஊற்றி விடுவார்கள். இதுவும் செய்யக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நாம் வேண்டிய வேண்டுதல்கள் நீரில் இறங்குவதால், அந்த தண்ணீரை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தீர்த்தமாக பருக கொடுக்க வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காமல், குடித்து விடுவது தான் மிகவும் நல்லது. அப்போது தான் நாம் வேண்டிய வேண்டுதல்கள் முழுமையாக பலிக்கும் என்கிறது சாஸ்திரம். நாம் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறாமல் இருக்க, நாம் இதுபோல் செய்யும் சில தவறுகள் கூட காரணமாக இருக்கலாம். பூஜைக்குரிய சாஸ்திரங்கள் முறையாக கடைபிடித்து வந்தோமேயானால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் குறைவில்லாமல் நிச்சயம் நிறைவேறும்.