பாதாம் செடி வளர்க்கிறது இவ்வளவு ஈஸியா ?? நீங்களும் உங்கள் வீட்டில் பாதாம் செடி சுலபமாக எப்படி வளர்க்கலாம் !!

பாதாம் செடி வளர்ப்பது ஒன்றும் பெரிய காரியமே அல்ல. வெளிநாடுகளில் தான் பாதாம் விளையும் என்று நீங்கள் தவறாக எண்ணிக் கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமையை குறிக்கிறது. நம் நாட்டிலேயே, நம் வீட்டிலேயே பாதாம் செடியை வளர்க்க முடியும். ஆனால் அதற்கு சில நுணுக்கமான வேலைகள் நாம் செய்ய வேண்டியிருக்கும். பாதாமை முளைவிட வைத்தால் போதும். அது செடியாகி பின்பு மரமாகி அதி விரைவாகவே உங்களுக்கு சத்துக்கள் நிறைந்த பாதாமை தரும். வாருங்கள் பாதாம் செடியை எப்படி சுலபமாக நம் வீட்டிலேயே வளர்ப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பாதாம் நமக்கு நிறைய உடல் ஆரோக்கியத்தை வாரி வழங்கும் மிகப்பெரிய அருட்கொடையாக இருந்து வருகிறது. தினமும் இரண்டு பாதாம் சாப்பிட்டாலே உங்களுக்கு தேவையான எனர்ஜி கிடைத்துவிடும். முடி கொட்டாது, மேனி பளபளக்கும், ஆரோக்கியம் மேம்படும். ஆனால் பாதாம் விற்கும் விலையில் தினமும் எப்படி இரண்டு பாதாம் சாப்பிட முடியும்?

என்பது தான் இங்கிருக்கும் பலரின் கேள்விகளும்! 100 கிராம் பாதாம் 100 ரூபாய் வரை விற்கிறது. நடுத்தரக் குடும்பத்தினர் ஆசைக்கு ஒரு பாக்கெட் வாங்கி வந்து ஓரிரு நாட்களில் தின்று தீர்த்து விடுவார்கள். சிலர் பொக்கிஷமாக எடுத்து வைத்து ஏதேனும் முக்கிய சமையல்களில் சேர்த்து விடுவார்கள். அவ்வளவுதான் பாதாமும் நமக்கும் இருக்கும் தொடர்பு. இந்த நிலை மாற பாதாமை நாமே உற்பத்தி செய்ய முடியும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். சென்னையில் கூட இன்று பல இடங்களில் பாதாம் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டு மண்ணிற்கு பாதாம் மரம் தாராளமாக செழித்து வளரும். ஒன்றிரண்டு பாதாம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இன்று இரவு நீங்கள் ஊற வைத்தால் மறுநாள் காலையில் மற்ற வேலைகளை துவங்கி விடலாம். சாதாரண காய்ந்த பாதாமை நாம் உட்கொள்வதை விட, முன்னிரவு ஊறவைத்த பாதாமை மறுநாள் காலையில் நீங்கள் சாப்பிட்டால் பத்து மடங்கு பலன் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும். பாதாம் விளைவிக்க நமக்கு தேவையானது தேங்காய் நார் கழிவு. இது மட்டும் இருந்தால் போதும்.

ரெண்டே வாரத்தில் பாதாமை முளைவிட செய்துவிட முடியும். தேங்காய் நார் கழிவு வாங்கி ஒரு வாயகன்ற பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு நீர் தெளித்துக் கொள்ளுங்கள். பாதாம் முளைக்க ஈரப்பதம் தேவை, ஆனால் அதில் அதிக நீர் சேர்ந்து விடக்கூடாது. அதிக நீர் இருந்தால் பாதம் அழுகிவிடும். அதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வைத்திருக்கும் ஊற வைத்த பாதாமை லேசாக அதன் முனையில் குறுகி மூக்கு போன்று இருக்கும் பகுதியில் கிள்ளி எடுத்து விடுங்கள். இப்படி நீங்கள் செய்வதால் பாதாம் சுலபமாக முளைவிட்டு வெளியே வரும். தேங்காய் நார் கழிவுவை நன்கு அழுத்தி விடுங்கள். இப்போது அந்த பாதாமை கிள்ளிய பகுதி உள்ளே செல்லுமாறு நட்டு வையுங்கள். பாதாம்களை நட்டு வைத்ததும் அதன் மேலே மெல்லிய பாலிதீன் கவர் கொண்டு மூடி, டப்பாவை இறுக்கமாக மூடி வைத்து விடுங்கள். இதற்கு வெயில் படாத குளிர்ந்த இடம் தேவை.

உங்கள் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இல்லை என்றால் நிழல் தரும் மரத்திற்கு பக்கத்தில் வைக்கலாம். அதன் பிறகு 15 நாட்கள் கழித்து நீங்கள் அதை திறந்து பார்த்தால் பாதாம் அழகாக முளைவிட்டிருக்கும். முளைவிட்ட இந்த பாதாமை இப்போது எடுத்து ஒரு தொட்டியில் நட்டு வைக்கலாம் அப்போது தான் செடி முளைக்கும். சிறிய தொட்டியில் நட்டு வைத்து அடுத்த 15 நாட்கள் கழித்து பாருங்கள். இலைகள் அழகாக துளிர்விட்டு இருக்கும். அவ்வளவுதாங்க ஒரு மாதத்தில் உங்களுக்கு பாதாம் செடி கிடைத்துவிடும். இதை பாலித்தீன் பைகளில் போட்டு நீங்கள் சாதாரண மண் தரையில் மரமாக நடலாம். பாதாம் மரமாக வளரக்கூடியது என்பதால் இதை மண் தரையில் தான் நடவேண்டும். பாதாம் மரம் வளர்ப்பது பெரிதல்ல. அதை முளைவிட வைப்பதற்கு நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறோம். நீங்களும் உங்கள் வீட்டில் பயிர் செய்து பலன் அடையுங்கள்.