பண வரவை குறைக்கும் இந்த பொருட்களெல்லாம் உங்கள் பீரோவில் இருந்து தூக்கி வெளியே எடுத்து வீசி விடுங்கள் !!

ஒவ்வொருவர் வீட்டிலும் பீரோ என்பது நிச்சயமாக இருக்கும். ஏழையாக இருந்தாலும், எவ்வளவு வசதியானவர்களாக இருந்தாலும் பணம், நகை போன்ற பொருட்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப பீரோவில் தான் வைப்பது வழக்கம். அத்தகைய பீரோவில் பணத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமி தேவி குடியிருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பூஜை அறையை எப்போதும் எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ! அதே போல பீரோவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பீரோவில் இடம் இருக்கிறது என்பதற்காக எல்லா பொருட்களையும் அடுக்கி வைத்து விடக்கூடாது. அது பண தடையை உண்டாக்கும். அப்படியான பொருட்களை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். பூஜை அறையில் நம் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அதே போல் தான் பீரோவில் கூட முன்னோர்களின் படங்களை கட்டாயம் வைக்கக் கூடாது. முன்னோர்களின் படங்களை பூஜை அறை, பீரோ, பரண் இது போன்ற இடங்களில் தெரியாமல் கூட வைத்து விடாதீர்கள்.

இதனால் வீட்டில் நிறைய கஷ்டங்களும், துன்பங்களும் வரும். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்காமல், அவர்களுடைய சாபத்திற்கு ஆளாக நேரலாம்.பீரோவில் உடைந்து போன கண்ணாடி எந்த இடத்திலும் வைக்கக்கூடாது. ஒரு சிலர் கண்ணாடி வைத்திருக்கும் மணி பர்ஸ் வைத்திருக்கலாம். அதில் இருக்கும் கண்ணாடி உடைந்து இருந்தாலும், அதை பீரோவில் வைத்து இருக்கக் கூடாது. பீரோவின் கதவில் மாட்டியிருக்கும் கண்ணாடி லேசாக உடைந்து இருந்தாலும், அதனால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் உருவாகலாம். கணவன் மனைவி இடையே புரிதல் இல்லாத நிலை உண்டாகும். அதனால் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு புதியதாக மாற்றி விடுவது நல்லது. பீரோவை தெய்வத்திற்கு இணையாக நாம் பார்ப்பதால், தீட்டு காலத்தில் பயன்படுத்தக் கூடிய நாப்கின்கள், துணிகள் போன்றவற்றை வைக்கவே கூடாது. அப்படி ஏதாவது வைத்து இருந்தால் முதலில் அவற்றை அப்புறப்படுத்தி விடுவது நல்லது. இதனால் வீட்டில் பண தடை உருவாகும். எவ்வளவு சம்பாதித்தாலும் அவற்றிலிருந்து சிறிய தொகை கூட உங்களால் சேர்த்து வைக்க முடியாத நிலை உண்டாகும்.

பீரோவில் துணிமணிகள், புத்தகங்கள், பணம், காசு, உண்டியல், சாமி படங்கள், நகைகள், வீட்டு பத்திரங்கள், முக்கியமான ஆவணங்கள், சான்றிதழ்கள், குடைகள், துணிப்பைகள், நல்ல நினைவுகளை கொண்டுள்ள புகைப்படங்கள், பூஜை பொருட்கள் இவற்றை தவிர, வேறு எந்த பொருட்களையும் அடுக்கி வைப்பது கூடாது. குறிப்பாக சிறிய, பெரிய ஆயுதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கவே கூடாது. பணத்தை எப்பொழுதும் பிளாஸ்டிக் பொருட்களில் வைக்கவே கூடாது. மரத்தாலான பெட்டியில் வைப்பது பண வரவை அதிகரிக்கும் என்பார்கள். அதில் மகாலட்சுமி படம், குபேரன் படம், லட்சுமி காசு, பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, விரலி மஞ்சள், மாதுளை குச்சி, மல்லிகை பூ போன்றவற்றை போட்டு வைப்பதால் தனவரவு ஏராளமாக வந்து சேரும். மற்ற தேவையில்லாத பொருட்கள் பீரோவில் இருந்தால் அவற்றை வெளியே எடுத்து வைத்து விட்டு பீரோவை மாதம் ஒரு முறை காட்டன் துணி கொண்டு நன்கு துடைத்து விட வேண்டும். சரியான திசையில் பீரோவை வையுங்கள். வடக்கு குபேரனுக்கு உரியது எனவே வடக்கு, கிழக்கு பார்த்து வைப்பது நல்லது. பீரோவின் கண்ணாடியில் படுக்கை தெரியாதவாறு அமையுங்கள். இவைகள் வீட்டில் நிம்மதி இருக்க செய்யும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.