பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்களில் இதுவும் ஒன்று ?? அந்தப் பொருளை ஏன் வைக்கக் கூடாது என்ற காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்…

பொதுவாகவே, நம் வீட்டுப் பூஜை அறையில் எந்தெந்த தெய்வத்தின் திருவுருவப் படங்களை வைக்க வேண்டும், எந்தெந்த தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைக்கவே கூடாது, என்ற சந்தேகம் இன்னும் நம்முடைய மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. நம்முடைய வீட்டு பூஜை அறையை எப்படி அமைத்துக் கொண்டால், நம்முடைய வாழ்வு சிறப்பாக இருக்கும், நம் வீட்டு பூஜை அறையில் உள்ள திருவுருவப்படங்கள், உயிரோட்டத்தோடு இருக்க எப்படி பூஜை செய்ய வேண்டும், என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம். ஒருவருடைய வீட்டு பூஜை அறையில் உடைந்த சிலைகள், உடைந்த கண்ணாடியை கொண்ட, மிகவும் பழைய துருப்பிடித்த, திருவுருவப்படங்கள் கட்டாயம் இருக்கவே கூடாது. சரி, இந்த உடைந்த சிலைகளையும், உடைந்த சுவாமி படங்களையும், சரி செய்து விட்டு, அதன் பின்பு அந்த சிலைகளை, அதே திருவுருவப் படங்களை, மீண்டும் நம் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாமா? கட்டாயம் வைத்துக் கொள்ளலாம்.உடைந்த படங்களை சரி செய்துவிட்டு, மீண்டும் நம் வீட்டில் அந்த படத்தை தாராளமாக வைத்து பூஜை செய்யலாம். உடைந்த சிலையை சரி செய்ய முடியும் என்றால், சரி செய்த சிலையை மீண்டும் பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை. அடுத்ததாக, நிறைய பேருக்கு உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா, என்ற கேள்வி இன்றளவும் இருந்துதான் வருகின்றது. காளி, பிரத்தியங்கிராதேவி, உக்கிரமான நரசிங்க மூர்த்தி, இன்னும் பல கோபமான சுவாமி படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா? உங்களுக்கு நரசிம்மரையும், காளி தேவியையும் மிகவும் பிடிக்கும்.

அவர்களுடைய தீவிர பக்தர்கள் நீங்கள் என்றால், தாராளமாக அந்த தெய்வங்களை உங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. எந்த தெய்வங்களும் நமக்கு கெடுதல் செய்வதற்காக அவதாரம் எடுக்கப்பட்டவை அல்ல. அவதாரத்தின் நோக்கம், கெடுதலை அழிக்க வேண்டும் என்பதால் தான், அந்த தெய்வங்கள் உக்கிர நிலையில் இருக்கின்றது. அந்த தெய்வங்களை பார்த்து வழிபடுவதன் மூலம், உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும், குழந்தைகளுக்கும், மனதில் எந்தவிதமான பயனும் ஏற்படாது, என்ற நிலை இருந்தால், தாராளமாக உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த தெய்வங்களை வைத்து வழிபடலாம். அந்த தெய்வத்தின் திரு உருவப் படங்களை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம், கொஞ்சம் மன உறுத்தல் இருந்தால் கூட, அதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.சனீஸ்வர பகவானின் திரு உருவப் படங்களையும், நவகிரகங்களின் திருவுருவப்படங்களையோ, நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது அவ்வளவு சரியான முறை அல்ல என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இவர்கள், இறைவனுடைய கட்டளைக்கு கீழ், பணிபுரியும் கிரகங்கள் என்பதால், இவர்களை கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டுமே போதுமானது என்று சொல்லப்பட்டுள்ளது. நவக்கிரகங்கள், சனீஸ்வர பகவானின் படத்தையும் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்ததாக, நம் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களின் திருவுருவப் படங்கள்! இறந்தவர்களை தெய்வமாக நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், தெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு சமமாக, இறந்தவர்களின் திருவுருவப் படங்களை வைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டின் பூஜை செய்யும் இடத்தை தவிர்த்து, மற்ற எந்த இடத்தில் வேண்டும் என்றாலும், இறந்தவர்களின் திரு உருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். இறந்தவர்களின் படத்தை வடக்குப்பார்த்த சுவற்றில் மாட்ட வேண்டும்.

