மீளவே முடியாத துயரத்தில் இருந்து கூட மீண்டு வரமுடியும் வாராஹி அம்மனை இப்படி வழிபட்டு வந்தால் போதும் !!

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நாம் செய்த கர்ம வினைகளால், சில சமயங்களில் மீள முடியாத கஷ்டங்களில் சிக்கிக் கொள்கின்றோம். கஷ்டம் வந்துவிட்டது. சமாளிக்கவே முடியாத சூழ்நிலை. என்ன செய்வது? எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வெளியே வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கும். இப்படிப்பட்ட இக்கட்டான, துயரமான, சமயத்தில் வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தீராத துயரங்களுக்கு உடனடியாக தீர்வு தரும் வாராஹி அம்மன், சப்தகன்னியர்களில், ஒருவர். வாராஹி அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு, மனதில் எந்த விதமான கெட்ட சலனமும் இருக்கவே கூடாது. உடல் தூய்மை, மனத்தூய்மையும், மிகவும் முக்கியம். ஆணவ குணம், கர்வம் குணம், பொறாமை குணம், அடுத்தவர்களை இழிவுபடுத்திப் பேசும் குணம் இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் வாராஹி அம்மனை கட்டாயம் வழிபடவே கூடாது.

வழிபடவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. வராஹி அம்மனை மனதார தொடர்ந்து வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாக்கு சக்தி அதிகரித்து விடும். அதாவது, அவர்கள் என்ன சொன்னாலும் அது பலித்துவிடும். அடுத்தவர்களை சபித்தாலும், அது உடனே பலித்துவிடும். இதற்காக, எல்லோரும் வாராஹி அம்மனை வழிபட்டுவிட்டு, நமக்கு இருக்கும் எதிரிகளை நாசமாகப் போக வேண்டும் என்று சொல்லி சாபித்துவிடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். வராகியம்மனின் பக்தர்களாக இருந்தாலும் கூட, நீங்கள் சபித்து ஒருவருடைய குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு, அந்த குடும்பம் கஷ்டப்பட்டால், சாபம் கொடுத்த உங்களை வாராஹி அம்மன் உடனே தண்டித்து விடுவாள் என்பது நிதர்சனமான உண்மை. முடிந்தவரை வராஹி அம்மனை கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றால், அதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய கால சூழ்நிலையில் மன சஞ்சலம் இல்லாமல், அடுத்தவர்களை பார்த்து பொறாமைப் படாமல், கர்வத்தோடு இல்லாமல், வாழ முடியுமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான்!

உங்களால் முழுமையாக நேர்மையாக இருக்க முடியுமென்றால், வாராஹி அம்மனை வீட்டில் வைத்து தாராளமாக வழிபாடு செய்து கொள்ளலாம். சரி துயரத்தில் இருந்து மீள்வதற்கு அம்பாளை நினைத்து எப்படி பூஜை செய்வது? இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர வேண்டும். பூஜை செய்யும் நாட்களில் உங்களுடைய வீடு கட்டாயம் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். உங்களுடைய மனதும், உடலும் சுத்தபத்தமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் வீட்டு பூஜை அறையில், ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, அந்த தீப ஒளியில், வாராஹி அம்மனை மனதார நினைத்து கொண்டு, பிச்சிப்பூ அல்லது செம்பருத்தி பூக்களை வாங்கி வைத்துக் கொண்டு, வாராஹி அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதாவது அந்த தீபத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள். அந்த தீபத்தை அம்மனாக நினைத்து இந்தப் பூக்களால் ‘ஓம் சௌபாக்ய வாராஹியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து பூஜை செய்யுங்கள்.

வராஹி அம்மனுக்கு கல்கண்டு அல்லது சுத்தமான தேன் நெய்வேதியமாக வையுங்கள். கட்டாயமாக உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை அந்த வாராகி அம்மன் ஏற்றுக்கொள்வார். மன பாரம் குறையும். தீராத துயரத்திலிருந்து மீண்டு, விரைவாகவே இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவீர்கள். வீட்டில் இந்த பூஜையை செய்ய முடியவில்லை என்றால், உங்கள் வீட்டின் அருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால், அந்த சன்னிதானத்திற்கு சிவப்பு நிற செம்பருத்தி பூக்களை வாங்கி கொடுத்து, சுத்தமான தேன் கல்கண்டு வாங்கிக் கொடுத்து, உங்களது வழிபாட்டினை தொடர்ந்து செய்து வரலாம். ஆனால் உக்கிர தெய்வமான காளிக்கு கூட மன்னிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. குழந்தை மனம் கொண்ட இந்த வாராஹி தேவி, நீங்கள் தவறு செய்தால் கட்டாயம் உங்களுக்கான தண்டனை கொடுத்தே தீருவாள், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.