பூஜை அறையில் ஏற்றிவைத்த தீபம், திடிரென இப்படி அணைந்து போனால் உங்கள் வீட்டிற்கு கட்டாயம் தரித்திரம் பிடிக்கும் ,,,

நம்முடைய வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதற்கு பெரிய பெரிய பூஜை புனஸ்காரங்களை செய்து, பெரிய பெரிய ஹோமங்களை நடத்தி, பெரிய பெரிய பரிகாரங்களை செய்வதை விட, நம் வீட்டில் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகளை செய்யாமல் இருந்தாலே போதும். நாம் செய்யக்கூடிய பெரிய பெரிய பரிகாரங்களுக்கு கூட, பலன் கிடைக்காமல் போவதற்கு அன்றாடம் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளும் ஒரு காரணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள், சிலவற்றை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் மனதிற்கு இந்த காரணங்கள் சரி என்று பட்டால், நீங்கள் இந்த தவறுகளை தவிர்த்துக் கொள்ளலாம். இதெல்லாம் கூட ஒரு காரணமாக இருக்குமா, என்ற சந்தேகம் ஒரு துளி உங்கள் மனதில் வந்தால்கூட, இந்த குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மாலை நேரம் விளக்கு வைத்த பின்பு, வீட்டில் சண்டை போடக்கூடாது, கெட்டவார்த்தைகளை உபயோகப்படுத்த கூடாது.

அழக்கூடாது, என்றெல்லாம் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட அபசகுன வார்த்தைகள், அபசகுன சத்தங்கள் எல்லாம் நம்முடைய வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து, விளக்கு வைத்த நேரத்தில் வெளி வரலாமா? சில பேரது வீடுகளில் எல்லாம், 6 மணி அளவில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கும் வழக்கம் இருக்கும். முக்கால்வாசி சீரியலில் மாமியார் மருமகள் பிரச்சனையும், தேவையில்லாத குழப்பங்களும் தான் காட்டப்படுகின்றது. அப்படிப்பட்ட சம்பவங்களும், அப்படிப்பட்ட வார்த்தைகளும் விளக்கு வைத்த சமயத்தில் வீட்டில், டிவியில் கூட ஒலிக்கவே கூடாது. வீட்டிற்கு வருகை தரும் தேவதைகளை தடுத்து நிறுத்தும் சக்தி, நம் வாயிலிருந்து வரும் கெட்ட வார்த்தைகளுக்கு மட்டுமல்ல, நம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலித்துக்கொண்டிருக்கும் அபசகுனமான வார்த்தைகளுக்குக் கூட உள்ளது. அதுமட்டுமல்லாமல், நாம் பார்க்கும் குடும்ப சண்டை காட்சிகளும், கேட்கும் கெட்ட வார்த்தைகளும், எதிர்மறை சம்பவங்களும் நம் மனதில் ஆழமாக பதிந்து, எதிர்மறை ஆற்றல் உண்டு பண்ணி, அந்த சீரியலில் வரக்கூடிய பிரச்சனை நம் வீட்டிலும் வருவதற்கு கட்டாயம் வாய்ப்பு உள்ளது.

இது ரொம்பவும் ஆபத்து. முடிந்தவரை விளக்கு வைத்த சமயத்தில் வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்த பாடல்களை ஒலிக்க விடுவது சிறப்பானது. இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால், எதிர்மறை ஆற்றலை தூண்டும் நாடகக் காட்சிகளைப் பார்க்காமல் தவிர்த்து விடுவது, பெண்களுக்கும், நம் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. டிவியையும், நாடகத்தையும் பார்க்கவே கூடாது என்று சொல்லப்படவில்லை. நல்ல காட்சிகளை பாருங்கள். சந்தோஷமாக, குடும்ப நலனுக்கு அக்கறை தரும் எத்தனையோ விஷயங்கள் அதே நாடகத்தில் காட்டப்படுகின்றது. மனநிம்மதியை தரும் காட்சிகளைப் பார்த்து, உங்களது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களே, மாமியார் மருமகள் சண்டை உள்ள சீரியலை பார்த்தீர்கள் என்றால், கட்டாயம் உங்கள் வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை வர தான் செய்யும். உங்கள் வீட்டில் சண்டை வந்தால், மகாலட்சுமி கட்டாயம் வீட்டில் தங்க மாட்டாள்.

சரி, அடுத்த விஷயத்திற்கு வருவோம். பொதுவாகவே, நம்முடைய வீடுகளில் அடுப்பங்கரையில் கூட தீய்ந்த வாடை வரக்கூடாது என்று சொல்லுவார்கள். அந்த வாடை, மகாலட்சுமி வாசம் செய்வதற்கு இடையூறாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்படி இருக்க, நம் வீட்டு பூஜை அறையில் ஏற்றி வைக்கக் கூடிய தீபமானது, தானாகவே எரிந்து மலையேறும் சமயத்தில் கருகிய வாடை வீசும். முடிந்தவரை விளக்கில் எண்ணெய் தீரும்போது கவனித்து, அந்த தீபத்தை நீங்களே உங்களது கையால் மலை ஏற்றுவது தான் சிறப்பான ஒன்று. அந்த தீபத்தை பூக்களால் தீக்குச்சியால் மலை ஏறுவதை விட, உங்கள் வீடுகளில் டைமண்ட் கற்கண்டு வாங்கிக்கொள்ளுங்கள். அந்த கற்கண்டு ஒன்றை எடுத்து அந்த தீபத்தின் மேல் மெதுவாக வைத்தீர்கள் என்றால் தீபம் குளிர்ந்துவிடும். காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு அகல் விளக்கு எந்த தீபத்தை ஏற்றினாலும் முடிந்த வரை அந்த தீபத்தை தானாகவே, குளிர விடாமல், தானாக எரிந்து கருகும் வாடை வருவதற்கு முன்பு, உங்கள் கைகளாலேயே டைமண்ட் கற்கண்டு வைத்து குளிர வைப்பது சரியான முறை. உங்கள் வீட்டில் ஏற்றக்கூடிய தீபத்தை இனி இந்த முறைப்படி மலையேற்றி பாருங்கள்! கட்டாயம் உங்களுடைய வீட்டின் முன்னேற்றத்தில் நல்ல வித்தியாசம் கிடைக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.