பெரும் சர்ச்சைக்கு பின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எப்படி போட்டாங்க தெரியுமா ??

பெரும் சர்ச்சைக்கு பின் ஓய்ந்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பணி விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேலும் 150க்கும் மேற்பட்ட விஐபிக்களும், குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்களும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி, இந்து மதத்தவர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இங்கிருக்கும் சரயு நதிக்கரையில் ஸ்ரீ ராமர் பிறந்ததாக புராண வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதால் மதிப்புமிக்க திருத்தலமாக கருதப்படுகிறது.

இங்கு அமைய இருக்கும் பிரம்மாண்டமான குழந்தை ராமர் கோவில் 1988 இல் வடிவமைக்கப்பட்டதாக கட்டிட வடிவமைப்பாளர் திரு நிகில் சோம்புரா அவர்கள் கூறியுள்ளார். அதனால் இந்த காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து புதிய வடிவமைப்பை தயார் செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 1988 இல் அப்போது வடிவமைக்கப்பட்ட அமைப்பின் படி 141 அடி உயரத்திற்கு கோபுரமும், மூன்று மண்டபங்கள் உடன் கூடிய பிரம்மாண்ட கோவில் எழுப்புவதற்கு திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப 161 அடி உயரத்திற்கு கோபுரமும், ஐந்து மண்டபங்களும் கூடிய அதி பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட இருப்பதாக கூடுதல் தகவல்கள் கூறியுள்ளார். L&T நிறுவனத்தின் உதவியுடன் இந்த கட்டுமான பணி ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை வாரணாசி அயோத்தியை சேர்ந்த வேத விற்பன்னர்கள் வாயிலாக நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஜையில் சிறப்பு யாகங்களும் நடத்தப்பட்டு, 40 கிலோ எடையுள்ள வெள்ளியாலான செங்கல்லை பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்ட ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்த சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ‘ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா கோயில்’ அறக்கட்டளையிடம், 2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்வது தொடர்பான விஷயத்தில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் சுமார் 10 கோடி குடும்பங்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெற இருக்கும் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு இந்த பிரம்மாண்ட கோவில் கட்டுமானப்பணி சுமார் 300 கோடி செலவில் அமைக்கப்பட இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயமாக மக்களிடையே பார்க்கப்படுகிறது.