அந்தப்படம் தெற்கே பார்த்தவாறு அமைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, மிக முக்கியமாக சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் எந்திரங்களை பற்றித்தான். நிறைய பேர் வீட்டில் இப்போது எந்திரங்களை வைத்து வழிபட தொடங்கியுள்ளார்கள். இந்த பரிகாரத்திற்க்கு எந்திரம்! அந்த பரிகாரத்திற்கு எந்திரம்! என்று நல்ல முறைப்படி பூஜை செய்து எந்திரங்களை வாங்கி கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது என்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால், அந்த எந்திரங்களில் தெய்வங்களை பிரதிஷ்டை செய்தாலும், அந்த தெய்வங்கள் 12 ஆண்டுகள் மட்டும்தான், அந்த எந்திரத்தில், வாசம் செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் முடிந்ததும், அந்த எயந்திரத்தில் இறைவன் கட்டாயம் வசிப்பதில்லை! இதோடு மட்டுமா? தெய்வம் வெளியேறிய பின்பு, அந்த எயந்திரத்திற்குள் கெட்ட சக்தியானது வந்து குடி கொண்டுவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த எந்திரத்தை வைத்து, கொஞ்ச காலம் நாங்கள் நன்றாகத்தான் வாழ்ந்தோம். ஆனால், தற்சமயம் சூழ்நிலையே தலைகீழாக மாறிவிட்டது. சமீபகாலமாக தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்று! இதற்கு காரணமும், அவர்கள் வீட்டில் வைத்த, அந்த எந்திரத்தில் எதிர்மறை ஆற்றல் குடி கொண்டதால் கூட இருக்கலாம்.) ஆகவே, எந்திரங்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாதவர்கள் யாரும், அதை வீட்டில் வைத்து வழிபடுவது என்பது அவ்வளவு சரியான முறை அல்ல. முடிந்தவரை வீட்டில் எந்திரங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

கோவிலில் வசிக்கும் இறைவனே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்தால்தான், அந்த இடத்தில், அந்த சிலையில் இருப்பாராம். இல்லையென்றால் அந்த கோவிலின் தல விருட்சத்தில், அந்த இறைவன் சென்றுவிடுவார் என்பது ஐதீகம். மிகவும் பெரிய கோவில் என்றால் 24 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது தான் சரியான முறை. இதே சாஸ்திரம் தான் எந்திரங்களுக்கும். மேரு சக்கரம், ஸ்ரீ சக்கரம் போன்ற பொருட்களை உங்கள் வீட்டில் வாங்கி வைத்து இருந்தாலும், அதற்கான, முறையான வழிபாட்டை தினம்தோறும் செய்து ஆகவேண்டும். ஒரு பொருளை வைத்து நம் வீட்டு பூஜை அறையில், எப்படி பராமரிப்பது என்று தெரியாவிட்டால், தயவு செய்து அந்த பொருட்களை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வாங்கி வைக்காமல் இருப்பது தான் நல்லது. அழகுக்காக, அலங்காரம் செய்வதற்காக வேண்டி, உங்களுக்கு அந்த பூஜை பொருள் மிகவும் பிடித்திருக்கிறது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது, என்ற காரணத்திற்காக எல்லாம், சக்கரங்கள், சங்கு, சாளக்கிராமம் போன்ற பொருட்களை வாங்கி சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதை முறையாக பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நம் வீட்டில் இருக்கும் தெய்வத்தின் திரு உருவப் படங்களை போதுமானது. உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இருக்கும் திருவுருவப் படங்களை சுத்தமாக துடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, தினம் தோறும் புதிய பூக்களை சாத்தி, தீபம் ஏற்றி, தீப ஆராதனை காட்டி, உங்களால் முடிந்த மந்திரத்தை உச்சரித்து அல்லது மந்திரங்களை ஒலிக்க செய்து, முடிந்த நெய்வேதியத்தை படைத்து, குலதெய்வத்தை மனதார நினைத்து, உண்மையான பக்தியோடு, மன நிறைவோடு வழிபட்டாலே போதும். உங்கள் பூஜை அறையில் இருக்கும் இறைவன் உயிரோட்டத்தோடு இருப்பார், பக்தியோடு அந்த இறைவனின் திருவுருவப் படத்தில் உள்ள கண்களை பார்த்தாலே, அந்த கடவுள் உங்களிடம் உரையாடுவார் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.