புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை இப்படித்தான் உண்மையில் முறையாக கடைபிடிக்க வேண்டும் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் !!

புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் அற்புதமான விரத முறையாகும். புரட்டாசி விரதம் இருப்பவர்கள் அந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வத்தைப் பெற்று, மற்ற பிற 16 பேறுகளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. முழு பக்தியுடனும், மனத்தூய்மையுடனும் ஒரு மாதம் வரை அசைவ உணவு ஏதும் உண்ணாமல் விரதமிருந்து பெருமாளுக்கு வேண்டுதல் வைப்பது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இதை அந்த காலத்தில் முறையாக கடைபிடித்து வந்தனர். இப்போது இருக்கும் சிலருக்கு அவற்றை பின்பற்றுவதில் சில தயக்கங்கள் இருக்கின்றன. இறைவனுக்காக செய்யப்படும் விஷயத்தில் நாம் எந்த தயக்கமும் காட்டக்கூடாது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்வது தான் முழு பலனை நமக்குத் தரும். எனவே புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை முறையாக எப்படி மேற்கொள்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவை நாசியில் கூட உணராமல் முழுமையாக விரதம் மேற்கொள்ள வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமை அன்று தலுகை போட வேண்டும். அதை முறையாக செய்ய வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்து, தலைக்கு குளித்து முடித்து, பூஜை சாமான்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் தலுகை கேட்டு போக ஒரு சிறிய சொம்பை சுத்தம் செய்து தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு நாமமிட்டு துளசி மாலை சுற்றிக் கொள்ள வேண்டும். இந்த சொம்பை தான் வீடு வீடாக சென்று தலுகை கேட்க கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களிடம் போய் அரிசி அல்லது காணிக்கை கேட்க வேண்டும். இப்படி செய்வதால் நம்முடைய அகந்தை அழியும் என்பது ஐதீகம். இதை இந்த விரதத்தின் போது மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கொண்டு வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியங்கள் படைக்க இந்த அரிசியை சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும். நைவேத்தியமாக வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் இவைகள் முக்கியமாக இடம் பெற்றிருப்பது அவசியம்.

ஒரு சிலர் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம் என்று படையல் போடுவார்கள். அது அவரவர் குல வழக்கப்படி செய்ய வேண்டும். தரையில் மாக்கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். நைவேத்தியம் படைத்து பெருமாளுக்கு வடை மாலை சாற்ற வேண்டும். வடை மாலை 9, 11 என்று ஒற்றை படையில் பார்த்து கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு சொம்பில் நாமம் போட்டு பச்சரிசி மற்றும் சில்லரை நாணயங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு துளசியை சுற்றிக் கொள்ள வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் தனியாக இடம் பெற்றிருக்க வேண்டும். தீர்த்த பாத்திரத்தில் சிறிது பச்சை கற்பூரம், துளசி சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தாம்பூலத்தில் மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய் போன்றவை இடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு மா விளக்குகளை தயார் செய்து கொள்ளுங்கள். புரட்டாசி பூஜையில் மாவிளக்கு ஏற்றுவது விசேஷமான பலன் தரும். திருப்பதி செல்ல சேர்க்கப்படும் உண்டியலை துளசி சுற்றி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் தலுகை கேட்டு வாங்கி வந்த பணத்தை இந்த உண்டியலில் போட வேண்டும். எல்லாம் தயார் செய்து முடித்த பின் தேங்காய் உடைத்து, தேங்காய் தண்ணீர் எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். பெருமாளுக்கு இருபுறமும் தேங்காய் வைத்து பின்னர் தீபம் ஏற்றி, மாவிளக்கேற்றி, தூபம் காண்பித்து, சாம்பிராணி போட்டு, கற்பூர ஆரத்தி படையல் முழுவதுமாக சுற்றி எடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற நாமம் சத்தமாக எழுப்பி பெருமாளை வழிபட வேண்டும். இந்த விரதத்தை முடிக்கும் வரை பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது மிகவும் முக்கியம். சனிக்கிழமையில் 1.30 மணியில் இருந்து 3 மணி வரை எமகண்டம் இருப்பதால் 1.30 மணிக்குள்ளாக இந்த பூஜையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நைவேத்யம் படைத்து இருக்கும் அத்தனை பொருட்களையும் ஒன்றாக கலந்து சிறிய வாழை இலையில் காக்கைக்கு உணவு வைக்க வேண்டும். காக்கை அந்த உணவை எடுத்து முடித்த பின் தான் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விரதத்தை முடித்து உணவருந்த வேண்டும். குறிப்பாக இந்த நாளில் அன்னதானம் செய்வது மிக மிக விசேஷமான பலன்களைக் கொடுக்க வல்லது. உங்களால் முடிந்தவர்களை வீட்டிற்கு கூப்பிட்டு சாப்பாடு போடுங்கள். அண்டை வீட்டாரிடம் நைவேத்தியத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இது தான் சனிக்கிழமை விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டிய முறையாகும். பெருமாளின் ஆசீர்வாதம் பெற புரட்டாசி மாத விரதத்தை மேற்கொண்டு பலன் பெறுங்கள்.