பெண்களின் மன குழப்பங்கள் எல்லாம் சரியாகி வீடு சாந்த நிலையை அடைய, சமையலறையில் சேர்த்து வைக்க வேண்டிய பொருட்கள் எது ??

எந்த வீட்டில் பெண்கள் மன குழப்பம் இல்லாமல், தெளிவோடு சிந்தித்து செயல்படுகிறார்களோ, அந்த வீட்டில் சுபிட்சம் நிலைத்து இருக்கும் என்றே சொல்லலாம். பெண்களின் மன நிலைமை எப்போதுமே குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில், நல்ல அனுபவங்களையும், நல்ல சம்பவங்களையும் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். கெட்டதையெல்லாம் கழித்து விட்டு விட வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், ஒரு வீட்டில் கட்டாயம் குழப்பம் நிலவாது. சண்டை சச்சரவு ஏற்படாது. கட்டாயம், அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். ஒரு பெண், குழப்பமான மனநிலைக்கு செல்லாமல் இருக்க, வீடு நிம்மதியாக இருக்க, நம்முடைய வீட்டு சமையலறையில் எந்த இரண்டு பொருட்களை சேர்த்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான் இது. ஆனால் காலப்போக்கில் புழக்கத்தில் இல்லாமல் போய் விட்டது என்று கூட சொல்லலாம். இது பல பேர் வீட்டில் கட்டாயம் இருக்கும். ஆனால் உபயோகப் படுத்துவது கிடையாது. இவையெல்லாம் தேவையற்ற பொருட்கள் என்று, வீட்டு பரண் மேலே தூக்கி போட்டு தான் வைத்திருப்போம். அந்த இரண்டு பொருள்கள், சலிக்கும் சல்லடையும், புடைக்கும் முறமும் தான். பெண்கள் சமையலறையில் தினம்தோறும் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் இவை. இந்த இரண்டு பொருட்களுக்கும் இயற்கையாகவே கெட்டதை கழித்து எடுத்துவிட்டு, நல்லதை மட்டும் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளும் இயல்பு உள்ளது. அதாவது முறத்தில் அரிசியை போட்டு புடைக்கும் பட்சத்தில், தேவையற்ற தூசி, தும்பு, புழு பூச்சிகள் நீங்கி நல்லதை மட்டும் தன்னிடமே தக்கவைத்துக்கொள்ளும். சல்லடையினுடைய இயல்பு, நல்ல அரிசியை மட்டும் தன்னிடம் தக்கவைத்துக் கொண்டு தேவையில்லாத நொய் குருனைகளை, கழித்து விட்டு விடும்.

இந்த இரண்டு பொருட்களுக்கு உள்ள குணநலன்களும், பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். பெண்களும், தங்களிடம் வரும் விஷயங்களில் எது நல்லதோ அதை மட்டும் தனக்குள் உள்வாங்கி கொண்டு, கெட்டதை வெளியேற்றி விட்டால், அவர்கள் மனதில் எந்த ஒரு குழப்பமும் ஏற்படாது. எப்போதுமே தெளிவான மனநிலையில் இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டை சுபிட்சமாக பார்த்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த இரண்டு பொருட்களை, ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும், இந்த இரண்டு பொருட்களை பார்க்கும் போதும், அந்தப் பொருட்களின் இயல்பு பெண்களுக்குள்ளே தோன்ற வேண்டும். ‘எதைப்பற்றிய சிந்தனைகளை நம் மனதில் விதைக்கின்றோமோ, அதைப் பற்றிய எண்ணங்கள் தான் நமக்குள் ஏற்படும்’.

இதற்காகவாவது உங்களுடைய வீட்டில் முறமும், சல்லடையை உங்கள் வீட்டு அரிசி பாத்திரத்தின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அரிசியை எடுக்கும் போது கட்டாயம் அது உங்களுடைய கண்களில் தென்படும். அதனுடைய இயல்பு என்ன என்பதை நீங்கள் தினம்தோறும் நினைத்து வந்தீர்கள் என்றால், உங்களுக்கு எந்த ஒரு மன குழப்பமும் ஏற்படாது. எப்போதும் முறத்தை ஒன்று, என்ற கணக்கில் வைத்துக் கொள்ளக்கூடாது. இரண்டு முறம் தான் வைத்துக்கொள்ள வேண்டும். வாங்கும்போதே முறத்தை இரண்டாகத்தான் வாங்க வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம். வருடத்திற்கு ஒருமுறை அந்த முறத்தை மெழுகி, முடிந்தவரை பயன்படுத்தி பாருங்கள், கட்டாயம் உங்களுடைய வீடு சுபிட்சம் அடையும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.