பிடித்தவர்களிடத்தில் மனஸ்தாபம் இருக்கும் நபர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உடனே ஒன்று சேர்ந்து விடுவார்கள் …

கணவன்-மனைவி முதற்கொண்டு ஒவ்வொரு உறவிலும் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் சில சமயத்தில் மனஸ்தாபம் வந்து விடும். அதை ஒன்றும் செய்ய முடியாது. நாம் எவ்வளவு விட்டுக் கொடுத்து நடந்து கொண்டாலும் நமக்கு பிடித்தவர்கள் அது போல் நடந்து கொள்வதில்லை. ஒருவரே விட்டு கொடுத்துக் கொண்டிருந்தால் அந்த உறவு அதிக நாட்கள் நீடிப்பதில்லை. இப்படியாக மனஸ்தாபம் கொண்டிருக்கும் இரு உறவுகளுக்குள் மீண்டும் ஒற்றுமை உண்டாக வேண்டிக் கொண்டு இந்த எளிய பரிகாரத்தைச் செய்து வந்தால் போதும். இதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவில் காணலாம். குறிப்பாக கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் மனஸ்தாபங்கள் பரிபூரணமாக நீங்கி அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்காக வேண்டிக் கொண்டு இந்த பரிகாரத்தை இருவரில் யாராவது ஒருவர் செய்யலாம்.

இந்த பரிகாரத்தை பிரச்சினைக்குரிய நபர்கள் தங்களுக்காக செய்ய வேண்டுமே தவிர மற்றவர்களுக்காக ஒரு போதும் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அது பலன் தராது. இவ்வளவு எளிய பரிகாரத்தை செய்தால் நினைத்தது நடக்குமா? என்கிற சந்தேகத்துடன் செய்யக்கூடாது. நடக்கும் என்ற நம்பிக்கையை முதலில் மனதில் விதைத்து அதன்பின் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.இதை இரவில் தான் செய்ய வேண்டும். எல்லோரும் தூங்கிய பின் யாருக்கும் தெரியாமல், பூஜை அறையில் செய்ய வேண்டிய பரிகாரம். யாரிடமும் இதை பற்றி சொல்லக் கூடாது. இதை தினமும் நீங்கள் தான் செய்ய வேண்டும். ரொம்ப கஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை. மிக மிகச் சுலபமாக செய்யக்கூடிய பரிகாரம் தான். இதை யார் வேண்டுமானாலும் யாருக்காக வேண்டுமானாலும் தாராளமாக செய்யலாம். தாய்-பிள்ளை இடையில் இருக்கும் மனஸ்தாபம் நீங்க இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இரு நண்பர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபம், பிரச்சனை தீர, சகோதர சகோதரிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் தீர என்று எந்த இரு உறவுக்குள் சிக்கல் இருக்கிறதோ அவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் அந்த சிக்கல் நீங்கி அவர்கள் ஒற்றுமையுடன் மீண்டும் ஒன்றினைவார்கள் என்பது ஐதீகம். முதலில் ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டாக கத்தரித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு தாளில் யாருடன் ஒன்று சேர விரும்புகிறீர்களோ அவரின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு கல் உப்பைப் போட்டு, ஒரு சிட்டிகை குங்குமம் சேர்த்து மடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இன்னொரு தாளில் உங்கள் பெயரை எழுதி இதே போல் கல் உப்பு சிறிதளவு, சிட்டிகை அளவு குங்குமம் சேர்த்து மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இரு தாள்களையும் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல், அனைவரும் தூங்கியபின் பூஜை அறைக்கு சென்று பூஜை அறையில் வைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தை, குலதெய்வத்தை வேண்டி வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். இருவரில் யார் தவறு செய்திருந்தாலும், இந்த உறவு முறிந்து விடாமல் மீண்டும் வலுப்பெற மனமார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின் ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு தூங்கச் செல்லலாம். பின்னர் காலையில் எழுந்ததும் யாருக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்லாமல் அந்த பொட்டலங்களை மறைவாக எடுத்துக் கொண்டு யாருடைய காலிலும் படாத வண்ணம் தண்ணீரில் கரைத்து ஓரமாக ஊற்றி விடுங்கள். இது போல் தினமும் நீங்கள் செய்து வர வேண்டும். இதை நீங்கள் செய்ய ஆரம்பித்த மூன்றாவது நாளில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்குமென்ற என்கிற நம்பிக்கை உங்களுக்கு வந்துவிடும். அதன் பின் உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களுடன் இணையும் வரை இதை நாள் தவறாமல் தினமும் செய்ய வேண்டும். முழு நம்பிக்கையுடன் மனதார இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் மீண்டும் உங்களுடன் எந்த மனஸ்தாபமும் இன்றி எப்போதும் போல் அன்புடன் நடந்து கொள்வார்கள்.