பெண்கள் மாதவிடாய் நாட்களில் இதெல்லாம் கட்டாயம் செய்யக் கூடாது ?? அந்த நேரத்தில் பெண்கள் கெட்ட சக்திகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் ??

பெண்களுக்கு இயற்கை கொடுத்த இந்த மாதவிடாய் காலத்தில் ஆன்மீக ரீதியாக சில விஷயங்களை செய்யக்கூடாது என்று நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதைப்போல் மாதவிடாய் காலங்களில் துர்சக்திகள் பெண்களை தாக்கும் என்ற கருத்தும் உண்டு. ஆன்மிக ரீதியாக பெண்கள் செய்யக்கூடாத அந்த விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றியும், துர் சக்திகளிடமிருந்து பெண்கள் தங்களைத் தாங்களே, மாதவிடாய் காலத்தில் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் நாட்களில் பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்ற மாட்டார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். ஆனால் வீட்டில் இருக்கும் பெண், மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது, அந்த வீட்டில் இருக்கும் மற்றவர் பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றலாமா? என்ற சந்தேகம் நம்மில் பல பேருக்கு உண்டு. அந்த வீட்டில் இருக்கும் மற்ற நபர் பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை.இதே போல் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் எத்தனை நாட்களுக்கு தீட்டு இருக்கிறதோ, அது அவரவர் உடல் சூழ்நிலையை பொருத்தது.

அத்தனை நாட்களுமே பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றாமல் இருப்பது நல்லது. சில பேருக்கு மூன்று நாட்கள். சில பேருக்கு ஐந்து நாட்கள். ஒரு சிலருக்கு ஏழு நாட்கள். நம்முடைய சமையலறையில் அரிசி மூட்டையையும், தானியங்களையும் மொத்தமாக வாங்கி சேகரித்து வைத்திருக்கும் பழக்கம் சில பேர் வீடுகளில் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் மொத்தமாக இருக்கும் அந்த அரிசி மூட்டையையும், தானிய மூட்டைகளையும் மாதவிலக்கு நாட்களில் பெண்கள் கட்டாயமாக தொடக்கூடாது. மொத்தமாக போட்டு வைத்திருக்கும் உப்பு ஜாடி, புளி ஜாடி, ஊறுகாய் ஜாடி இவைகளையும் தொடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். முன்பாகவே அந்த மூட்டையில் இருந்து சிறிதளவு பொருட்களை எடுத்து தனியாக வைத்துக் கொள்வது தான் சரியான முறை. அப்படி இல்லை என்றால், வீட்டில் இருக்கும் மற்ற நபர்கள் அந்த மூட்டையில் இருந்து பொருட்களை எடுத்து கொடுக்கச் சொல்லலாம். மாதவிலக்கு நாட்களில் எந்தவிதமான விரதத்தையும் மேற்கொள்ளக்கூடாது. எடுத்துக்காட்டாக, சில பேர் வெள்ளிக்கிழமைகளில் அல்லது சனிக்கிழமைகளில் சாப்பிடாமல் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். எதிர்பாராமல் இந்த தினங்களில் மாதவிடாய் நாள் வந்துவிட்டால் அந்த விரதத்தை கடைபிடிப்பது எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது.

பெண்கள் மாதவிலக்கான நாட்களில் சுமங்கலிப் பெண்களுக்கு எதையும் தானமாக கொடுக்கக்கூடாது. இதே போல், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் எதையும் தானமாக கொடுக்க கூடாது. அதாவது, குங்குமம் கொடுப்பது, மஞ்சள் கொடுப்பது, பூ கொடுப்பது, போன்ற மங்களகரமான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை பெண்கள் மாதவிடாய் நாட்களில் பிரசவமான தாய்மார்களையும், பிரசவமான குழந்தைகளையும் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. நம் அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருக்கும் சிறிய குழந்தைகளையும் தொட்டு தூக்காமல் இருப்பதே மிகவும் நல்ல முறை. பெண்கள் மாதவிலக்கான சமயத்தில் கணவருக்கு சாப்பாடு பரிமாறக் கூடாது என்பதும் நம் சாஸ்திரத்தில் உள்ளது. இதேபோல் மாதவிலக்கான சமயத்தில் பெண்களுக்கு, கண்ணுக்குத் தெரியாத சக்திகளால் பிரச்சனை ஏற்படும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதை சிலபேர் நம்புவார்கள். சிலபேர் நம்பமாட்டார்கள். நம்பியவர்களுக்கு ஒரு பரிகாரம் உள்ளது. அதாவது மாதவிலக்கான அன்றைய நாள் இரவு ஒரு வெள்ளை காகிதத்தில், ஒரு கைப்பிடி அளவு உப்பை வைத்து மடித்து, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் தீட்டாக இருக்கும் அந்த மூன்று நாட்களோ அல்லது ஐந்து நாட்களோ, மாதவிடாய் நாள் முடியும்வரை, அந்த உப்பை உங்கள் தலையணைக்கு அடியிலேயே வைத்துவிடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் யாரும் அதை தொடக்கூடாது. அந்த உப்பு, மாதவிடாய் நாட்களில் உங்கள் அருகில் எந்த ஒரு கெட்ட சக்தியும் வராமல் பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். இந்த உப்பை தினந்தோறும் மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. மாதவிடாய் நாள் தொடங்கிய அன்றைய இரவு வைத்த உப்பை, மாதவிடாய் நாள் முடியும் அன்று, காலையில் எடுத்து காகிதத்திலிருந்து பிரித்து நெருப்பில் போட்டு விடலாம் அல்லது தண்ணீரில் கரைத்து விடலாம். மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நம் முன்னோர்கள் கூறிய சுலபமான வழிமுறை இது. நம்பிக்கை உள்ளவர்கள் கடைபிடிக்கலாம். மாதவிடாய் நாட்களில் பெண்கள் அறியாமல் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட அவர்களுடைய குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கும் கண்ணுக்கு தெரியாத தோஷமாக மாறும் என்பது குறிப்பிடதக்கது. முடிந்தவரை சாஸ்திர சம்பிரதாயத்துக்கு மதிப்பு கொடுத்து உங்களால் எந்த விதிமுறைகளை, பின்பற்ற முடியுமோ அதை மட்டுமாவது பின்பற்றுவது உங்கள் குடும்பத்திற்கு நல்லது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.